தேயிலை மீள் ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின் கீர்த்திக்கு தற்போது சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் தேயிலைக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றினால் தேயிலை மீள் ஏற்றுமதியை முற்றாகத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உருளைக்கிழங்கு விதைக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியம் நூறு சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று பதுளை நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் பொருளாதார முகாமைத்துவத்திற்கான பொறுப்பினை நான் இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியிடம் கையளித்திருந்தேன். ஆனால் தற்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ள நேர்ந்துள்ள அழுத்தங்களைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அவற்றை என்னால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய பொருளாதார சபையினூடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளேன்.
மேலும் நாட்டின் விவசாய பூமியான இந்த மண்ணின் மக்களுக்கு தகுந்த நிவாரணங்கள் வழங்கப்படவில்லை. உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு உருளைக்கிழங்கு விதைக்கு வழங்கப்படும் 50 சதவீத மானியம் நூறு சதவீதமாக அதிகரிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன்.
அத்துடன் தேயிலை மீள் ஏற்றுமதி காரணமாக எமது நாட்டுத் தேயிலையின் கீர்த்திக்கு தற்போது சர்வதேசத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் தேயிலைக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பனவற்றினால் தேயிலை மீள் ஏற்றுமதியை முற்றாகத் தடை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அதேபோல் மிளகு மீள் ஏற்றுமதியினால் மிளகின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், தேசிய மிளகு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு மிளகு மீள் ஏற்றுமதியையும் எதிர்காலத்தில் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வெவ்வேறு அரசியல் கட்சிகள் எத்தகைய கருத்துக்களைக் கூறினாலும் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகளற்ற நாட்டினைக் கட்டியெழுப்புவதற்கான நிகழ்ச்சி நிரல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் மாத்திரமே காணப்படுகின்றது. நாட்டுக்குத் தேவையான மாற்றத்திற்கான பாதையில் சகலரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்க்க வேண்டும். மேலும் ஊடகங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மக்கள் இவற்றை கவனித்து நடுநிலையான முடிவுகளை எடுத்திருப்பீர்கள். இந்த நாட்டின் சுதந்திரம், ஜனநாயகம் என்னால் வழங்கப்பட்டுள்ளன.
நான் என்ன செய்தேன் என சிலர் கேட்கின்றனர். 2015 ஆம் ஆண்டு தெரிவாகி ஜனாதிபதியான நிலையில் இந்த நாடு இருந்த நிலைமையை சிந்தித்து பாருங்கள். அந்த யுகத்தில் அபிவிருத்தியின் அழகு, யுத்த வெற்றி பற்றி கருதியிருப்பீர்கள், நாடு சரியான பாதையில் பயணிக்கின்றது என மக்கள் அனைவரும் நம்பியிருப்பார்கள். ஆனால் தவறுகளே அதிகமாக இடம்பெற்றன.
நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஆதரவாளருக்கோ துரோகி அல்ல. நான் நாட்டில் ஊழலை ஒழிக்கவே முயற்சித்து வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த நாட்டில் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதுவரையில் எமது நாட்டுக்காக உதவ எந்தவொரு நாடும் இருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் குறிப்பிட்ட சில நாடுகள் மட்டுமே எமக்கு ஆதரவாக இருந்தன.
உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஆகியன அப்போதே எமது உறவினை முறித்துக்கொண்டன. எம்மை கைவிட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம் எடுத்தது. எமக்கு சர்வதேச அச்சுறுத்தல் என பல விடயங்களை காண்பித்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக் குரல்கள் எதுவுமே எமக்குக் கேட்கவில்லை. சர்வதேசத்தின் அனைத்து அச்சுறுத்தலையும் நான் எதிர்த்து வெற்றி கொண்டேன்.
சர்வதேச நாடுகள் அனைத்துமே இன்று என்னுடன் இலங்கையில் இதுவரையில் இல்லாத ஒரு அரசாங்கம், உலகத்தில வேறு எங்கும் இல்லாத ஒரு அரசாங்கம் எனது அரசாங்கம். இந்த அரசாங்கத்தில் மக்களின் ஜனநாயகம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் என அனைத்தையும் பாதுகாப்பேன் என வாக்குறுதி வழங்கினேன். அதற்காக சர்வதேசம் என்னை நம்பியது. எனக்கு ஒத்துழைப்பு வழங்கியது.
மத்திய வங்கி பிணைமுறி குறித்தே இன்று அதிகம் கதைக்கின்றனர். இதில் குற்றவாளிகள் யார் என்பதை ஆணைக்குழுவினர் அடையாளம் காட்டியுள்ளனர். இதில் இந்த ஆட்சியில் மட்டும் அல்ல கடந்த ஆட்சியில் இடம்பெற்ற விடயங்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதற்கமைய நான் அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுப்பேன். அத்துடன் எமது நாட்டினை அபிவிருத்தி அடைய செய்வதில் பாரிய தடைகள் உள்ளன. இவை எமது வளங்கள் இல்லாமைக்கான தடை அல்ல, அரசியல் வாதிகள் மட்டுமே இதற்கு தடையாக உள்ளனர்.
ஊழல் நிறைந்த அரசியலை முடிவுக்கு கொண்டுவந்தால் மட்டுமே தீர்வு காண முடியும். இன்று எனது தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கி செல்கின்றது. இன்று எமது நாட்டின் வாழ்வாதார சிக்கல்கள் நிறைந்து காணப்படுகின்றது. மிகப்பெரிய சர்வதேச கடன் நெருக்கடியுடன் எமது ரூபாவின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதுடன் எமது மக்களுக்கு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர் கொள்ளவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் முடிந்த அளவு மக்களுக்கு நிவாரணம் வழங்கவே நான் முயற்சித்து வருகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.