Top News

பொருளாதார வளர்ச்சி வீதத்தை 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது நல்லாட்சி அரசு



 (எம்.எஸ்.எம்.ஸாகிர்)                   

மூன்று வருடங்களில் இந்த நல்லாட்சி அரசு பொருளாதார கொள்கை மற்றும் வேலை திட்டங்கள் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது என ஐ.தே.கட்சியின் கல்முனைத் தொகுதி பிரசார இணைப்பு செயலாளரும் நியமனப் பட்டியல் வேட்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தெரிவித்தார்.

கல்முனைக்குடியில் நடைபெற்ற ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் அவர் உரையாற்றுகையில்,

 நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கும் போது அரச வருமானம் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தது. வட்டி வீதம் அதிகரித்தது. கடன் பெறும் வகையிலான செலவீனங்கள் பெருமளவில் அதிகரித்தன.

அத்துடன் மீண்டு வரும் செலவீனங்களும் அதிகரிக்க தொடங்கின. எனினும் 2015ஆம் ஆண்டு 13.3 சதவீதமாக காணப்பட்ட அரச வருமானம், 2016 ஆம் ஆண்டளவில் உற்பத்தியில் 0.9 சதவீதமாக இருந்த வரியில்லா வருமானம், 2016 ஆம் ஆண்டளவில் 1.9 வீதமாக அதிகரித்தது. இதன் போது அரச நிறுவன வருமானம் பெருமளவில் உதவியது.

அத்துடன் 1454. 09 பில்லியனாக காணப்பட்ட அரச வருமானத்தை 2016 ஆம் ஆண்டளவில் 1686.01 பில்லியனாக அதிகரித்தது. அதாவது 15.9 சதவீத அதிகரிப்பாகும். மேலும் வரி வருமானத்தை 1355 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அத்துடன் மத்திய வங்கி அறிக்கையில் அரச வருமானம் அதிகரித்துள்ளது. நாடு பாரிய கடன் சுமைக்குள் தள்ளப்பட்டிருந்த போது, மக்களுக்கு பாரத்தை சுமத்த விடாமல் உரிய முகாமைத்துவம் செய்து கடன் பெறுவதனையும் குறைத்தது இந்த அரசு. கடன் சுமையுடன் கூடிய நெருக்கடியுடனான காலத்திலும் கூட நலன்புரி சேவைகளை அதிகரித்து கொண்டது. பெற்றோல் விலை குறைக்கப்பட்டது.

அரச ஊழியர்களுக்கான சம்பளம் பத்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. கேஸ் விலை குறைக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டுப்படுத்தப்பட்டன. மருந்துப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டன. எந்த அரசும் செய்யாத விலைவாசி குறைப்பை இந்த அரசு, கடன் சுமை என்றும் பாராமல் செய்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்படி பொருளாதார சர்வதேச நாணய நிதியமும் இலங்கை மத்திய வங்கியும் கூட அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே எதிர்வருகின்ற காலங்களில் இளைஞர்களை சிறந்த முறையில் வழிநடாத்திச் செல்ல, தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க, பாரிய அபிவிருத்தி திட்டங்களை கொண்டு வர,  எமது ஐ.தே.கட்சியான யானைச்  சின்னத்துக்கு அனைவரும் புள்ளடி இட்டு வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இக் கூட்டத்தில் ஐ.தே கட்சியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Previous Post Next Post