"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுத் தளத்தில் சிறிதளவு குறைவேற்பட்டாலும் அதனைத் தலையில் வைத்துத் தூக்கிக் காட்டுவார்கள் மஹிந்த அணியினர். தமிழ் மக்களில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது, சமஷ்டி வேண்டாம் ஒற்றையாட்சிதான் வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகிறார்கள் என்றும் மஹிந்த தரப்பினர் கூறுவார்கள்.''
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். வடமராட்சி உடுத்துறையில் இரவு இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டதிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
"நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்கு கிழக்கில் யார் தெரிவுசெய்யப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசமைப்பு நிர்ணய சபையில் இருக்கப்போகிறார்கள். ஏனைய கட்சிகளில் தெரிவாகும் ஒரு சிலர் புதிய அரசமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபடப்போவதில்லை.
நாம் 2 கோடி ரூபாவை வாங்கிக்கொண்டுதான் வாக்களித்தோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சொல்கிறார். அவர் எதிராகவும் வாக்களிக்கவில்லை. அவர் ஓடி ஒழித்துவிட்டார். புதிய அரசமைப்பைச் சிங்கள மக்களுக்கு எதிராக உருவாக்கவில்லை.வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். அது எங்களுடைய கோரிக்கை அது எங்களுடைய தேவை. ஆனால், அதுவும் முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவுடன்தான் இணைக்கப்படவேண்டும்'' என்றார்.