மயிலுக்கு இருக்கின்ற ஆதரவின் பீதியில்தான் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதாக அறிக்கை விடுகின்றனர். மயிலுக்கு அடிக்கவேண்டும் என்றால், வன்னி மாவட்டத்துக்குத்தான் முதலில் தேசியப்பட்டியல் கொடுத்திருக்கவேண்டும். ஆனால், வன்னிக்கு தேசியப்பட்டியல் கொடுக்காமலேயே மயிலுக்கு பாடம் புகட்டுவேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை மண்ணுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதை கொண்டாடும் முகமாக (28.01.2018) மு.கா. ஸ்தாகபச் செயலளார் எஸ்.எம்.ஏ. கபூர் தலைமையில் நடைபெற்ற மகுடம் சூடும் மகிழ்ச்சிப் பெருவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
ஆனால், தேர்தலின் பின்னர் வன்னி மாவட்டத்துக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்படலாம். தேர்தலுக்கு முன்னர் எம்.பி. பதவியை கொடுத்துத்தான் வன்னியில் மயிலை மடக்கவேண்டும் என்ற அரசியல் வங்குரோத்து நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை. மயில்காரர்கள் இப்படியான பித்தலாட்டக் கதைகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நசீர் சிபார்சு செய்யப்பட்ட நிலையில், அவரின் பெயர் பட்டியலில் இல்லையென்றும், வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் ஒரு சிலருக்கு பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், பெப்ரவரி 8ஆம் திகதி நசீர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற ஆசனத்தின் பெறுமானம் கனதியானது. தேர்தலின் பின்னர் ஆட்சி பிசுபிசுத்துப் போகலாம். இந்த சூழ்நிலையில், பாராளுமன்ற குழுவின் ஒற்றுமை என்பது மிக முக்கியமானது. ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இருக்கின்ற ஆசன வித்தியாசம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். இதனை ஒருசேர சமூக முன்னேற்றத்துக்காக பயன்படுத்த வேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸிடம் தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பெற்றுக்கொண்ட பலர் கட்சிக்கு துரோகமிழைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில், தேசியப்பட்டியல் ஆசனத்தை சூழ்நிலைக்கேற்ப வழங்குவதற்காக நம்பிக்கையானவர்களிடம் தற்காலிகமாக கொடுத்து வைத்திருந்தோம். இப்போது தேசியப்பட்டியல் ஏன் தாமதமாக வழங்கப்பட்டது என்று பலரும் கேட்கின்றனர்.
கட்சியைப் பாதுகாப்பதற்காக தேசியப்பட்டியலை கொடுப்போமா என்றும் நாங்கள் யோசித்தோம். தவணை முறையில் கொடுப்பதற்கு இணக்கம் கண்டுவிட்டு, ஆரத்தழுவி சென்றவர் பின்னர் வரவில்லை. மகாவித்துவான் தடுத்த காரணத்தினால் அவர் இப்போது கட்சியை விட்டும் சென்றுவிட்டார். இப்படியான சூழ்நிலையில்தான் நாங்கள் தேசியப்பட்டியலை வழங்குவதை தற்காலிகமாக தாமதப்படுத்தி வைத்திருந்தோம்.
இனி, யாருக்கும் தேசியப்பட்டியலை வழங்குவதாக நான் வாக்குறுதி வழங்கமாட்டேன். இனி அது இரகசியமாகவே பேணப்படும். சரியான நேரத்தில், சரியான ஊருக்கு, சரியான நபருக்கு கொடுக்கப்படும். ஏற்கனவே வாக்குறுயளிக்கப்பட்ட இடங்களுக்கு வழங்கப்படும். இனி, புதிதாக யாருக்கும் தேசியப்பட்டியல் வாக்குறுதி கட்சியினால் வழங்கப்படமாட்டாது.
யானையை ரவூப் ஹக்கீமுக்கு விற்றுவிட்டதாக சிலர் ரணிலுக்கு ஏசித் திரிகின்றனர். அதேநேரம், மரத்தை ரணிலுக்கு விற்றுவிட்டதாக சிலர் எனக்கு ஏசிக்கொண்டு திரிகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேரூண்றிய காரணத்தினால்தான் இங்கு ஐக்கிய தேசியக் கட்சி அழிந்துபோனது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பலர் எம்முடைய கட்சியில் இணைந்துகொண்டனர்.
ரணில் விக்கிரமசிங்க எங்களிடம் விடுத்த வேண்டுகோள் காரணமாகவே நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறோம். ஐ.தே.க. தலைவர் வாக்குறுதிகள் கொடுத்தால் நிறைவேற்றுவார். ஆனால், அவரிடமிருந்து வாக்குறுதி பெறுவதுதான் கஷ்டமான விடயம். ஆனால், அவரின் மூலமாக காரியங்களை சாதித்துக்கொள்கின்ற திறமை முஸ்லிம் காங்கிரஸிடம் இருக்கிறது.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ள ஏ.எல்.எம். நசீர், கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்