Top News

உள்ளுராட்சிசபையே இலக்கு! உள்நோக்கமில்லை!! ஊடக சந்திப்பில் எம்.எச்.எம்.நௌபர்




சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சிசபையை பெறும் தூய்மையான நோக்கத்தின் அடிப்படையிலேயே தேர்தல் களத்தில் குதித்துள்ளோம் என்றும் சிலர் கூறித்திரிவதுபோன்று உள்நோக்கமோ அல்லது எவரதும் அஜந்தாக்களுக்குமோ தாங்கள் செயற்ப்படவில்லை என்றும் மக்களின் பெரும்பான்மை வாக்குப்பலத்துடன் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் சாய்ந்தமருதிலுள்ள வட்டாரங்களையும் வெற்றி கொண்டு போணஸ் ஆசனத்துடன் பொதுமக்களின் ஆணையைப் பெற்று  தேர்தல் முடிந்தாலும் மக்கள் பணிமனை மூலம் சாய்ந்தமருதிற்கான தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

இவ்வாறு சாய்ந்தமருது மக்கள் பணிமனை மூலம் கல்முனை மாநகரசபைத் தேர்தலில் தோடம்பழச்சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழுவின் தலைவர் எம்.எச்.எம்.நௌபர் தெரிவித்தார்.

சாய்ந்தமருது புளு சேன்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய எம்.எச்.எம்.நௌபர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்
சாய்ந்தமருது மக்கள் மிக நீண்ட நாட்களாக தம்மை தாமே ஆள வேண்டும் என்பதற்காக தனியான உள்ளுராட்சி சபை கோரிக்கையை முன்னெடுத்து வந்துள்ளனர். பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றித்தருவோம் என பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வாக்குறுதிகளை வழங்கி விட்டு தமது சுயநல அரசியல் இலாபங்களுக்காக மக்களை ஏமாற்றி பொய் வாக்குறுதிகளை வழங்கியதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் இறுதியில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிடம் தமது போராட்டத்தை கையளித்தனர்.

பொது மக்கள் தமது அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளையும் எந்தவொரு அரசியல்வாதியையும் இனியும் நம்பப்போவதில்லை என்ற தோறணையில் நவம்பர் புரட்சியொன்றினை ஏற்படுத்தி வீதிமறியல் போராட்டம் கடையடைப்பு ஹர்த்தால் மாட்டுவண்டி போராட்டம் என பல்வேறு வடிவங்களில் தமது போராட்டவடிவத்தினை மாற்றிச் செல்லும் சந்தர்ப்பத்திலேயே இந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலை சாய்ந்தமருது மக்கள் முழுமையாக பகிஸ்கரிக்க திட்டமிட்டிருந்த போதிலும் இது ஏனைய அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதற்காக ஒட்டுமொத்த சாய்ந்தமருது மக்களும் சுயேட்சைக்குழுவில் எந்தவிதமான அரசியல் சாயங்களும் புசப்படாத பணத்திற்கும் பதவிக்கும் சோரம் போகாத வேட்பாளர்களை நிறுத்தி பதவிக்கு ஆசைப்படாமல் பொதுசன அபிப்பிராயம் பெறும் நோக்கத்திலேயே இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.

சாய்ந்தமருது மக்கள் ஒட்டுமொத்தமாக தொடர்ச்சியாக இப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இதைப்பற்றி கவலைப்படாத அரசியல் தலைமைகள் தேர்தலுக்காக வாக்கு கேட்க சாய்ந்தமருது மக்களிடம் மண்டியிடுவது எவ்வளவு கேவலமான விடயமாகும் என்றும் அது மட்டுமல்லாது இறக்காமத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஓரிரு தினங்களுக்குள் சாய்ந்தமருது –மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையை கலைத்து புதிய இடைக்கால சபையை ஏற்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கூறிவிட்டு அடுத்த இரு நாட்களுக்குள் வக்புசபை சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை கலைக்கப்பட்டுள்ளதாக கடிதம் மூலம் அறிவித்திருப்பது எவ்வளவு புத்திகெட்ட தன்மையை எடுத்துகாட்டுகின்றது என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையை கலைத்து விட்டால் சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சிமன்ற போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்து விட்டு மக்களை ஏமாற்றி மீண்டுமொருமுறை வாக்குகளை சூறையாடி ஆட்சிப்பீடமேறலாம்  என்று பகற்கனவு கண்டவர்களுக்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி சாய்ந்தமருது மக்கள் புகட்டப்போகும் பாடம் அவர்களது அரசியல் வாழ்க்கையில் ஒரு கறுப்புப் புள்ளியாகவே மாறவுள்ளது என்றும்
இன்று சாய்ந்தமருதின் அரசியலையும் கல்முனை மாநகரசபைத் தேர்தலையும் இலங்கையிலுள்ள சகல அரசியல் அவதானிகளும் ஆர்வலர்களும் சர்வதேசமும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றது என்றும்  அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடம் புகட்டுவதற்கு சாய்ந்தமருது மக்களின் போராட்டத்தையும் அதன்வடிவத்தையும் மக்களின் ஒட்டுமொத்த ஒற்றுமையையும் முன் உதாரணமாக எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு பல ஊர் மக்களும் திட்டமிட்டுள்ளர் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் மக்கள் மத்தியில் பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களின் வாக்குகளைப் பெற்று அபிவிருத்தி எனும் மாயையை காட்டி ஆட்சிப்பீடமேறி தமது சுகபோகவாழ்க்கையை முன்னெடுத்துச் செல்லும் அரசியல்வாதிகளுக்கு தகுந்த பாடத்தினை இத்தேர்தலில் மக்கள் புகட்டவேண்டும். என்றும் கேட்டுக்கொண்டார்.

 (எம்.ஐ.எம்.அஸ்ஹர் எம்.வை.அமீர் யு.கே.காலித்தீன் எம்.சஹாப்தீன்)
Previous Post Next Post