Top News

நகர அபிவிருத்தியின் கீழ் புதிய கொழும்பு ஒன்றை உருவாக்குவோம் - பைஸர் முஸ்தபா



ஐ. ஏ. காதிர் கான் 


கே: நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றி, முஸ்லிம்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை என்ன...?

ப: முஸ்லிம்களில் 99  சதவீதமானோர், 2015 ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார்கள் என்பதே உண்மை. ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டுவந்த பெருமை முஸ்லிம்களுக்கு உண்டு. அந்த நிலைப்பாட்டை, சகல முஸ்லிம்களும் நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் நிச்சயம் எடுப்பார்கள் என, நான்  நம்புகின்றேன். 

கே: இத்தேர்தலில் முஸ்லிம்களின்  நிலைப்பாடு என்ன...?

ப: முஸ்லிம்கள் இன்றும்கூட ஜனாதிபதியுடனேயே உள்ளனர். முஸ்லிம்கள் செறிந்து வாழும் இடங்களில் பெரும்பான்மையான உள்ளூராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுமே கைப்பற்றும். குறித்த கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதி. முஸ்லிம்களும் வாக்களிக்கத் தயாராக உள்ளனர். 

கே: தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முஸ்லிம் தலைமைகளின் நிலைப்பாடு என்ன...?

ப: இத்தேர்தல் காலத்தில்கூட, முஸ்லிம் தலைமைத்துவக் கட்சிகளின் தலைவர்கள்  மக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆளுக்காள் சொல் அம்புகளைப் பாவித்து, உள்ளங்களில் குத்திக் கொண்டிருக்கின்றார்கள்.  முஸ்லிம்களுக்கு எப்பணிகளை முன்னெடுக்க  வேண்டும் என்பதை மறந்து விட்டார்கள். இத்தலைமைகள் ஒன்றுபட்டால்தான், முஸ்லிம்களின் வாழ்வில் விடிவு பிறக்கும் என்பதை உணர்ந்து கொண்டு, அதற்கான ஆயத்தங்களை முன்னெடுக்க முன்வர வேண்டும். 

கே: உங்களுடைய அரசியல் பற்றி நீங்கள் கூறுவது என்ன...?

ப: நான் அரசியலில் ஈடுபட்டாலும், சமூக நோக்காகக் கொண்டுதான்  செயற்படுகின்றேன். முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்துக் கொண்டு அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டால், எக்கட்சியாக இருந்தாலும், அதிலிருந்து  வெளியேறத் தயாராகவே  உள்ளேன். 

கே: உங்களால் முஸ்லிம்களுக்கு ஏதாவது நன்மைகள் ஏற்பட்டதுண்டா...?

ப: ஆம், நிறையவே முஸ்லிம்களுக்காகச் செய்துள்ளேன். முஸ்லிம் சமூகத்துக்குப் பிரச்சினைகள் ஏற்படும்போது துணிந்து, உயிரையும் துச்சமென மதிக்காது, நடு நிசி வேளையிலேயே சம்பவ இடத்துக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களின் குறை தீர நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றேன். ஏனைய தலைமைகளை விட அவ்விடத்தில் நான் முதல் நிலையாக நின்று, அவர்களுக்காகப் போராடி, தீர்க்கமான முடிவுகளையும் பெற்றுக்கொடுத்துள்ளேன். உதாரணமாக, கிறேண்ட்பாஸ், அழுத்கம, பேருவளை, கிந்தோட்டை போன்ற இடங்களில் நடந்த கசப்பான சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.

கே: இக்காலப் பகுதியில் உங்கள் தேர்தல் பிரசாரப் பணிகள் பற்றிக் கூறுவீர்களா...?

ப: "இனங்களுக்கு இடையே ஐக்கியம்" என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதியின் குறிக்கோளை நிறைவேற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்மேளனம் முன்வந்துள்ளது. இச் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் என்ற வகையில்  எனது முயற்சியுடன், குறித்த இரு கட்சிகளின் முஸ்லிம் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யும் பாரிய செயற்திட்டங்கள், தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்புப் பிரதேசத்தில் கோட்டை, புறக்கோட்டை,  மருதானை, புதுக்கடை, கிறேண்ட்பாஸ், ஆமர் வீதி, ஜிந்துப்பிட்டி, கொட்டாஞ்சேனை போன்ற இடங்களில் மிகப் பிரமாண்டமான முறையில் பிரச்சாரப் பணிகள் எனது தலைமையின் கீழ் இடம்பெற்று வருகின்றன.  கடந்தவார இறுதியில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் சென்று,  பல கிராமங்களில் முஸ்லிம் அபேட்சகர்களை ஆதரித்து, தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டேன். அப்பிரதேசங்களிலெல்லாம் முஸ்லிம் மக்கள் மிகுந்த ஆரவாரத்துடனும்,  ஆர்வத்துடனும் எம்மை வரவேற்றார்கள். முஸ்லிம் மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றார்கள்.

கே: நல்லாட்சி அரசாங்கம் பற்றி,  முஸ்லிம்களுக்கு என்ன கூற நினைக்கிறீர்கள்...? 

ப: நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ஏற்படுத்திய ஜனநாயகம், ஊடக சுதந்திரம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி போன்றவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இடமளிப்பதா.
.? அல்லது கடந்த மஹிந்த ராஜபக்ஷ் ஆட்சி காலத்தில் தலை விரித்து ஆடிய ஜனநாயக விரோத செயற்பாடுகள், எமது நாட்டில் மீண்டும் தலைதூக்க இடமளிப்பதா...? என்பதை, நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 

கே: இத்தேர்தலை நீங்கள் எந்தக் கோணத்தில் காண்கிறீர்கள்...?

ப: இத்தேர்தல், எதிர்கால அரசியலைத் தீர்மானிக்கக் கூடிய மிக முக்கியமான ஒரு தேர்தலாகும். ஜனாதிபதித் தேர்தலை, பொதுத் தேர்தலை விட, இந்தத் தேர்தல் மிக அவசியமானதாகக் காணப்படுகிறது. ஆகவே, முஸ்லிம் கள் இதில் முழுப் பயனையும் அடையக் கூடிய வகையில், தங்களது  வாக்குகளை அந்தந்த வட்டாரங்களில் களமிறங்கியுள்ள்ள வேட்பாளர்களுக்கு அளித்து, அவர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம் தான், தமது தன்மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

கே: விருப்பு வாக்கில்லாத இத்தேர்தலினால் மக்களுக்கு ஏதாவது நன்மைகள்  உள்ளதா...?

ப: விருப்பு வாக்கு முறைமையினால் மக்களிடத்தில் பாரிய பிரச்சினை காணப்பட்டு வந்தது. இந்தத் தேர்தல் முறையினூடாக விருப்பு வாக்குகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தங்களது பிரதேசங்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான், ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும். இத்தேர்தல் ஊடாக, ஊழல் அற்ற நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளார். எனவே, ஊழலற்ற ஆட்சியை முன் கொண்டு செல்வதற்கு, முஸ்லிம்கள் தொடர்ந்தும் ஸ்ரீல.சு.கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் தமது ஆதரவுகளை வழங்க முன் வரவேண்டும். 

கே: இனவாதத்தைத் தூண்டும் கட்சிகள் பற்றி...?

ப: நாட்டில் இனவாதத்தைத் தூண்டும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிக்கக் கூடாது. சமூகத்தைக் காட்டிக் கொடுக்காத பிரதான கட்சிகளுக்கே முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் கட்சிகள், நாட்டின் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் சீர் குழைக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன. இதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாயின், நாட்டின் பிரதான கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும். 

கே: கொழும்பு வாழ் மக்கள் பற்றி ஏதாவது கூற முடியுமா...?

ப: இன்று கொழும்பில் கழிவறை வசதிகள் மற்றும் குப்பை அகற்றும் திட்டங்களில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் நிரந்தர வீடுகளின்றி அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கொழும்பில் கல்வித்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடை நடுவில் கை விட்டு, நடை பாதை வியாபாரிகளாகவும், முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாகவும் மாறிவருகிறார்கள். இந்நிலைமைகளை நாம் மாற்றி அமைத்து, புதிய கொழும்பு ஒன்றை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளோம். 

கே: கொழும்பு மக்களுக்கு ஏதாவது செய்துள்ளீர்களா...?

ப:  மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு  மிக முக்கிய தேவையாகவிருந்த, கொழும்பு ஜிந்துப்பிட்டி  பிரதேசத்தில் 70 வருட காலமாக நிலவி வந்த குடி நீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஐந்து மணித்தியாலங்களுக்கு மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்நீர் விநியோகம், தற்போது 24 மணி நேரமும் எவ்விதத் தங்கு தடைகளுமின்றி இப்பிரதேச மூவின மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கொழும்பு மா நகர முன்னாள் உறுப்பினர் துஷார ஹேமந்த மஞ்சு, இதனை என்னிடம் தெரியப்படுத்தியிருந்தார். நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததை அடுத்து, தற்போது இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதை நான்  பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். 

பேட்டி கண்டவர்: 

ஐ. ஏ. காதிர் கான்
Previous Post Next Post