இந்த மீராவோடை மக்கள் கொடுத்த வாக்குப் பிச்சையையும் பள்ளிவாயல் தலைவர் பதவியையும் வைத்துக்கொண்டு தன்னை பல இலட்சங்களுக்கு விலை பேசி தனது பொருளாதரத்தையும் சுய இலாபங்களையும் அடைந்து கொள்வதை மிகக்கேவலமான, மானக்கேடான ஒரு விபச்சாரமாகவே நான் கருதுகிறேன் என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான எச்.எச்.எம்.றியாழ் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தி மீராவோடை மேற்கு வட்டாரத்தில் சுயேட்சைக்குழு-1 ஒட்டகச்சின்னத்தில் போட்டியிடும் சகோதரர் பதுர்தீன் ஹாஜி அவர்களை ஆதரித்து கடந்த 27.01.2018ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
அங்கு மேலும் தெரிவிக்கையில்,
எனது துறைசார் வளர்ச்சியில் முன்னேற்றத்தில் நேர்மை, உண்மைத்தன்மை, உளத்தூய்மை போன்ற நற்குணங்கள் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. இவைகளைக் கற்றுத்தந்த மண் இந்த மீராவோடை மண்ணாகும். இவைகளை வளர்ந்து வரும் இளைஞர் சமூகமும் பின் பற்றி நடக்க வேண்டும்.
இப்பிரதேசத்தில் தொண்டு தொற்று நாம் பேணி வரும் விடயம் எமது ஊர்த்தலைமைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற உயரிய பண்பாகும். இதனை இப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் காண முடியாது.
இந்த மீராவோடை மண்ணும் பள்ளிவாயலும் பாடசாலையும் எனக்கும் இப்பிரதேசத்திற்கும் ஒரு கட்டுக்கோப்பையும் ஒழுக்க மாண்பையும் கற்றுத்தந்துள்ளது. இதற்கு இப்பிரதேசத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களான உலமாக்கள், ஆசிரியர்கள் எம்மை நெறிப்படுத்துவதில் பாரிய பங்களிப்பை செய்துள்ளார்கள்.
இந்த பண்பாட்டில் வளர்ந்ததன் காரணமாகவே நான் இன்று தேசிய, சர்வதேச ரீதியில் பல உயர் பதவிகளைப் பெற்றுக்கொள்ள இறைவன் வழியமைத்துள்ளான். இவைகளை வளர்ந்து வரும் இளைஞர் சமூகம் கடைப்பிடிக்கின்ற போது உயர்நிலைகளை அடைந்து கொள்ள முடியும்.
எமக்கு கிடைக்கும் பதவி, பட்டங்கள், அரசியல் அந்தஸ்துகள் போன்ற உலக விடயங்களெல்லாம் சோதனைகளாக மாறும். இந்த சோதனைகளில் நாம் தோல்வி காணும் போது வேதனைகாளாக மாற வாய்ப்புண்டு.
நான் முடிந்தளவு அரசியலை விட்டு தூரமாகிக் கொள்ள முயற்சித்தாலும், இறைவனின் நாட்டம் என்னை அரசியலுக்குள் ஈடுபடுத்தியுள்ளது. இதனூடாக என்னால் முடிந்ததை இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் செய்தாக வேண்டுமெனும் நிர்ப்பந்தம் என் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த மண்ணில் நாம் இவ்வாறான நல்ல விடயங்களைக் கற்றுள்ள போதும், இதே மண்ணில் பிறந்த அரசியல்வாதிகள் இவற்றுக்கு எதிர்மாறாக நடப்பது அதியசமாகவும் இந்த மண்ணுக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, இந்த ஏழை மக்களின் காணிகள் எவ்வாறு கபளீகரம் செய்யப்பட்டுள்ளதென்பது தொடர்பில் நான் கவலையடைகின்றேன். அது மாத்திரமல்லாமல், இப்பிரதேச காணிகளை அடாத்தாகப்பிடித்து துண்டு துண்டாகப் பிரித்து வெளியூரவர்களுக்கு விற்பனை செய்துள்ளதுடன், இதன் மூலம் இந்த பிரதேச ஏழைகளுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளியூரவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள காணிகளினால் இப்பிரதேசத்தில் செயற்கையான முறையில் காணிகளுக்கு விலை அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இப்பிரதேச ஏழை மக்கள் தமக்குத் தேவையான காணிகளைக் கொள்வனவு செய்து கொள்ள முடியாத நிலையும், அதையும் தாண்டி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, மற்றுமொரு அரசியல்வாதி இப்பிரதேச மக்களின் வாக்குகளையும் பள்ளிவாயல் நம்பிக்கையாளர் தலைவர் பதவியையும் பெற்றுக்கொண்டு விலை பேசி தனது சொத்துக்களை அதிகரித்துக் கொள்ளவும் தனது பொருளாதாரத்தை அதிகரித்துக்கொண்டும் உள்ளார். இவரை மக்கள் நன்கு அடையாளம் காண வேண்டும்.
இந்த மீராவோடை மக்கள் கொடுத்த வாக்குப் பிச்சையையும் பள்ளிவாயல் தலைவர் பதவியையும் வைத்துக்கொண்டு தன்னை பல இலட்சங்களுக்கு விலை பேசி தனது பொருளாதரத்தையும் சுய இலாபங்களையும் அடைந்து கொள்வதை மிகக்கேவலமான, மானக்கேடான ஒரு விபச்சாரமாகவே நான் கருதுகிறேன்.
இதன் பின்னணியில் தான் அந்த உள்ளூர் அரசியவாதி முன்னாள் முதலமைச்சரிடம் பதவியையும் வாகனத்தையும் பெற்றுக்கொண்டதுடன், அவரது பதவிக்காலம் முடிந்த பின்னர் என்னிடமும் விலை பேசினார்.
இவ்வாறாக மக்களின் வாக்குகளை விலை பேசித்திரியும் ஊழல்வாதிகளை கட்சிக்குள் சேர்ப்பதிலோ என்னோடு வைத்துக் கொள்வதிலோ எனக்கு எந்த உடன்பாடுமில்லை. அது கைகூடாத நிலையில் எங்கிருந்து வந்தாரோ அங்கே மீண்டும் விலைபேசி பிரதியமைச்சருடன் இணைந்து கொண்டார்.
இவ்வாறு தேர்தல்களைப் பயன்படுத்தி தனக்குள்ள மக்கள் செல்வாக்கைக் காட்டி தான் உழைப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். இவ்வாறு சமூகத்தை விற்று ஹராமான சம்பாத்தியத்தில் வாழாமல் சொந்தமாக தொழில் செய்து வாழப்பழகிக்கொள்ளுங்கள் என அன்பாக அறிவுரை சொல்லிக் கொள்கிறேன்.
மக்களே, இவ்வாறான சமூகத்துரோகிகளை கட்டாயம் இனம் காண வேண்டும். நீங்கள் வழங்கும் பொன்னான வாக்குரிமையைப் பயன்படுத்தி இனி மேலும் தனது பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொண்டு சுகபோகங்களுடன் வாழ உங்கள் பொன்னான வாக்குகளை வழங்காதீர்கள். இவ்வாறான சமூகத்துரோகிகள், துஸ்டர்கள் விடயத்தில் நீங்கள் அவதானமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.
அது மாத்திரமல்லாமல், இவ்வாறானவர்களுக்கு வழிகாட்டிய இப்பிரதேச அரசியல்வாதிகளும் இதே பாணியில் தமது அரசியலை முன்னெடுப்பதும் எமக்கும் எமது பிரதேசத்திற்கும் அவப்பெயரை பிரதேச ரீதியிலும், தேசிய ரீதியிலும் ஏற்படுத்தியுள்ளதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இந்த இருவரும் இந்த ஊருக்கே சாபக்கேடாகும். இவ்வாறான கட்டுக்கோப்புள்ள எமது பிரதேசத்தில் இவ்வாறான கட்டுப்பாடில்லாத தலைமைத்துவங்கள் இருப்பதை நாம் இனி மேலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான சரியான பாடத்தை இப்பிரதேச மக்களாகிய நீங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் பத்தாம் திகதி இடம்பெறவுள்ள பிரதேச சபைத்தேர்தலில் நல்ல பாடத்தை கற்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த காலங்களில் சரியான தலைமைத்துவங்கள் எமது பிரதேசத்தில் இல்லாமையால் தலைவரினாலோ கட்சியினாலோ இப்பிரதேசத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலை காணப்பட்டது. இதன் காரணமாக தலைவர் மீதும் கட்சி மீதும் பாரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்தது.
கடந்த காலங்களில் இருந்து வந்த இவ்வாறான குற்றச்சாட்டுக்களை நாம் மாற்றியமைத்துள்ளோம். கடந்த இரண்டரை வருட காலத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான அபிவிருத்திப்பணிகளை இப்பிரதேசத்திற்கு தலைவரிடமிருந்து கொண்டு வந்துள்ளோம்.
குறிப்பாக, இப்பிரதேச மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதியான பாரிய குடிநீர்த்திட்டத்தை நாம் கொண்டு வந்துள்ளோம். இதனைச் சாதாரண விடயமாக நீங்கள் எண்ணி விடக்கூடாது.
பொலன்னறுவை, அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் பாரிய தண்ணீர் தட்டுப்பாடும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவிலும் உள்ள நிலையில், எமது பிரதேசத்தின் குடிநீர்த்தேவைக்கான நிதியினைக் கொண்டு வருவதென்பது பாரிய சவால் நிறைந்த விடயமென்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த குடிநீரை இப்பிரதேச மக்களுக்கு வழங்க வேண்டுமென்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவற்றுடன் நானும் தலைவரும் பல சுற்றுப்பேச்சுவார்த்தைகளை நாம் மேற்கொண்டே சுமார் இதனை 1350 கோடி ரூபா பெறுமதியான குடிநீர்த்திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம்.
குறிப்பாக, இப்பிரதேசத்தில் திட்டமிட்ட வகையில் வீதி அபிவிருத்திகளை மேற்கொள்ளாது, மிகக்குறைந்த நிதியில் தார் இடப்பட்டு பாதைகள் இடப்படுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் நாம் அதிக சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
இவைகளைக் கருத்திற்கொண்டு நாம் கடந்தாண்டு சுமார் நூறு கோடி பெறுமதியான அபிவிருத்திகளை திட்டமிட்ட வகையில் இப்பிரதேசத்தில் மேற்கொண்டுள்ளோம். பொருத்தமான பகுதிகளுக்கு காபட், கொங்கறீட் வீதிகள், வெள்ளத்தடுப்பு அணைக்கட்டுகளை அமைத்துள்ளோம்.
இப்பணிகளை கடந்தாண்டு முதல் மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாண்டும் இதன் பணிகள் தொடர்வதுடன், அடுத்தாண்டும் மேலதிக நிதிகளைப் பெற்று முன்னெடுக்கப்படுமென்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதே நேரம் இவ்வாண்டு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு சுமார் 598 மில்லியன் ரூபாய்களை தலைவரிடம்கோரியுள்ளேன். இதில் 250 மில்லியன் ரூபாய்க்கான அனுமதியை தலைவர் உடனடியாக வழங்கியுள்ளார். அதற்காக எனது சார்பாகவும் இப்பிரதேச மக்கள் சார்பாகவும் தலைவருக்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்தோடு, எமது பிரதேசத்தில் முக்கிய தேவையாகக் காணப்படுகின்ற ஆற்றோர அணைக்கட்டு, மீராவோடை சந்தைக் கட்டடத்தொகுதி நிர்மாணம், மீராவோடைவைத்தியசாலை அபிவிருத்தி போன்றவைகளையும் நாம் இவ்வாண்டில் மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ளோம்.
வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் சுகாரதாரப் பிரதியமைச்சர் பைசல் காஸீமுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு, செப்பனிடப்படாத உள்ளூர் வீதிகள், மீராவோடை பிரதான வீதி என்பன அபிவிருத்தி செய்வதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவைகளும் விரைவில் அபிவிருத்தி காணும்.
இப்பிரதேச விவசாய, நன்னீர் மீன்பிடி போன்றவற்றையும் வளப்படுத்த வேண்டிய தேவையும் எமக்குள்ளதுடன், நாம் இழந்துள்ள எமது காணிகளை மீட்டெடுக்க வேண்டிய தேவையும் நம்முன்னுள்ள பாரிய கடமையாகும்.
இவைகளை நாம் மேற்கொள்ள இப்பிரதேச சபைத்தேர்தலில் பிரதேச சபையும் குறிப்பாக மீராவோடை இரு வட்டாரங்களையும் மாஞ்சோலை-பதுறியா வட்டாரத்தியும் நாம் கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தேவையுள்ளது,
இதனைக் கைப்பற்றுவதனூடாகவே நாம் திட்டமிட்டுள்ள அபிவிருத்திகளையும் நாம் இழந்துள்ள காணிகளையும் இலகுவாக மீட்டெடுக்க முடியும்.
அத்துடன், இப்பிரதேசத்தில் காணப்படும் வறுமையைப் போக்கும் வகையிலும் பொருளாதார மேம்பாட்டைக் கொண்டு வரும் நோக்கிலும் வேலைவாய்ப்பு பிரச்சினையை இல்லாதொழித்து, அவற்றுக்கான தீர்வுகளையும் நாம் காண வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களையும் நாம் வகுத்துச் செயற்பட வேண்டிய அவசியமும் எம்முன்னே உள்ளதை நான் நன்குணர்ந்துள்ளேன்.
அதற்கான ஆணையை இப்பிரதேச சபைத்தேர்தலில் எனக்கு வழங்குவீர்கள் என்ற பாரிய நம்பிக்கை இப்பிரதேச மக்களாகிய உங்கள் மீது எனக்குள்ளது.
ஆகவே, மீராவோடை மேற்கு வட்டாரத்தில் போட்டியிடும் சகோதரர் பதுர்தீன் ஹாஜி அவர்களையும், கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் அன்வர் ஆசிரியர் அவர்களையும் மாஞ்சோலை-பதுறியா வட்டாரத்தில் போட்டியிடும் கபீர் ஹாஜி அவர்களையும் வெற்றி பெறச் செய்து தாருங்கள் என கேட்டுக்கொள்வதோடு, அவர்களின் வெற்றிக்காக பிரார்த்தனை புரியுமாறும் கேட்டுக்கொள்கிறேன் என தனது நீண்ட உரையில் கல்குடாத்தொகுதியின் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளரும் கணக்கறிஞருமான எச்.எச்.எம்.றியாழ் கேட்டுக் கொண்டார்.
தகவல்:- ஊடகப் பிரிவு