எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலை அடுத்து நிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் கடுமையாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவந்து நாட்டின் பொருளாதாரத்தை முகாமைத்துவப்படுத்த வேண்டும் என்பதே அங்கிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அதிக அங்கத்தவர்களின் கருத்தாக இருந்துள்ளது.
எனினும், நிதி அமைச்சை ஜனாதிபதியின் கீழ் கொண்டுவர முடியாமல் போனால், அவ்வமைச்சுக்கு ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தேர்தலின் பின்னர் அரசாங்கம் மாறுவதில்லை எனவும், அரசாங்கத்தினுள் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிலர் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வார்கள் எனவும் சிலர் அரசிலிருந்து விலகிச்செல்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.