பிணைமுறி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைச் சுட்டிக் காட்டி, பிரதமர் பதவி விலக வேண்டும் அல்லது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் விலக்கப்படுவார் என்று ‘பிவித்துரு ஹெல உருமய’ கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கலந்துகொண்டார்.
“பிணைமுறி வழங்கலில் மத்திய வங்கி முன்னாள் தலைவர் அர்ஜுன மகேந்திரன் தலையிடவில்லை என 2015ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியிருப்பதாக அறிக்கையின் 854ஆம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இது உண்மைக்குப் புறம்பானது.
“இவ்வாறான தவறான தகவல்களைத் தெரிவித்து பாராளுமன்றை பிழையாக வழிநடத்திச் சென்றிருக்கிறார் பிரதமர். இதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்று அவர் பதவி விலக வேண்டும். இல்லையேல், அவருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து பதவி விலகச் செய்வோம்.
“அவருக்கெதிரான பிரேரணையைக் கொண்டுவருவதற்கு, மேற்படி அறிக்கையில் அவர் தெரிவித்திருக்கும் கூற்றே போதுமானது.”
இவ்வாறு உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.