அகமட் எஸ். முகைடீன்
ஜும்மா பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் வியாபார நிலையங்கள் தாக்கப்பட்ட அம்பாறை நகருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (3) வருகைதருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் உறுதியளித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்பாறை நகருக்கு விஜயம் செய்ய வேண்டுமென விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (28) புதன்கிழமை காலை பிரதமரை சந்தித்து பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு பிரதமர் நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்விடுத்ததோடு குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பிலும் கலந்துரையாடினார். இதன்போது பிரதமரின் கள விஜயம் தொடர்பான மேற்குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இவ்விஜயத்தின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படவிருக்கின்றது. பிரதி அமைச்சர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர் ஆகியோர் இதற்கான ஒழுங்குகளை செய்துவருகின்றனர்.