மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்கள் பல இன்று வன்னி எம்.பி கெளரவ மஸ்தான் காதரினால் திறந்து வைக்கப்பட்டன.
மன்னார் நகரசபை உள்ளிட்ட முசலி,நானாட்டான்,மாந்தை மேற்கு, மன்னார் ஆகிய பிரதேச சபைகளுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் அலுவலகங்களே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டன.வழமைக்கு மாறாக இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மன்னாரில் நடாத்திய கூட்டங்களுக்கு பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர்.
இங்கு உரைநிகழ்த்திய கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் கூறியதாவது
இன்று இம்மாவட்ட மக்கள் சந்தோசமாகவும் புதியதோர் உத்வேகத்துடனும் இங்கு சமூகமளித்திருப்பதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.உங்களது இந்த உத்வேகமும் ஆர்வமும் எமக்கு புதியதோர் உற்சாகத்தை தந்திருக்கிறது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பலத்த வெற்றியை பெறுவதோடு பல உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை கைப்பற்றும் என்பதற்கு இங்கே சமூகளித்திருக்கும் உங்களது ஆதரவு கட்டியம் கூறி நிற்கிறது என்பதை தைரியத்துடன் கூறிவைக்க விரும்புகிறேன்.
எங்களது அரசாங்கத்திலிருந்து பெற்ற எங்களுக்குரிய அதிகாரங்களை தங்களது கரங்களில் வைத்திருப்பவர்கள் ஆடும் கூத்துக்களுக்கு நாங்கள் அசந்து விடப்போவதில்லை.
எல்லா சதிகளையும் முறியடித்து எதிர்வரும் பத்தாம் திகதிக்கு பின் எமது கடுகதி அபிவிருத்தியை இநத மாவட்டம் காணத்தான் போகிறது என்பதையும் பொறுப்புணர்வுடன் இங்கே கூறிவைக்க விரும்புகிறேன் எனவும் குறிப்பிட்டார்.
பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது
நான் போட்டியிட்ட பாராளுமன்ற தேர்தலில் கூட இந்தளவு மக்கள் கூடியிருக்கவில்லை, அதற்கு வேறு காரணங்கள் இருந்திருந்தன.ஆயினும் எமது மக்கள் துணிவுபெற்று எனக்கும் கட்சிக்குமான ஆதரவை வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற அளவிற்கு எம்மீது நம்பிக்கை வைத்துள்ளமையை இங்கே நான் காண்கிறேன்.
எமது மக்களுடைய பல்வேறுபட்ட பிரச்சினைகளை எங்களது ஜனாதிபதியிடம் பேசியிருக்கிறேன்.அவற்றை தீர்த்து வைப்பதற்கான பல முடிவுகளைக் கண்டிருக்கிறோம்.
எமது மக்களின் சமூக வாழ்வில் பல முன்னேற்றங்களை காண்பதற்காக அதிகாரமும் வளமும் எமக்கு வரக் காத்திருக்கின்றன என்பதையும் உங்களுக்கு மகிழ்வுடன் சொல்லிவைக்க விரும்புகிறேன்.
இந்தத் தேர்தல் முடிவடைந்த பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட எழுச்சி மாநாடு ஒன்று உடனடியாக நடாத்தப்பட்டு எமது மாவட்டத்தின் அபிவிருத்தி பிரகடனம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.