றிசாத் ஏ காதர்
பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்குக் கடன் கொடுத்து தங்கள் அரசியல் ஆதிக்கத்தில் அடிமைப்படுத்தி சுரண்டுவதைப் போன்று, மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கோடிக்கணக்கான மக்களை தங்கள் கடன் வலையில் பிணைத்து வைத்து அவர்களின் வருமானத்தை அப்படியே உறிஞ்சுகின்றன.
இந்த நிலை வறுமைக்கோட்டிற்குள் வாழுகின்ற நாடுகளில் பல்கிப்பெருகியிருந்தது. இந்தியாவை முழுமையாக ஆக்கிரமித்து தற்போது இலங்கையில் கால் ஊன்றத் தொடங்கியுள்ளது.
யுத்தத்தின் பின்னர் தனிமனித அபிவிருத்தி, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் நலன் என்று ஊடுறுவி இன்று நாட்டின் நாலா புறங்களிலும் வியாபிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழ்க் கிராமங்களில் ஊடுறுவிய இத்திட்டம் முஸ்லிம் பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.
இன்று, எமது பிரதேசங்களில் மிக மோசமாக
அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வகை கொடிய நோய் தான் - இந்த நுண்கடன் வழங்கும் திட்டம் அதனால் ஏற்படும் சமூகச் சிக்கல்கள் ஏராளம். ஆதனை விலாவாரியாக சொல்லமுற்படுகின்றபோது பொது வெளியில் சில நேரம் பொருத்தமற்றதாகவும் தோன்றுகின்றது. அதற்காக சில விடயங்களை தவிர்த்து இங்கு எழுதப்படுகின்றது.
இன்றைய நாட்களில், முஸ்லிம் கிராமங்களில் அதுவும் - பின் தங்கிய பகுதிகளில் வாழும் பெண்களிடம் கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களின் ஊடுருவல் அதிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, ஆண் ஆதரவற்ற, ஆண்கள் இல்லாத வறுமையின் கீழ் வாழும் குடும்பங்களின் பெண்கள் மீது இவ்வாறன நுண்கடன் கம்பனிகளின் கடன் வழங்கல் திட்டம் ஏதோ ஒரு வகையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்படுகின்றது. (இதற்கு இப்பகுதிகளைச் சேர்ந்த இந் நிறுவனங்களின் சுயநலமிக்க தரகர் பெண்கள் உதவி செய்கின்றனர்.
இவ்வாறு திணிக்கப்படும் கடன் தொகையினால் முஸ்லிம் கிராமங்களில் வட்டி தலைவிரித்தாடுவது மட்டுமல்லாது - பெற்ற கடன் தொகையை செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில் குறித்த பெண்களின் மீது கம்பனிகளின் விற்பனைப் பிரதிநிதிகளினால் வலுக்கட்டாயமாக பாலியல் தொடர்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இது மறுக்க முடியாத உண்மை.
‘ஒரு மாசம் பொறுத்திருங்க, கெஞ்சிக்கேக்குறேன், அடுத்த மாசம் கட்டாயம் தவணையக் கட்டிர்ரேன்!’ என்கின்றாள் அந்தப் பெண்மணி. ‘அதெல்லாம் முடியாது, பணம் வராமல் இங்கிருந்து நகரமாட்டேன்.
நீங்க பொம்பளதானே! உங்களால எப்பிடியாச்சும் சம்பாதிக்க முடியும் தானே?’ பணத்தை கட்டிவிடவேண்டும். வக்கிர முகத்துடன் சொல்கிறான் கடன் வசூலிக்க வந்தவன்.‘ கடன் அறவீடு செய்ய வந்த முகவரின் வசனத்தில் ஆயிரம் விடயங்கள் பொதிந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
எங்களுக்கே வேலையில்ல, கையிலகாசும் இல்ல, இதுவரைக்கும் ஏமாற்றாம கடன கட்டியிருக்கம் தானே. ஒரு தவணைதான் பாக்கி இருக்கு!, இதுக்கு வந்து இப்பிடி நாக்கப் பிடுங்குற மாதிரி பேசுறீங்களே, எங்களுக்கு சாகுறதத்தவற வேற வழியக்கானலயே!’ என்று ஆற்றாமையோடு கண்ணீர் மல்க கெஞ்சுகின்ற பெண்களும் அதிகம்.‘
தற்போதுள்ள பொருளாதார நிலமையில் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டு, சிறு, சிறு தொழில்கள் முடங்கியிருக்கின்றது. கையில் பணமில்லை, வாழ வழிதெரியவில்லை என நிற்கும் அப்பெண்களிடம்தான் நுண்கடன் (மைக்ரோ பினான்ஸ்) கொடுத்தவர்கள் மேற்சொன்னவாறு நடந்து கொள்கின்றனர்.
இது அன்றாடம் எங்கோ ஒரு மூலையில் நடக்கின்ற சம்பவம். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாத. பாதிக்கப்பட்ட பெண்கள் பொலீஸ், நீதிமன்றினை நாடி கால அவகாசம் கேட்கின்றனர். கடன் கொடுத்தவர்களோ துரத்துகின்றனர். வேறு வழியில்லை இதன்பிறகும் கடன் கொடுத்தோர் மீது பெண்களுக்கு கோபம் வரவில்லை. அடுத்தடுத்த தேவைக்கு அவர்கள்தானே எளிதாகக் கடன் கொடுக்கின்றனர், அவர்களைப் பகைத்துக் கொண்டால் என்ன செய்வது என்ற கேள்வியே அனேகமான பெண்களுக்கு இருக்கிறது.
யாரோ சிலர் ஒரு கிராமத்துக்கு வருவார்கள், பெண்கள் 10, 20 பேரை ஒரு குழுவாகச் சேர்ப்பார்கள்;. அந்தக் குழுவுக்கு சிறு சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவர்கள். பின்னர் அந்தக் குழுவிலுள்ளவர்களை பிணையாளியாக வைத்து விண்ணப்பங்களை கொடுத்தால் போதும் குழு உறுப்பினர்களுக்கு உடனே கடன்கிடைக்கும். ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.10 ஆயிரம், ரூ.15ஆயிரம், ரூ.25ஆயிரம் என மூன்று நிறுவனங்களில் கடன் வாங்கி தவணை கட்டுகின்றனர். வட்டி 10 முதல் 15 - 20 சதவிகிதம் என தவணை அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டிலுள்ள ஆண்கள் தங்களை வருத்தி உழைக்கின்ற தொகையில் மூன்றில் ஒரு பங்கு நுண்கடன் நிறுவனங்களுக்குப் போய்விடுகிறது! குழுவில் ஒருவர் கடன் கட்ட முடியாவிட்டால் பிறர் அத்தொகையை கட்டவேண்டும். கடன்பெற்றோர் எவ்வளவு முக்கிய பிரச்சனையாக இருந்தாலும் குழுக் கூட்டத்துக்கு நேரத்தில் வந்து தவணை செலுத்த வேண்டும்.
இது ‘கடவுள் கட்டளை!’ போல் தவறாமல் நடைபெறுகிறது. ‘ஏன், இவ்வாறு கடன் பெறாமல் நீங்கள் வாழ முடியாதா?’ என்ற கேள்விக்கு, ‘முடியாது, குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவம், குழந்தைகளுக்குப் படிப்பு, உறவுகளில் திருமணம், இறப்பு என செலவுகளுக்கு வேறுயார் எங்களுக்குப் பணம்கொடுப்பார்கள்? பதில் கேள்வி நம்மை நோக்கி எழுகிறது.
நமது சமூகத்தில் வலிந்து ஏற்படுத்தப்பட்டுள்ள வழக்காறுகளும், திருமண நடைமுறைகளும் ஒரு காரணங்கள் என்பதனை புரிந்துகொள்ளுதல் வேண்டும்.
ஒவ்வொரு பெண்ணும் பல ஆண்டுகளாக நுண்கடன் பெற்று முறையாகச் செலுத்துகின்றனர். முடிவில்லாத இந்த கடன் உறவு இனியும் தொடரும். சிலந்தி வலைப்பின்னலில் ஈர்க்கப்பட்டு சிக்கிக்கொள்ளும் ஈக்களைப் போல இப்பெண்கள் நிலை உள்ளது. இது இங்கு மட்டும் உள்ள நிலை அல்ல! இவ் வலைப்பின்னல் இலங்கை முழுவதும் நுண்கடன் நிறுவனங்களின் வலைப்பின்னலாக விரிந்துள்ளது.
நவீன “கந்துவட்டி” பல்லாண்டு தமிழ் சமூகத்தை காலமாக கந்துவட்டிக் கொடுமை ஆக்கிரமித்து இப்போது முஸ்லிம்கள் மத்தியில் பிரதொரு நாமத்தில் வளைத்துப்போடத் தொடங்கியுள்ளது. அது கடன் கொடுப்போர், கடன் பெறுவோர் என்ற தனிப்பட்ட பிரச்சனையாக இருக்கும். ஆனால் மைக்ரோ பைனான்ஸ் அமைப்புரீதியாக குவிக்கப்பட்ட கந்துவட்டி முறை எனலாம். மேலும் இதில் தவணை கட்ட முடியாமல் தனியார் கந்துவட்டியாளர்களிடம் மீண்டும் கடன் வலையில் சிக்குவோரும் உண்டு. இத்துடன் பெண்கள் சுய உதவிக் குழுக்கள், வங்கிகளில் கடன் பெறுவது என்ற தனிப்பெரும் கட்டமைப்பையும் இணைத்துப் பார்த்தால் வேண்டும்.
தேனீக்கள் பறந்து அலைந்து மலர்களில் சேகரித்து தேனாடையில் சேமிக்கும் தேனை, கபளீகரம் செய்யும் கரடிகளைப் போலத்தான் இவையும்!
ஒருபுறம் கடுமையாக உழைத்து சொற்ப வருமானம் ஈட்டும் மக்களிடம், அவர்களது பற்றாக்குறை நிலையைப் பயன்படுத்தி எளியமுறை கடன் தருவதாக கூடுதல்வட்டி மூலம் குறைந்த வருவாயையும் அபகரிப்பதுதான் இது.
உற்பத்தி, சந்தை என இருபுறமுமான சுரண்டல்! அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் எளிய முறையில் மிகக்குறைந்த தவணையடிப்படையில் உடனடி சிறுகடன் தருவது, அவர்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிப்பது, கிராமப்புற உற்பத்தி, வியாபாரம் சார்ந்த விஷயங்களுக்கு முன்னுரிமை போன்ற மாற்றுத் திட்டங்களின் மூலமே கவர்ச்சிகரமான இந்த சிலந்தி வலையை அறுக்க முடியும்! இது மக்களின் வாழ்வுரிமை சார்ந்த பிரச்சனையும் கூட!
இவ்வாறான கம்பனிகளும் பிரிதிநிதிகளும் கிராமங்களில் ஊடுறுவதும் குறிப்பாக முஸ்லிம் பிராந்தியத்துக்குள் ஊடுருவுவதை தடுப்பதும், கேவலமான சமூகச்சிக்கலில் இருந்து எமது சமூகத்தையும் எதிர்கால சந்ததியினரையும் பாதுகாத்தல் நம்மவர் அனைவரினதும் கட்டாயமான கடமையாகும்.
பொருளாதாரத்தை தங்களின் பிடிகளுக்குள்ளே இறுகக்கட்டிக்கொண்ட அரக்கர்களும் இது விடயத்தில் பொறுப்புச் சொல்லுதல் வேண்டும். ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாக வாழ அனுமதிக்கப்படல் கூடாது. அதற்கான முறையான திட்டங்களை பள்ளி நிருவாகங்களும், சமூக அமைப்புக்களும், இளைஞர் கழகங்களும் மேற்கொள்ளுதல் மிக மிக அவசியமானதொன்றாகும்.
இவ்வாறான பிரதிநிதிகளின் மிரட்டல்களாலும் அவமானங்களினாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தமிழ் சகோதரிகள் தனியாகவும்,
குடும்பமாகவும் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் பதியப்பட்டிருப்பது வரலாற்றில் வருத்தத்தை உண்டுபண்ணிய விடயங்களாகும்.