ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக யானை சின்னத்தில் போட்டியிடும் கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து இடம் பெற்ற பொதுக்கூட்டம் நேற்று 31.01.2018 வாழைச்சேனையில் இடம் பெற்றது. இதில் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலியின் அழைப்பின் பெயரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.
இதன் பொழுது வாழைச்சேனை மக்களின் நீண்ட கால முக்கிய பிரச்சனையாகவும், காலத்துக்கு காலம் தேர்தல் வருகின்ற பொழுது முக்கிய பேசும் பொருளாகவும், அரசியல் ஆயுதமாகவும், வாழைச்சேனை மக்களை ஏமாற்றும் வித்தையாகவும் பாவிக்கப்பட்டு வரும் வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என்ற வாக்குறுதியானது வாழைச்சேனை மக்களுக்கு அன்றாடம் இரவு பகலினை மாறி மாறி கான்பதை போன்ற விடயமாக மாறியுள்ள விடயம் கருப்பொருளாக மீண்டும் பார்க்கப்பட்டது.
அந்த வகையில் நேற்று வாழைச்சேனையில் இடம் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுக்கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமையும் அமைச்சருமான றிசாட் பதுர்டீன் முன்னிலையில் பிரதி அமைச்சர் அமீர் அலி உரையாற்றும் பொழுது பிரமரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதமர் உரையாற்றும் பொழுது
வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவதற்கு சகலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.
இந்த வாக்குறுதியானது கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தின் பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையின் அழைப்பின் பெயரில் சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாய்ந்தமருது மக்களுக்கு கல்முனை மாநகர சபையில் இருந்து தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என வழங்கிய வாக்குறுதியை போன்று பகற்கனவாக மாறுமா/? என்ற கேள்வி பரவலாக எழுப்படுவது மட்டுமல்லாமல் அது ஓர் நிதர்சமான கேள்வியாகவும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது..
கல்குடாவின் அரசியல் தலைமையாக இருக்கின்ற பிரதி அமைச்சர் அமீர் அலி இவ்வாறு முக்கியமான கால கட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அழைத்து வந்து வாழைச்சேனை மக்கள் அரசியல் ரீதியாக உண்மையில் எதிர்பார்க்கின்ற வாழைச்சேனைக்கான தனியான பிரதேச சபைக்கான பிரதமரினால் வழங்கப்பட்ட குறித்த வாக்குறுதியினை அடுத்த தேர்தல் வருவதற்கு முன்னர் பெற்று கொடுப்பாரானால் முஸ்லிம் காங்கிரசிற்கு காலாகாலமாக வாக்களித்து வருகின்ற வாழைச்சேனை பிரதேசத்து மக்கள் குறித்த பிரதேசத்தினை ஓட்டமாவடியினை விடவும் அமீர் அலியின் கோட்டையாக மாற்றி அமைப்பார்கள் என்பது எனது ஆணித்தரமான கருத்தாக இருக்கின்றது.
மாறாக இதுவும் ஒரு வகையான எல்லோராலும் தேர்தல் காலங்களில் வழங்கப்படுகின்ற வாக்குறுதியினை போன்று அமீர் அலியினுடைய தேர்தல் வாக்குறுதியாக அமையுமானால் உண்மையில் வாழைச்சேனை மக்கள் ஏமாற்றப்படுகின்றார்கள் என்பதற்கு அப்பால் பிரதி அமைச்சர் அமீர் அலியினுடைய அரசியல் பூசியத்திற்கு தள்ளப்படுகின்றது என்பதே மக்களுடைய தீர்ப்பாகவும், விடையாகவும் இதற்கு பிறகு வருகின்ற தேர்தலில் வெளிக்காட்டப்படும்.
மேலும் கடந்த காலங்களில் சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையினை பெற்றுத்தருவோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை கொண்டு வந்து வாக்குறுதியை வழங்கியதற்கு பிற்பாடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அமைச்சர் பைசர் முஸ்தபாவை கொண்டு வந்து வாக்குறுதியினை வழங்கி அம்மக்கள் இரண்டு கட்சிகளாலும் ஏமாற்றப்பட்டதன் பலனாக இன்று சாய்ந்தமருது மக்கள் தனித்து நின்று அரசியல் செய்யும் நிலையை மட்டுமல்லாது இரண்டு கட்சிகளுக்கும் சாய்ந்தமருதிற்குள் சுதந்திரமாக அரசியல் செய்யும் நிலைமை இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று எதிர்காலத்தில் வாழைசேனை மக்களும் அவ்வாறான முடிவுக்கு தள்ளப்பட கூடாது என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரசும், கல்குடாவின் அரசியல் தலைமையுமான பிரதி அமைச்சர் அமீர் அலியும் எவ்வாறான முனைப்புடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழைச்சேனை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை நிறைவேற்றி கொடுக்க இருக்கின்றார்கள் என்பதே வாழைச்சேனை மக்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்லாமல் முழு கல்குடாவின் பார்வையுமாக இருக்கின்றது. பொறுத்திருபோம் காலம் பதில் சொல்லும் வரைக்கும்.