சிரியாவில் இடம்பெற்று வரும் கூட்டு இனப்படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும் சிரியா மக்களுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தெரிவித்துள்ளது.
சிரியா இனப்படுகொலை தொடர்பில் ஜம்மியத்துல் உலமா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா உரைகளை சிரியா தொடர்பில் மேற்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வேண்டிக்கொண்டுள்ளது.
முழுமையான அறிக்கை :
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம் ரஷ்யா போன்ற தனது நேச நாடுகளின் உதவிகளுடன் இக்கூட்டுப் படுகொலையை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கூட்டுப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதோடு, உலக நாடுகள் பொதுவாகவும், முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் இந்த அநியாயங்களை தடுத்து, அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த தம்மால் முடியுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.
இஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பலவீனர்களுக்கும் உதவுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜும்மா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளும்படியும் சிரியா மக்களுக்கு விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிராயா நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் விமோசனத்திற்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.
அல்லாஹுத்தஆலா சிரியாவில் அனியாயக்காரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எமது சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு விமோசனத்தையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக.
வஸ்ஸலாம்.
வஸ்ஸலாம்.
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
செயலாளர் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
செயலாளர் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா