2018ம் ஆண்டுக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் ஆட்சியாளர்களை சற்று தடுமாற செய்வதாகவே அமைந்துள்ளது. தேசிய ரீதியில் ஆட்சி அதிகாரம் இருந்தும், உள்ளூராட்சி சபைகளில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள ரணில், மைத்திரி கூட்டாட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது இந்த தேர்தல் முடிவுகள்.
உண்மையில் நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மூலம், மஹிந்த ராஜபக்ஷ மீண்டும்த லைதூக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக எண்ண முடியாது. அன்றைய 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இருந்த அதே மக்கள் தற்போதும் அவருக்கு எதிராகவே இருக்கின்றார்கள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
அன்றைய ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து நின்று மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கவில்லை. அதேநேரம் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெருமளவுக்கு வாக்குப்பலம் இருக்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உட்பட மேலும் பல கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள இணைந்ததன் மூலம் கிடைத்த வெற்றிதான் இந்த நல்லாட்சி அரசாங்கம்.
அன்று மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்ற அந்த அனைத்துக் கட்சிகளும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பல இடங்களில் தனித்து பேட்டியிட்டுள்ளதால், அன்றிருந்த மஹிந்த எதிர்ப்பு வாக்குகள் அந்தந்த கட்சிகளுக்கு சிதறி சென்றுள்ளதே தவிர, மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு எவ்வகையிலும் அதிகரிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நன்கு அவதானிக்க முடிகின்றது.
எவ்வாறாயினும் ஆட்சி அதிகாரம் இருக்கின்ற நிலையிலும், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை இழந்திருப்பது ரணில், மைத்திரி இணைந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கான தோல்வியின் ஆரம்பமாகவே கருத முடியும். மக்கள் உடனடி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருப்தையே இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.
அதேநேரம் மஹிந்தவையும், மைத்திரியையும் பிரித்து தனிப் பெரும்பான்மை அமைக்கும் கனவு கண்ட ரணில் விக்கரமசிங்கவுக்கு பெரும் ஏமாற்றமாகவே இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. அத்துடன் கடந்த தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் மீது மக்கள் மிகுந்த வெறுப்படைந்திருப்பதையும், இந்த தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன.
எவ்வாறாயினும் இந்த தேர்தலில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெற்றிருந்தாலும், மஹிந்த எதிர்ப்பாளர்களின் அளவில் எவ்வித வீழ்ச்சியையும் இந்த முடிவுகளில் அவதானிக்க முடியவில்லை. ஆகவே மக்களின் தற்போதைய தேவையாக இருப்பது மாற்றம் ஒன்றே தவிர, மஹிந்த அல்ல.
ஆகவே மைத்திரியோ, ரணிலோ தனித்தனியாக தமது பலத்தை நிரூபிக்க முயற்சித்தால் மஹிந்த ராஜபக்ஷவின் மீள் எழுச்சியை தடுக்க முடியாது போகும் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நன்கு உணர்த்துகின்றன.
எம் நுஸ்ஸாக்