Top News

2004 இரும்புத் தக்கியா மீதான கிரனைட் தாக்குதல் விவகாரம்! ந.தே.முவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை



2004ஆம் ஆண்டு காத்தான்குடி இரும்புத் தக்கியா பள்ளிவாசலில் இடம்பெற்ற கிரனைட் தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்புள்ளதாக அபாண்டமான பொய் பிரச்சாரங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

இதேவேளை, தனது அரசியல் வாழ்க்கை 30 வருடங்களை எட்டியுள்ள நிலையில் விரைவில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் அதன் பின்னர் முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காவும், ஆத்மீக வழிகளிலும் தான் ஈடுபடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

காத்தான்குடி, மெத்தைப்பள்ளி அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:- 

காத்தான்குடி மக்களை அரசியல் அநாதையாக்குவதற்கு முயற்ச்சி செய்தவர்கள் எல்லாம் இன்று காத்தான்குடி மண்ணின் உரிமை பற்றியும் பாதுகாப்பு பற்றியும் பேசுவது கவலைக்குரிய விடயமாகும். 

100 நாள் ஆட்சியின் போது எவ்வித அதிகாரமுமின்றி சாதாரன எதிர்க்கட்சி எம்.பியாகவே நான் இருந்தேன். அப்போது நாங்கள் 13 வட்டாரங்களாக பிரித்து வைத்திருந்த காத்தான்குடி நகர சபையை 10 வட்டாரங்களாக குறைத்து மிகப்பெரிய துரோகத்தை செய்தவர் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்  ஆகும். 

எமது சமூகத்துக்கு துரோகம் செய்ந்த இவர்கள் எம்மத்தியில் வாக்கு கேட்டு வருவதற்கு எந்த உரிமையும் கிடையாது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் அபாண்டங்களை சுமத்தி எம்மைத் தோற்கடிக்கவே அவர்களால் முடியும். ஆனால் அவர்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. 

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி மக்களுக்கு சேவை செய்வதே எனது தொழில் மாறாக என்னைத் தோற்கடிப்பது எப்படி என சதித்திட்டங்களை தீட்டுவதே அவர்களது தொழிலாகும். 

அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில் ந.தே.மு. தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் நளீமி என் மீது மிகப்பெரிய அபாண்டத்தை சுமத்தியிருந்தார். அதாவது ‘2004ஆம் ஆண்டு இரும்புத் தக்கியாவில் இஷாத் தொழுகையின் போது வீசப்பட்ட கிரனைட் எனது ஆதரவாளர்களால் வீசப்பட்டது என்றும், ஹிழுறியா பள்ளிவாசலில் மற்றுமொரு கிரனைட் வீச நாங்கள் திட்டமிட்டிருந்தாகவும் அதனை அவர் தடுத்ததாகவும்’ கூறியிருந்தார். 

14 வருடங்களின் பின்னர் இவ்வாறான அபாண்டத்தை பிர்தௌஸ் நளீமி என் மீது சுமத்தியுள்ளார். அவர் ஒரு மௌலவி ஒரு கட்சியின் தேசிய அமைப்பாளர் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் தேர்தல் மேடைகளில் அபாண்டகங்களை சுமத்துவதற்கு எதிரான நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம்.  

ஆயுதங்களை வைத்திருப்பது அதனை கையாள்வது என்பது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மிகப்பெரிய குற்றம். அன்று கிரனைட்டை எனது ஆதரவாளர்கள் வைத்திருப்பதை அவர் கண்டிருந்தால் உடனடியாக கிரனைட்டுடன் சம்பந்தப்பட்ட நபரை பொலிஸில் ஒப்படைந்திருக்க வேண்டும். பிர்தௌஸ் நளீமி அதைச் செய்யாதது மிகப்பெரிய குற்றம். இன்று நான் மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்தில் அவரது உரையின் வீடியோவையும் கொடுத்து அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன். மிக விரைவில் உயர் குழுவைக் கொண்டு அவரை விசாரணை நடத்தி அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவேன். 

இரும்புத் தக்கியா மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது மக்களுடன் மக்களாக நான் இருந்து ராணுவத்தை குவித்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்கியது நானே. யுத்த காலத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளோம். 

ஆனால், 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட போது அப்துர் ரஹ்மான் என்னுடன் தொடர்பு கொண்டதாகவும் அப்போது எனது மனைவி நான் நித்திரையில் இருப்பதாக கூறியதாகவும் மற்றுமொரு மேடையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கூறியிருந்தது. நான் திருமணம் செய்ததே 1991ஆம் ஆண்டே முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை கூறி மக்களை குழப்ப முற்படுகின்றனர். இவ்வாறான பித்தலாட்டக்காரர்களுக்கு பெப்ரவரி 10ஆம் திகதி சரியான பதிலை வழங்குவோம். 

நான் அரசியலை விட்டு ஒதுக்க நினைத்துக்கொண்டிருந்தேன்.  கிட்டத்தட்ட 30 வருடங்கள் அரசியலில் இருந்து விட்டேன் இனி இந்த அரசியலில் தொடர்ந்து இருக்காமல் ஓய்வு பெற்று முஸ்லிம் சமூகத்தின் கல்வி எழுச்சிக்காவும், ஆத்மீக வழிகளிலும்  என்னை ஈடுபடுத்திக் கொள்ளவே எதிர்பார்த்துள்ளேன். –என்றார். 
Previous Post Next Post