அம்பாறை நகரில் முஸ்லிம்களை இலக்குவைத்து (27.02.2018) நல்லிரவு நேரத்தில் தாக்குதல்கள் நடைபெற்றதானது எதிர்பாராத ஓர் விடயமல்ல.
முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள அடிப்படைவாதிகளின் திட்டமிட்ட வன்முறையானது வழக்கமாக ஹோட்டல்களில் இருந்தே ஆரம்பமாவது கடந்தகால வரலாறாகும்.
2௦௦1 ஆம் ஆண்டில் சந்திரிக்காவின் அரசாங்கத்தில் நடைபெற்ற மாவனல்லை கலவரம் உட்பட பல அசம்பாவிதங்கள் ஹோட்டலில் இருந்தே உருவானது. அதுபோல் அம்பாறை சம்பவமும் ஹோட்டலில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இனவாதிகள் முஸ்லிம்களை இலக்கு வைக்கும்போது ஏதோ ஒரு காரணத்தினை கூறுவார்கள். அந்தவகையில் அம்பாறையில் முஸ்லிம் உரிமையாளருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் கருத்தடை மாத்திரை உணவில் கலந்து கொடுக்கப்பட்டிருந்தால் குறித்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஏன் பள்ளிவாசலை உடைக்க வேண்டும்?
இஸ்லாமியர்களின் வேத நூலை ஏன் எரிக்க வேண்டும் ? சம்பவத்துடன் தொடர்பில்லாத ஏனைய கடைகளையும், வாகனங்களையும் ஏன் தாக்கி அழிக்க வேண்டும் ?
உணவில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுவது என்பது நடைமுறை சாத்தியமாகுமா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, குறித்த உணவினை பகுப்பாய்வுக்கு உட்படுத்தி கடைக்காரருக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முற்படவில்லை ?
இனவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக கடைக்காரர் பயத்தினால் ஏதோ வாய் தடமாருவதனை ஒளிப்பதிவு செய்துகொண்டு அதனை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும், உலகத்துக்கும் தங்களது இனவாத செயல்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முட்படலாமா ?
நூற்றி ஐம்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்ற உணவில் இவ்வாறான மாத்திரைகள் கலப்பதன் மூலம் இலாபமீட்ட முடியுமா ? என்ற நியாயமான கேள்விகளுக்கெல்லாம் நாங்கள் விடை தேட முடியாது.
அமெரிக்கா உட்பட உலகின் பல வல்லரசு நாடுகளில் எந்த தலைவர் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது வெளியுறவு கொள்கைகளில் மாற்றத்தினை காண முடியாது. அதுபோல் இந்தயாவில் ஆட்சிக்கு வருகின்ற கட்சிகள் இலங்கை விவகாரத்தில் ஒரே கொள்கையினையே கடைப்பிடித்து வருகின்றது.
எமது நாட்டில் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்ற பச்சை, நீலம் என யார் ஆட்சி செய்தாலும் சிறுபான்மை சமூகம் சார்ந்த கொள்கைகளில் ஒரே நிலைப்பாட்டினையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.
முஸ்லிம்களின் விடயத்தில் ஆட்சி தலைவர்கள் நல்லதையே செய்கின்றாகள் என்று வெளிப்பார்வையில் தென்பட்டாலும், சிங்கள பௌத்த மேலாதிக்கவாத கொள்கை வகுப்பாளர்களின் விருப்பத்துக்கு மாறாக ஆட்சி தலைவர்களால் செயல்பட முடியாது.
அவ்வாறு அவர்களை எதிர்த்து ஆட்சி தலைவர்கள் செயல்பட்டால், தெற்கில் உள்ள சிங்கள மக்களின் வாக்குகளை தாங்கள் இழக்க வேண்டி ஏற்படும் என்ற அச்சமே அதற்கு காரணமாகும்.
எனவே இவ்வாறான இனவாத செயல்பாடுகள் இத்துடன் முற்றுப்பெற போவதில்லை. சில காலங்களுக்கு அமைதியாக இருப்பதும், பின்பு மீண்டும் அது அரசியல் தேவைக்காக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதும் வழக்கமாகும்.
அது வெவ்வேறு கோணத்தில் எதிர்காலத்தில் நாட்டின் பல பிரதேசங்களிலும் உருவாகிக்கொண்டே இருக்கும். தூர நோக்கில் இதற்காக என்ன நடவடிக்கை எடுப்பது ? இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் எதிர்கால பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் உள்ளது ? என்றெல்லாம் ஒவ்வொரு முஸ்லிமும் சிந்தித்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளாத வரையில், மியன்மாரில் நடைபெற்றது போன்று எதிர்காலத்தில் எமது சமூகத்துக்கு ஏற்பட இருக்கின்ற அவல நிலையினை யாராலும் தடுத்துவிட முடியாது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது