நாட்டில் தற்போது 18 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாகவும், இவர்களுக்கு முற்று முழுவதுமான வசதியுள்ள சிறுவர் பூங்காக்களை நாடு முழுவதும் இவ்வருட இறுதிக்குள் அமைக்க, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பு மா நகர எல்லைக்குள் இயங்கும் சிறுவர் பூங்காக்களை மேலும் அபிருத்தி செய்யும் நோக்கில், அமைச்சர் நேற்று முன் தினம் அமைச்சு அதிகாரிகளுடன் சென்று சிறுவர் பூங்காக்களைப் பார்வையிட்டார்.
கொம்பனித்தெரு, மாளிகாவத்தை, கிறேண்ட்பாஸ் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காக்கள் தொடர்பில் முதற்கட்டமாக அமைச்சரின் அவதானம் செலுத்தப்பட்டது.இராஜகிரியவில் மாற்றுத் திறனாளிகளாக உள்ள சிறார்களுக்காக தற்போது ஆரம்பமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் சிறுவர் பூங்காவின் வேலைத் திட்டப் பணிகளைத் துரிதமாக முடிக்குமாறும், அமைச்சர் இதன்போது இது தொடர்பிலான அதிகாரிகளை விசேடமாகப் பணித்தார்.
அமைச்சர் இங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போது மேலும் குறிப்பிட்டதாவது,
நாடு முழுவதிலுமுள்ள சிறுவர் பூங்காக்கள், இன்று சிறந்த நிலையில் உள்ள சிறுவர்களுக்காக மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குடும்பத்துடன் வந்து ஆடிப்பாடி மகிழ்ச்சிகரமாக விளையாடி நாளைக் கழிக்கின்றனர்.
ஆனால், மாற்றுத் திறனாளிகளாக இருக்கும் சிறார்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்கள் இங்கு வருகை தந்தாலும், இவ்வாறான விளையாட்டு உபகரணங்களில் விளையாட முடியாமல், மிகவும் கவலையோடு அச்சிறுவர்கள் வீடு திரும்புகின்றனர். இந்நிலைமையினைக் கருத்தில் கொண்டே நான், அச்சிறார்களுக்கு ஏற்றவகையில், இலகுவான, வசதியான விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு சிறுவர் பூங்காக்களை அமைத்துக் கொடுக்கத் தீர்மானித்துள்ளேன்.
இந்நிலைமை, நமது நாட்டிலிருந்து மாறவேண்டும் என்பதாலும், மாற்றுத் திறனாளியாகவுள்ள சிறார்களுக்கும் இத்தகைய வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும் என்ற நன் நோக்காகக் கொண்டுமே, இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளேன். இத்திட்டம், இவ்வருடம் முடிவடைவதற்குள் நாட்டின் அனைத்து பாகங்களிலும் பூர்த்தி செய்யப்பட்டு அமுல்படுத்தப்படும் என்றார்.