இரண்டாவது ஒலிம்பிக் போட்டி என விளையாட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படும் ''21வது கொமன்வெல்த்'' விளையாட்டு போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெறவிருக்கின்றன.
ஆரம்பத்தில் இந்த போட்டிகளை இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரத்தில் நடத்துவதற்கே கொமன்வெல்த் விளையாட்டு குழு தீர்மானித்திருந்தது ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஹம்பாந்தோட்டையில் அதிக வெப்ப நிலை நிலவுமென்பதால் பல நாடுகள் ஆட்சேபனை தெரிவித்திருந்தது, இதனால் போட்டிகளை வேறொரு நாட்டிற்கு மாற்றுவதற்கு தீர்மானித்த கொமன்வெல்த் விளையாட்டு குழு காலநிலையின் அடிபப்டையில் அவுஸ்திரேலியாவை தேர்ந்தெடுத்து இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளினதும் பெயர்களை வாக்கெடுப்புக்கு விட்டிருந்தது, 43 நாடுகள் அவுஸ்திரேலியாவிற்கு சாதகமாக வாக்களிக்க இலங்கையிடமிருந்து வாய்ப்பு நழுவிப்போனது.
இம்முறை 20 பிரிவுகளின் கீழ் 275 விளையாட்டுக்கள் இடம்பெறவிருக்கின்றன. இம்முறை 24 விளையாட்டு வீரர்கள் இலங்கையை பிரதிநித்துவபடுத்தி கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். தடகள விளையாட்டு, சைக்கிளிங், ரக்பி செவன் ஆகிய போட்டிகளுக்கே இலங்கை தனது வீரர்களை அனுப்பிவைக்க இருக்கின்றது. தடகள விளையாட்டு போட்டிகளுக்கு 12 வீரர்களும், சைக்கிளிங் போட்டிகளுக்கு 5 வீரர்களும், ரக்பி செவன் போட்டிகளில் கலந்து கொள்ள 7 வீரர்களும் என இப்பட்டியலில் அடங்குகின்றனர்.
தடகள போட்டிகளில் :
மஞ்சுள குமார - உயரம் பாய்தல்
பிரசாத் - நீளம் பாய்தல்
சம்பத் ரணசிங்க - ஈட்டி எறிதல்
ஹிருணி விஜேரத்ன - மரதன்
நிமாலி லியனாராய்ச்சி - 800M
கயந்திகா அபேரத்ன - 800M
நதீஷா தில்ஹாணி - ஈட்டி எறிதல் போட்டிகளுக்காகவும்
சுரஞ்சய சில்வா,
ஹிமாஷ ஏஷான்,
செஹான் அம்பேபிட்டிய,
அஷ்ரப் லதீப்,
ஆகியவர்கள் 4*100M அஞ்சலோட்டத்திற்கும் பெயர் குறிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தை பிரதிநித்துவபடுத்தி கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்கு செல்லும் முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்புக்கு சொந்தக்காரராகிறார் அஷ்ரப் லதீப், 4*100M அஞ்சலோட்டத்திற்கு பெயர் குறிப்படப்பட்டுள்ள வீரர்கள் நால்வரும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற அனுபவ வீரர்களே ஆவர், முதல் தடவையாக கொமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக்கொள்ள போகும் இவர்களுக்கு எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
விளையாடுவதற்கும், பயிற்சிகளில் கலந்து கொள்வதற்கும் பொத்துவிலில் ஒரு ஒழுங்கான விளையாட்டு மைதானம் கூட இல்லாத நிலையில் வீதிகளில் ஓடி பயிற்சி செய்து இன்று முழு கிழக்கு மாகாணத்தையும் பிரநித்துவபடுத்தும் சிறுபான்மை இனத்தவனாக கொமன்வெல்த் போட்டிகளில் பங்கெடுக்க தெரிவாகி இருப்பது வளரும் இளைஞர்களுக்கு ஒரு படிப்பினை நிறைந்த சம்பவமாக இருக்கின்றது. 2014ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற லுசிபோனிய விளையாட்டு போட்டியில் தனது தாய்நாட்டிற்காக தங்கம் வென்று திரும்பி இத்தனை நாளாக இவன் எங்கிருந்தான என்று முழு இலங்கை மக்களையும் திரும்பி பார்க்க வைத்தான் அஷ்ரப்.
2016ம் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கமும் ஒரு வெள்ளியும் வென்று நாடு திரும்பிய வேளை அனைத்து அரசியல்வாதிகளும் ஓடிச்சென்று அள்ளி அரவணைத்து நீ எம் தங்க மகன் என்று புகழாரம் சூட்டினர், அனைத்து அரசியல்வாதிகளும் வாழ்த்து பூக்களை சொரிந்தனர், எல்லாவற்றுக்கும் மேலே சென்று விளையாட்டு துறை பிரதியமைச்சர் பொத்துவில் மக்களின் விளையாட்டு தாகத்தை தீர்த்து வைக்க நான் அவர்களுக்கு சகல வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானமொன்றை பரிசளிப்பேன் என்று உறுதி கூறினார், அவர் சொல்லி இரண்டு வருடங்களுக்கும் மேலே கடந்து விட்டது ஆனால் விளையாட்டு மைதானம்தான் கடலில் அமிழ்ந்து போன சிறு கல்லைப்போல் இருக்கிறது, இப்போதுதான் புரிந்தது அவர் உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு தெரிவித்தார் என்பது, உணர்ச்சி வாசப்பட்டு வாக்களிப்பது முஸ்லீம் அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் புதிதில்லையே ?
கல்லிலும் முள்ளிலும் ஓடிய அஷ்ரப் மீண்டும் 2017ம் ஆண்டு கிர்கிஸ்தான் தடகள போட்டிகளில் கலந்து கொண்டு மற்றுமொரு தங்கத்தை தாய்நாட்டுக்காக பெற்றுக்கொடுத்து திறமைகளை வெளிக்காட்ட மைதானங்கள் அவசியமில்லை என்று நிரூபித்தான், இப்படியாக சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்ற அஷ்ரபிற்கு அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளைத்தான் அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை இன்னும் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள் ஆனால் யாரையும் எதிர்பாராது அஷ்ரபின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
பொத்துவில் பிரதேசத்திற்கு என்று ஒரு பொது விளையாட்டு மைதானம் வருமிடத்து அஷ்ரபினாலேயே அவனைப்போன்ற பல திறமையான விளையாட்டு வீரர்களை பயிற்சி கொடுத்து உருவாக்க முடியும் என்பது பலபேரின் கருத்து. அஷ்ரப் என்ற தனி ஒருவனால் முழு கிழக்கு மாகாணமும் கௌரவம் பெறுகின்றது என்பதில் எமக்கெல்லாம் பெருமை.
அரசியல்வாதிகளே ! கடந்த இரண்டரை வருடங்களுக்கு முதல் நீங்கள் அஷ்ரப் என்ற விளையாட்டு வீரனுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்போது நிறைவேற்றி நீங்கள் ஒரு கண்ணியவான் என்பதை நிரூபிக்க போகிறீர்கள் ? அந்த நாள் விரைவில் வந்தால் அது தாய்நாட்டுக்கு பதக்கங்கள் பெற்றுக்கொடுத்து கௌரவித்த ஒரு வீரனை நீங்களும் கௌரவிப்பதன் மூலமாக தாய்நாட்டை கௌரவிக்க நீங்கள் செய்த பங்களிப்புகளில் ஒன்றாக அமையும் என்பது எமது நம்பிக்கை.
வாழ்த்துக்கள் அஷ்ரப்.
-ரஸானா மனாப்-