Top News

சிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்

_99689550_458d4ada-48a9-411e-a653-3ba4a731d556


_99689554_gettyimages-908369978

சிரியாவில் உள்ள குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை துருப்புக்கள் வடக்கு சிரியாவிற்குள் நுழைந்தன. குர்திஷ் ராணுவ குழுவை தீவிரவாதிகள் என துருக்கி கூறுகிறது.

ஒய்ஜிபி என்று அறியப்படும் குர்திஷ் குழு, துருக்கியின் தென் எல்லையில் இருக்கும் அஃப்ரின் பிராந்தியத்தில் இயங்கி வருகின்றது.

தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை விரட்டியதாகக் கூறும் குர்திஷ் குழு, இதற்குப் பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ராக்கெட் ஏவியதாகவும் கூறியுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான சண்டையில் ஈடுபடும் அமெரிக்க ஆதரவுடைய கூட்டணியில், குர்திஷ் ராணுவ குழு முக்கிய பகுதியாக உள்ளது.

மிக விரைவாக ஒய்ஜிபியை நசுக்கத் துருக்கி அதிபர் ரெசெப் தயீப் எர்துவான் உறுதியேடுத்துள்ளார். ஆனால், பொது மக்கள் பலியாவதை தடுக்கத் துருக்கி தனது படைகளை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியுடன், குர்திஷ் ராணுவ குழுவுக்கு தொடர்புள்ளது என துருக்கி நம்புகிறது.

அஃப்ரின் பிராந்தியத்தில் இருந்து குர்திஷ் ராணுவ குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் இந்த ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
துருக்கியின் படைகளுடன், ‘ஃப்ரீ சிரியன் ஆர்மி’ என்ற துருக்கி ஆதரவு அமைப்பின் கிளர்ச்சியாளர்களும் இணைந்துகொண்டனர். சிரியாவின் பிராந்தியத்திற்குள் தரை வழியாக நுழைந்ததன் முந்தைய நாள், சிரியாவில் வான்வழி தாக்குதலை துருக்கி நடத்தியது.

சுமார் 25,000 ஃப்ரீ சிரியன் ஆர்மியின் போராளிகள், துருக்கி ராணுவத்துடன் இணைந்து தாக்குதல் நடத்தியதாகத் தளபதி மேஜர் யாசர் அப்துல் ரஹிம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். ஆனால், களத்தில் எத்தனைத் துருக்கி படையினர் உள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை.

தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலின் மூலம் ஞாயிற்றுக்கிழமையன்று 45 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி ராணுவம் கூறியுள்ளது.
முன்னதாக குர்திஷ் ராணுவ குழுவின் 153 இடங்களில் வான்வழித் தாக்குதல் நடத்தியதாகத் துருக்கி கூறியிருந்தது.

வான்வழித் தாக்குதலால் 11 பொதுமக்கள் இறந்ததாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

இந்த சண்டையில் நான்கு துருக்கி படையினரும், 10 சிரிய கிளர்ச்சியாளர்களும் இறந்ததாக குர்திஷ் ராணுவ குழு கூறியுள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், தனது ராணுவத்தைக் கட்டுப்படுத்துமாறு துருக்கியிடம் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாகக் கூட உள்ளது.

இந்த ஊடுருவலை சிரிய அதிபர் பஷார் அல்-அசாத் கண்டித்துள்ளார். ”இது கொடூரமான துருக்கிய ஆக்கிரமிப்பு.” எனவும் அசாத் கூறியுள்ளார்.



Previous Post Next Post