ரணில் விக்கிரமசிங்கவை எனக்கு நீண்டகாலமாக தெரியும். அவருடைய மாமனார் ஜனாதிபதி ஜயவர்த்தன என்னை தனது பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்வதற்கு 1977ஆம் ஆண்டு தொடக்கம் கடும் முயற்சி எடுத்தார்.
அவர் அதில் வெற்றிகாணவில்லை. ரணிலினால் என்னை பொக்கட்டுக்குள் போட முடியாது. இதனை மஹிந்த ராஜபக் ஷ உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
1956ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் தமக்கு இந்த நாட்டில் என்னவிதமான ஆட்சி தேவையென்பதனை தொடர்ந்து வந்த தேர்தல்களில் வலியுறுத்தி வந்துள்ளார்கள். தற்போது நடைபெறும் ஆட்சி எமது சம்மதத்துடன் ஏற்படுத்தப்பட்ட ஆட்சியல்ல. அது எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட ஆட்சி. இந்த ஒழுங்கு தொடர்ந்தும் நீடிக்க முடியாது. இது எமது இணக்கப்பாட்டுடன் நடைபெறும் ஆட்சியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை கலாசார மண்டபத்தில் நேற்று முன்தினம் மாலை நடந்த திருகோணமலை நகர சபைக்கான வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரதான கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளைத் தலைவர் சி.தண்டாயுதபாணி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராஜா, ரெலோ கட்சியின் நகர சபை வேட்பாளர் உள்ளிட்ட பலரும் இங்கு உரையாற்றினர்.
அவர் தொடர்ந்தும் சம்பந்தன் பேசுகை யில், இன்று இந்த தேர்தலில் இந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் தீவிரமாக பங்குபற்றியிருக்கின்றார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது கட்சிக்காக தீவிரமாக பிரசாரம் செய்கின்றார். அவ்வாறே ரணில் விக்கிரமசிங்கவும் தமது கட்சிக்காக தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இவ்வாறே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தெற்கில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த ஒரு கருத்தைக் கூறியிருந்தார். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒருமுக்கியமான தேர்தல். இதன் பின்னர் சில முக்கியமான முடிவுகள் வரலாம். இந்த நாட்டில் ஒற்றையாட்சி தொடர வேண்டுமா? அல்லது தமிழீழம் மலர வேண்டுமா? என்றகேள்விக்கு பதில் இந்தத் தேர்தல் அளிக்கும் எனக்கூறியிருந்தார்.
ஒற்றையாட்சியை நாங்கள் ஏற்கப்போவதில்லை. அது நிச்சயம். தமிழீழத்தை நாங்கள் எவரும் தற்போது கேட்கவில்லை. 1972 ஆம் ஆண்டு எமது உரிமைகளை பெறுவதற்கு கடும்முயற்சி எடுத்த பிறகு புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்பட்டபோது அதன்பின்னர் 1976இல் நாங்கள் தமிழீழ பிரகடனத்தை செய்தது உண்மை.
அந்த அடிப்படையில்தான் நாங்கள் 1977 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டோம். ஆனால் நாங்கள் தெரிவு செய்யப்பட்ட பின்பு சர்வதேச சமூகத்தின் கருத்தின் அடிப்படையில், விசேடமாக பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தி, அண்ணன் அமிர்தலிங்கத்திற்கு கூறிய கருத்தின் அடிப்படையில். தமிழீழத்திற்குப் பதிலாக நாங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வு வருமாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளத்தயார் என்று கூறியிருந்தோம்.
ஏனெனில் நாட்டைப் பிரிப்பதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு குறைவாக இருந்தது. 1987 ஆடி 29 ஆம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பிறகு, 13 ஆவது அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட பிறகு, அரசியல் சாசன ரீதியாக மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட பின்பு, தமிழீழம் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கவில்லை. தற்பொழுதும் நாங் கள் முன்வைக்கவில்லை.
நாங்கள் எதிர்பார்க்கின்ற தீர்வு பிரிபடாத, பிரிக்கப்பட முடியாத, ஒருமித்த நாட்டிற்குள், நமது இறையாண்மையின் அடிப்படையில், நமது உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், எமது மக்கள் எதிர்நோக்குகின்ற நாளாந்த கருமங்கள் சம்பந்தமாக, எமது தலைவிதியை நாங்கள் தீர்மானிக்கும் வகையிலான உரிமையை சமத்துவத்தின் அடிப்படையில், எமது கௌரவம், எமது சுய மரியாதை, எமது பாதுகாப்பு, உறுதி செய்யப்படும் வகையிலும், எமது அரசியல் பொருளாதார, கலாசார, சமூக, ரீதியான உரிமைகளை நாங்களே கையாளக்கூடிய வகையிலும் ஒரு அரசியல் தீர்வை ஒருமித்த நாட்டிற்குள் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இதனைப் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் மிகவும் தெளிவாக கூறி வருகின்றோம்.
இதனை மஹிந்த ராஜபக் ஷவுக்கு தெளிவாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அவர் சமீபத்தில் இன்னுமொரு கருத்தை கூறியிருக்கின்றார். அதுவும் யாழ்ப்பாணத்தில் கூறியிருக்கின்றார். நான் சமாதானமாக பிரச்சினையை தீர்ப்பதற்கு முனைந்தேன். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்கவில்லை. சம்பந்தன் ஒத்துழைக்கவில்லை. சம்பந்தன் இன்று ரணில் விக்கிரமசிங்கவின் பொக்கட்டுக்குள் உள்ளார் என்றும் கூறியிருக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்கவை எனக்கு நீண்டகாலமாக தெரியும். அவருடைய மாமனார் ஜனாதிபதி ஜயவர்த்தன என்னை தனது பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்வதற்கு 1977 ஆம் ஆண்டு தொடக்கம் கடும் முயற்சி எடுத்தார். அவர் அதில் வெற்றிகாணவில்லை. அந்தவிடயம் மருமகன் ரணிலுக்கு நன்றாகத்தெரியும். ஆனபடியினால் என்னை ரணில் பொக்கட்டுக்குள் போட்டுக்கொள்ள முடியாது என்பது அவருக்குப்புரியும். ஆகவே இதனை மஹிந்த ராஜபக் ஷவுக்கு தெளிவாக கூறிவைக்க விரும்பகின்றேன். பாராளுமன்றத்திலும் அவருக்கு நான் தெரிவித்திருக்கின்றேன்.
மஹிந்த ராஜபக் ஷ இந்த சமாதான பேச்சுவார்த்தை சம்பந்தமாக பல்வேறு தவறான கருத்துக்களை கூறியிருக்கின்றார். தான் இந்த விடயத்தில் பலமுயற்சிகளை எடுத்ததாகவும் ஆனால் நாங்கள் ஒத்துழைக்க வில்லை என்ற அடிப்படையில் பேசியிருக்கின்றார்.உண்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதற்காக நான் விபரத்தை சொல்ல வேண்டிய கடமையுள்ளது.
யுத்தம் முடிந்த பிறகு ஐ.நா.வின் செயலா ளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் செய்த பொழுது 2009 வைகாசி மாதம் நிறைவிற்கு பின்னர் மஹிந்த ராஜபக் ஷ ஒரு வாக்குறுதியை அவருக்கு கொடுத்தார். பொறுப்புக்கூறல் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு அரசியல் தீர்வு ஒரு அரசியல் சாசனம் ஊடாக ஏற்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தார். அது நிறைவேற்றப்படவில்லை. அது நிறைவேற்றப்படாமையி னால் இந்தியா அமெரிக்கா போன்ற நாடு கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.
ராஜபக் ஷ இந்தியாவிற்கு அழைக்கப்ப ட்டு கலாநிதி மன்மோகன்சிங் இது சம்பந்தமாக பேசியிருந்தார். அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவிச்செயலாளர் ரொபேட்பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்தார். இதன்போது அவர் என்னைச் சந்திக்க வேண்டும் எனக்கேட்டு அவரை நான் சந்தித்தேன்.அப்பொழுது அவர் சொன்னார் சம்பந்தன் ஜனாதிபதி ஒருநாளும் மாறமாட்டார். அவரை நேற்று நான் சந்தித்தேன். அவர் பழைய பாணியில்தான் பேசுகிறார். அவர் மாறுவார் என நான் நினைக்கவில்லை. எனத்தெரிவித்தார்.
இருந்தாலும் எமது நிலைப்பாட்டை நான் தெளிவுபடுத்தினேன். அன்று பின்னேரம் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்ட ராஜபக் ஷ நீங்கள் ரொபேட் பிளேக்கைச் சந்தித்ததாக நான்கேள்விப்படுகின்றேன். என்ன பேசினீர்கள் எனக்கேட்டார். நான் எமது பிரச்சினைகள் பற்றி பலவிடயங்களை பேசினேன். அது சுமுகமாக நடைபெற்றது எனத் தெரிவித் தேன். என்னை நேற்று அவர் சந்தித்தபொழுது அரசியல் தீர்வுபற்றி பேசினார். அரசியல் தீர்வு எமக்கு கண்டுகொள்ளத்தெரி யும் உங்களுடைய உதவி எங்களுக்குத் தேவையில்லை எனவும் கூறினேன் எனவும் மஹிந்த எனக்கு தெரிவித்தார்.
அதன்பிறகு தான் அமெரிக்கா ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்தது. இவருக்கு ஒரு பாடம்படிப்பிக்க வேண்டும் என நினைத்தது. 2010 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் மஹிந்தவிற்கும் எனக்குமிடையில் தனிப்பட்ட சந்திப்பு ஏற்பட்டது. நான் தனியே சந்திக்க வேண்டும் எனக்கேட்டதற்கிணங்க அது நடைபெற்றது.
40 நிமிடங்கள் பலவிடயங்கள் பற்றி நான் பேசினேன். உங்களுக்கும் எங்களுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவேண்டும். அதற்கான வாக்குறுதிகளை நீங்கள் கொடுத்திருக்கின்றீர்கள். அரசியல் தீர்வு சம்பந்தமாக அது நடைபெற வேண்டும் எமது பிரச்சினைக்காக நிரந்தரமான தீர்வுகாணப்பட வேண்டும் என நான் கூறினேன். அவர் அமைதியாக கேட்டார். இறுதியில் ஜி.எல்.பீரிஸை அழைத்து அரசியல் தீர்வு சம்பந்தமாக பேசவேண்டும் அதற்கான ஒழுங்குகளை செய்யுங்கள் என்றார். இதனடிப்படையில் பேச்சுவார்த்தை 2012 ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பாரதப் பிரதமர் அவருட னும் பேசியிருந்தார் எங்களுடனும் பேசியிருந்தார்.
இதன் ஆரம்பத்தில் எமது நிலைப்பாட்டை விளக்கினோம். ஒருமித்த நாட்டுக்குள் அதிகாரப்பகிர்வு சம்பந்தமான எல்லாவற்றையும் விளக்கினோம். எழுத்துமூலமாக எங்களின் கோரிக்கையைக் கேட்டார்கள். அதனடிப்படையில் அதனை 2012 பங்குனி மாதம் வழங்கினோம். அதற்கான எழுத்துமூல பதிலைத்தர வேண்டும் என நாங்கள் கோரினோம். ஆடிமாதம் வரை கழிந்தன பதில்வரவில்லை. 2012ஓகஸ்ட் 4ஆம் திகதி நாங்கள் நான்கு மாதமாக உங்களுடைய பதிலைத்தரவில்லை.
நாங்கள் பொறுமையாக காத்துக்கொண்டிருக்கின்றோம். அதற்கான பதில் இன்று தராவிட்டால். என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதனை நான் எடுப்பேன் எனத்தெரிவித்தேன். முடிவில் உங்களுடைய பதில் வரும் வரையில் மீள திகதி நியமிப்பதனை நான் விரும்ப வில்லை.எனக்கூறி நாங்கள் வெளியேறினோம். பின்னர் மறுநாள் அழைத்து கதைத்தபோது பதில்தர வேண்டும். அரசாங்கமும் நாங்களும் பேசுகின்றோம். எங்களது எழுத்துமூலமான விடயத்திற்கு அரசு பதில் தரவேண்டும் என்பதனை மீளவும் வலியுறுத்தினோம்.
பதில்தர முடியாது. என்னை மன்னிக்க வேண்டும் எனக்கூறினார். அவ்வாறு பதில் தராவிட்டால் கடந்த காலங்களில் பேசப்பட்ட விடயங்கள் அதாவது இந்திய– இலங்கை ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்கள் பேச்சுவார்த்தை மேசை க்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்றுக்கொண் டார். அதன் பின்னர் ஆவணி மாதம் 16 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
எந்த விடயத்திலும் இணக்கப்பாடு இல்லை. பின்னர் பலமுறை சந்தித்தோம். எதுவும் நடைபெறவில்லை. இதுதான் உண்மையான நிலைமை. பின்னர் தெரிவுக்குழுவொன்றை அமைத்தார். அதற்கு வருமாறு என்னைக் கோரினார். அதற்கு நான் சொன்னேன். நானும் நீங்களும் பேசி சில முக்கியமான விடயங்களுக்கு முடிவு காணாவிட்டால் அந்த பேச்சுவார்த்தையில் என்ன பயன் எனக்கேட்டேன். அங்கு விமல் வீரவன்சவை போன்றவர்களை தூண்டி விட்டு குழப்பங்களை ஏற்படுத்துவீர்கள். அதனால் எந்தப்பயனும் இல்லை என நிராகரித்தோம்.
பின்னர் ஒருமுறை அழைத்தார். அங்கு சென்றோம். நின்றவர்கள் என்னை வெரு ட்டும் வகையில் நடந்துகொண்டார்கள் தெரிவுக்குழுவிற்கு வராவிட்டால் உமக்கு ஆபத்து ஏற்படும் என வெருட்டும்தொனியில் மஹிந்த எனக்குச் சொன்னார். நான் எனது நிலைப்பாட்டை ஏலவே சொல்லியுள்ளேன். இது விடயமாக நான்மாத்திரம் முடிவு எடுக்க முடியாது. எனது கட்சியின் நிலைப்பாடு இதற்கு ஆதரவாக இல்லை. அதனை மீறி நான்முடிவு எடுக்க முடியாது. அடிப்படை அதிகாரங்கள் விடயங்கள் தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வரவேண்டும். இல்லாவிட் டால் நாம் வரமுடியாது. இது தான் உண்மை என்றேன்.
1956 ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் தமக்கு இந்த நாட்டில் என்னவிதமான ஆட்சி தேவையென்பதனை தொடர்ந்து வந்த தேர்தல்களில் வலியுறுத்தி வந்துள்ளார்கள். தற்போது நடைபெறும் ஆட்சியும் எமது சம்மதத்துடன் ஏற்படுத் தப்பட்ட ஆட்சியல்ல. அது எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட ஆட்சி. இந்த ஒழுங்கு தொடர்ந்தும் நீடிக்கமுடியாது. இது எமது இணக்கப்பாட்டுடன் நடைபெறும் ஆட்சி யல்ல. எமது மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். இது தான் எமது உறுதியான நிலைப்பாடு. இதற்கு இந்த தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பா ட்டை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.