அம்பாறை மாவட்ட தேர்தல் களம் எவ்வாறு உள்ளது? சாய்ந்தமருதின் எழுட்சி மு.காங்கிரசுக்கு தாக்கத்தினை ஏற்படுத்துமா ?
எந்தவொரு பிரதானமான கட்சிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில பிரதேசங்களில் தற்காலிக பின்னடைவுகளை எதிர்கொள்வது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஆனால் மு.கா கடந்த காலங்களைவிட ஒவ்வொரு தேர்தல்களிலும் அம்பாறை மாவட்டத்தில் தனது வாக்கு வங்கியை அதிகரித்து சென்றுள்ளதே தவிர பின்னடைவினை சந்தித்ததில்லை.
அந்தவகையில் தலைவர் அஸ்ரப் அவர்கள் உயிரோடு இருக்கும்போதே 1994 இல் நடைபெற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பொத்துவில், நிந்தவூர் ஆகிய இரு பிரதேச சபைகளில் தோல்வியடைந்த அதேவேளை அக்கரைப்பற்று பிரதேச சபையினை மு.கா கைப்பெற்றியது.
பின்னாட்களில் நடைபெற்ற தேர்தலில் அக்கரைபற்றில் தனது அதிகாரத்தினை மு.கா இழந்தபோது அதனை ஈடுசெய்யும் வகையில், இழந்ததனையும் விட அதிகமான வாக்குகளுடன் பொத்துவில், நிந்தவூர் ஆகிய சபைகளை மு.கா கைப்பேற்றியது.
இம்முறை நடைபெறுகின்ற தேர்தலில் சாய்ந்தமருதில் மு. காங்கிரசுக்கு சில தற்காலிக பின்னடைவுகள் ஏற்பட்டாலும், அதனை ஈடுசெய்யும் வகையில் சாய்ந்தமருதில் இழக்கின்ற வாக்குகளையும்விட அதிகமான வாக்குகள் மூலம் அம்பாறை மாவட்டத்தின் ஏனைய உள்ளூராட்சி மன்றங்களை கைப்பெற்றக்கூடிய சாத்திய கூறுகளை களநிலவரங்கள் கூறுகின்றன.
சாய்ந்தமருதில் மு.காங்கிரசுக்கு ஏற்பட்ட பின்னடைவினால் கல்முனை மாநகரம் முஸ்லிம்களிடம் இருந்து பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக, வரலாற்றில் என்றும் இல்லாதவகையில் கல்முனைக்குடியில் மு. காங்கிரசுக்கான வாக்குவீதம் அதிகரித்து காணப்படுகின்றது.
அத்துடன் மருதமுனையில் மு. காங்கிரசின் வாக்கு வங்கியை தக்கவைத்துக் கொண்டாலும் அவ்வூரின் ஐந்தாம் வட்டார வேட்பாளரின் செயற்பாடு போதாமல் உள்ளது.
அதேபோல் 2௦11 இல் அக்கரைப்பற்று மாநகரசபை தேர்தலில் 11,821 வாக்குகளை பெற்று தேசிய காங்கிரஸ் ஆட்சியமைத்தது. அது அன்று அமைச்சர் அதாஉல்லாவின் அதிகாரத்தின் மூலமும், தவம் போன்றவர்களின் ஊடாகவும் பெறப்பட்ட வாக்குகளாகும். ஆனால் அவ்வாறான நிலைமை இன்று இல்லை.
கடந்த தேர்தலையும் விட இம்முறை தேசிய காங்கிரசின் வாக்குகளில் சரிவு நிலை காணப்படுகின்றது. அது மு.காங்கிரசின் செல்வாக்கினை அக்கரைப்பற்றில் உயர்த்தி உள்ளது.
சம்மாந்துறை வரலாற்றில் அதன் பிரதேசசபையை தொடர்ந்து மு. கா ஆட்சி செய்துவந்தது. ஆனால் கடந்த 2௦11 இல் மட்டும் 2,280 வாக்குகள் வித்தியாசத்தில் மு.கா தனது சபையை இழந்தது. அதாவது மு.கா 10,078 வாக்குகளையும், UPFA 12,358 வாக்குகளையும் பெற்றிருந்தது. ஆனால் அந்த நிலைமை தற்போது சம்மாந்துறையில் இல்லை. கடந்த காலங்களையும்விட அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் சம்மாந்துறை பிரதேசசபையினை மு.கா கைப்பேற்றி ஆட்சி அமைக்கும்.
மேலும், ஒலுவில் பாலமுனை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அட்டளைச்சேனை பிரதேசசபை என்றும் இல்லாதவகையில் அதிகப்படியான வாக்குகளை பெற்று மு.கா ஆட்சி அமைக்கும். முகநூல்களில் கூறப்படுவது போன்றல்லாது பாலமுனையில் அன்சில் அவர்கள் அவரது வட்டாரத்தில் வெற்றிபெறுவதற்குரிய எந்தவொரு சாத்தியகூறுகளையும் காணவில்லை.
அதேபோன்று நிந்தவூர் பிரதேசசபையினை மு.கா அதிகப்படியான வாக்குகளை பெற்று ஆட்சி அமைக்கும். முன்னாள் தவிசாளர் தாகிர் அவர்கள் அவரது வட்டாரத்தில் வெற்றிபெறுவார். ஆனாலும் நிந்தவூர் சபையினை அவர்களால் எந்தவகையிலும் கைப்பெற்ற முடியாது.
இறக்காமத்தில் மு.கா வேட்பாளர்களுக்கிடையில் வெட்டுக்குத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள SLFP யின் வேற்பாளர்கள் முற்படுகின்றார்கள்.
எனவே நடைபெறுகின்ற உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிடுகின்ற முஸ்லிம் காங்கிரஸ் கடந்தகாலத்தில் ஆட்சி செய்த அனைத்து சபைகளையும் மீண்டும் கைப்பேற்றும். அத்துடன் அக்கரைப்பற்றின் இரு சபைகளிலும் கடந்த காலங்களையும் விட அதிகமான ஆசனங்களை பெறும்.
இது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளையும்விட அதிகமான வாக்குகளை இந்த தேர்தலில் மு.கா பெற்றுக்கொள்ளும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது