“கல்முனை – சாய்ந்தமருது மாநகரசபை” என்ற சொல் பதத்துடன் அதன் புதிய கட்டடத்தினை சாய்ந்தமருதில் நிறுவினால் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியுமா ?
சாய்ந்தமருதுக்கான தனியான ஓர் உள்ளூராட்சிமன்றம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோசம் பல வருடங்களுக்கு முன்பு “சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம்” என்ற அமைப்பினால் முன்வைக்கப்பட்டது.
காலப்போக்கில் சாய்ந்தமருது பள்ளிவாசலின் தலையீடு காரணமாக உள்ளூராட்சிமன்ற கோரிக்கைகள் வலுவடைந்து அது போராட்ட வடிவமாக மாறியதுடன், இன்று அதனை யாராலும் கட்டுப்படுத்த முடியாத உச்ச நிலைமைக்கு வந்துள்ளது.
தாங்கள் எந்தவித விட்டுக்கொடுப்புக்களும் இன்றி பிரிந்தே ஆகவேண்டும் என்று சாய்ந்தமருது தரப்பினர்கள் தொடர்ந்து களப்போராட்டம் நடாத்துகின்ற அதேவேளை, 19 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்களை கொண்ட சாய்ந்தமருது பிரதேசம் தனியாக பிரிந்தால் கல்முனை மாநகரத்தில் முஸ்லிம்களின் செறிவு குறைந்து அதிகாரம் கைமாறி, அது தமிழ் சமூகத்திடம் சென்றுவிடும் என்ற அச்சம் காரணமாக, எந்த காரணம் கொண்டும் சாய்ந்தமருதுக்கு தனியாக சபை வழங்க அனுமதிக்கமாட்டோம். என்ற நிலையில் கல்முனைக்குடி தரப்பினர்கள் தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினார்கள்.
இந்த நிலைமையில் இரு ஊரவர்களையும் ஒரே நேரத்தில் திருப்தி படுத்தமுடியாத காரனத்தினால் சாய்ந்தமருதுக்கு தன்னால் வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிறைவேற்ற முடியாத இக்கட்டான நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இருந்து வருகின்றது.
தனியான உள்ளூராட்சிமன்றம் வழங்கவில்லை என்ற ஆத்திரத்தினால் போராட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிவாசல் தலைமையிலான சாய்ந்தமருது தரப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினரையும் சாய்ந்தமருதினுள் அரசியல் செய்ய விடமாட்டோம் என்று வரிந்துகட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
அதுபோல் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சிமன்றம் வழங்கினால், முஸ்லிம் காங்கிரஸ் தலைவரையும், இப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினரையும் கல்முனைக்குடியினுள் அரசியல் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அவ்வப்போது அச்சுறுத்தல்களை கல்முனைக்குடி தரப்பினர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை என்ன முடிவினை எடுப்பது? எந்த தரப்பினர்களை திருப்தி படுத்துவது ? ஒருவரை திருப்தி படுத்தினால் மற்ற தரப்பினரை இழக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுவதனால், இரண்டு தரப்பினர்களையும் ஒரே நேர்கோட்டில் திருப்தி படுத்தக்கூடிய ஏதாவது தீர்வினை ஏற்படுத்த முடியுமா ?
இந்த நிலைமையில் “தெகிவள – கல்கிஸ்ஸ மாநகரசபை” இருப்பதுபோன்று இங்கே “கல்முனை – சாய்ந்தமருது மாநகரசபை” என்ற சொல் பதத்துடன், அம்மாநகர சபைக்கான கட்டடத்தினை சாய்ந்தமருதில் அல்லது இரண்டு ஊருக்கும் எல்லையாக உள்ள வயல்பகுதியில் நிறுவினால் இந்த இரண்டு ஊரவர்களையும் திருப்திப்படுத்துவதன் மூலம், தீர்க்க முடியாதுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணமுடியுமா ?
எனவே நீண்டுசெல்கின்ற இந்த பிரச்சினையை இரு தரப்பிலுமுள்ள பள்ளிவாசல் நிருவாகத்தினர்கள் ஒன்று சேர்ந்து அரசியலுக்கு அப்பால் இதய சுத்தியுடன் இஸ்லாம் எங்களுக்கு காட்டித்தந்த வழிமுறைகளுக்கு அமைவாக ஒரு தீர்வினை காணவேண்டும்.
அதன் பின்பு அந்த தீர்வினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரிடம் முன்வைக்க வேண்டும். என்பதுதான் நடுநிலையாக சிந்திப்பவர்களின் எதிர்பார்ப்பாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
சாய்ந்தமருது