முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்கு தொடரப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படாமை குறித்து மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடருமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் கீழ் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குத் தொடருமாறும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு 34 பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, பிரியங்கர ஜயரட்ன, சரத்குமார குணரட்ன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.