திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தொகுதியில் அமைந்துள்ள பிரதேசசபை, நகரசபை ஆகிய இரண்டு சபைகளை உள்ளடக்கிய சுமார் 85 ஆயிரம் மக்கள் வாழுகின்ற பிரதேசம் கிண்ணியா ஆகும்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் கிராமங்களுடன் ஒப்பிடுகையில் கிண்ணியாவில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் எதுவும் அங்கு இல்லை. சுருக்கமாக கூறுவதென்றால் நகரசபையின் அதிகாரங்களும், சேவைகளும் சிறிதளவுகூட அம்மக்களை சென்றடையவில்லை.
கிண்ணியாவின் நகரசபைக்குட்பட்ட பைசல் நகர், இடிமண், புதியநகர் ஆகிய பிரதேசங்கள் மற்றும் அதனை ஊடறுத்து செல்லும் இடிமண் ஆறு, மாஞ்சோலை ஆறு போன்றவற்றின் கரையோரங்கள் இருக்கின்ற அசிங்கமான நிலையினை அவதானிக்கும்போது அங்கு நகரசபை தூங்கி கிடக்கின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து இவ்வூர் தொடர்ச்சியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தினை கொண்டுள்ளது. இன்று கிண்ணியாவில் மட்டும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள். ஆனால் அம்பாறை மாவட்டத்தின் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத முஸ்லிம் கிராமங்களுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்தியில் பல தசாப்தங்கள் கிண்ணியா பிரதேசம் பின்னோக்கி காணப்படுகின்றது.
அத்துடன் இப்பிரதேசத்தில் மறைந்த ஏ.எல். அப்துல் மஜீத், எம்.ஈ.எச். மஹ்ரூப் ஆகியோர் நீண்ட காலங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தும் குறிப்பிட்டு கூறுமளவுக்கு எந்தவொரு அபிவிருத்தி பணிகளையும் அவர்கள் செய்ததில்லை.
இவர்களது வாரிசுகளான நஜீப் ஏ மஜீத் பாராளுமன்ற உறுப்பினராகவும், கிழக்கு முதலமைச்சராகவும் இருந்தார். அதுபோல் அப்துல்லாஹ் மஹ்ரூப், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் இன்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார்கள். ஆனால் இந்த வாரிசுகளால் அங்குள்ள மக்களின் எந்தவித அடிப்படை அபிவிருத்திகளும் செய்து கொடுக்கப்படவில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக 2௦௦1 ஆம் ஆண்டு எம்.எஸ். தௌபீக் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதிலிருந்து இன்று வரைக்கும் கிண்ணியா பிரதேசத்துக்கும், திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் வாழும் சுமார் 3௦ கிராமங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எவரும் செய்திடாதவகையில் பல கோடி ரூபாய் நிதியில் ஏராளமான அபிவிருத்தி வேலைகளை செய்துள்ளார்.
ஆனாலும் எம்.எஸ். ஒரு சாமான்ய மகன் என்பதனால், தங்களுக்கு வேலை செய்யக்கூடிய சாமான்ய மகனைவிட ஒன்றும் செய்யாவிட்டாலும் பருவாயில்லை. பெயருக்காவது மேட்டுக்குடி வர்க்கத்தினர் தங்களை ஆழவேண்டும் என்ற மனோநிலை அங்குள்ள சில பாமர மக்களிடம் காணப்படுகின்றது.
இலங்கை முஸ்லிம்களிடம் காணப்பட்ட மேட்டுக்குடி வர்க்க அரசியலுக்கு முடிவுரை வழங்கிவிட்டு, சாதாரண பாமர மக்கள் மூலமாக சிறந்த தலைமையை வழங்க முடியும் என்ற நியதியை முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கி தந்துள்ளது. ஆனால் கிண்ணியாவில் மட்டும் மேட்டுக்குடி வர்க்க அரசியலை அங்குள்ள அப்பாவி மக்களிடமிருந்து ஒழிப்பதற்கு போராடவேண்டி உள்ளது.
அங்குள்ள அப்பாவி மக்களில் சிலர் மஹ்ரூப், மஜீத் ஆகிய பெயர்களுக்காக தங்களது வாக்குகளை வழங்குவதுடன், தேர்தல் காலங்களில் பிரதேச வாதங்களை உருவாக்குகின்ற இவ்வாறானவர்களை ஆதரிக்கின்ற நிலை காணப்படுகின்றது.
எனவே மக்களுக்கு எதுவும் செய்யாமல் கொழும்பில் இருந்துகொண்டு அறிக்கைகள் விட்டுக்கொண்டு, எம்.எஸ் செய்கின்ற வேலைகளுக்கு ஊடகங்கள் மூலமாக பெயர் எடுக்க முற்படுகின்ற மேட்டுக்குடி அரசியல்வாதிகளை நிராகரித்துவிட்டு, எமது முஸ்லிம் சமூகத்தின் தேசிய அரசியல் இயக்கமான முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். அதன்மூலம்தான் கிண்ணியா பிரதேசத்தை கட்டியெழுப்ப முடியும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
சாய்ந்தமருது