Top News

நல்லாட்சி மீது குற்றம் சுமத்தும் மஹிந்த!


ஏற்கனவே பெற்றுக்கொண்ட கடனை  செலுத்த முடியாது திண்டாடுகின்ற நல்லாட்சி அரசாங்கம் பாராளுமன்ற நிதி அதிகாரங்களுக்கு அப்பால் சென்று சர்வதேசத்திடம் கடனை நிதி அதிகாரங்களுக்கு பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காகவே நிதி நிலுவை முகாமைத்துவம் எனும் புதிய சட்டத்தினை கொண்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். 
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
வருடம்தோறும் பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்படுகின்ற கடன் எல்லைக்கு அப்பாற்சென்று ஒரு ரில்லியனை தேசிய மற்றும் சர்வதேச நிதி நிலுவைகள் ஊடாக கடனாகப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் புதிய சட்டம் ஒன்றை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி நிலுவையை முகாமைத்துவப்படுத்தல் எனும் போர்வையில் மேற்படி சட்ட மூலம் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. 
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே முறையான பொறுப்பு கூறல் அற்ற கடன் பெறும் கொள்கைகளையே பின்பற்றி வருகின்றது. சுதந்திரத்திற்கு பின்னரான பிரதான அபிவிருத்தி நடவடிக்கைகள் பல என்னுடைய ஆட்சி காலத்திலேயே முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் அப்போது நாம் பெற்ற கடன் தொகை வருடத்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டொலராகவே காணப்பட்டது.   2015 ஆம் ஆண்டு தொடக்கம் அவ்வாறான பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இருந்த போதும் கடந்த மூன்று வருட காலத்துக்குள் இந்நல்லாட்சி அரசாங்கம் சுமார் 7.7 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெற்றுள்ளது.
 கடந்த மூன்று வருட காலத்திற்குள் சர்வதேச நாணய நிதியக் கடன் உள்ளிட்டதாக 9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் அரசாங்கத்தால் பெறப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்நிய செலாவணியை அடிப்படையாக்க கொண்டு பெறப்பட்ட கடன் 16.7 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். இக்காலப்பகுதியில் இவர்கள் பெற்ற மொத்த கடன் இலங்கை ரூபாயிலே சுமார் 6 டிரில்லியன்கள் ஆகும். இந்நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த முதல் வருடத்தில் இருந்து கடன் பெறுதல், மீளக் கடன் செலுத்துதல், கடனை மீளச் செலுத்துவதற்காக கடன் பெறுதல் என்பவற்றையே மீண்டும் மீண்டும் முன்னெடுத்துள்ளது. என்னுடைய ஆட்சி காலத்தின் இறுதியில் அதாவது 2014 டிசம்பரில் 71 சதவீதமாக இருந்த மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையிலான கடன் பெறுகை 2015 ஆம் ஆண்டின் இறுதியில் வெறும் 12 மாதங்கள் என்கிற குறுகிய காலப்பகுதியில் 81 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் இலக்கம் 16-371 என்ற  அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு இறுதியில் இது 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என பேரதனைப் பல்கலைகழகத்தின் விரிவுரையாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலே தந்திரமான முறையில் வெற்றி பெற்றதன் பின்னரே நல்லாட்சி அரசாங்கத்தின் பாரிய கடன் பெறும் நடவடிக்கை ஆரம்பித்தது. அவ்வருடத்திலே இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வழங்கப்பட்ட விஷேட கொடுப்பனவுகள் மற்றும் மானியங்கள் , எரிவாயு மற்றும் நுகர்வு பொருட்களின் விலை குறைப்பு என்பன காரணமாக அதிகரித்த அரசாங்கத்தின் செலவினை ஈடு செய்வதற்காகவே இவ்வாறு கடன் பெறவேண்டிய நிலை ஏற்பட்டது. 
என்னுடைய ஆட்சி காலத்திலே இடம்பெற்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட கடனை மீள செலுத்துவதற்காகவே இப்போது கடன் பெறுவதாக நல்லாட்சி அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அது முழுப்பொய் ஆகும். என்னுடைய ஆட்சியிலே மேற்கொள்ளப்பட்ட நுரைச்சோலை அனல்மின் நிலையம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை , அம்பாந்தோட்டை துறைமுகம் , கொழும்பு -  கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்தள விமான நிலையம் ஆகிய அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான முழு செலவு 3.9 பில்லியன் அமெரிக்க டொலரை விட குறைவாகும். அத்தோடு இப்பணிகளுக்காக பெறப்பட்ட அனைத்து கடன்களும் குறைந்த வட்டி வீதத்தில் பெறப்பட்ட நீண்ட காலக்கடன்கள் என்பதால் அவற்றை மீளச் செலுத்துவதில் பொருளாதாரத்திற்கு பெருமளவு பாதிப்புக்கள் ஏற்படாது. 
கடந்த ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகவியளாலர் சந்திப்பொன்றில் கல்ந்து கொண்டிருந்த போது எனது ஆட்சி காலத்திலே 10 டிரில்லியன் ரூபா கடன் பெறப்பட்டுள்ள போதும் 1.1 டிரில்லியன் ரூபா மதிப்பிலேயே அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய 9 டிரில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என தெரியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு கடந்த உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் இறுதி நாளான பெப்ரவரி 7 ஆம் திகதி கணக்காய்வாளர் நாயகம் ஊடகவியளாலர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதன் போது கடந்த 10 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட கடன்கள் அரச வியாபார நிலையங்கள் மற்றும் வேறு அரச நிறுவனங்களில் முதலிடப்பட்டுள்ளன என்கின்ற போர்வையில் முடக்கப்பட்டுள்ள காரணத்தினால் தற்போது இலங்கையின் மொத்த கடன்  சுமையின் அளவினை எவராலும் கூற முடியாது என்று அவர் குறிப்பிட்டார். தற்போது இலங்கையின் கடன் தொகை 10 டிரில்லியன் எனும் போதும் எழுத்துமூல அறிக்கைகளில் 1.1 டிரில்லியன் ரூபா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும் இறுதி தருணம் வரை முடிவுகளை மாற்றி அமைப்பதற்கு அரசாங்கம் பல்வேறு சூழ்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டமையை அனைவரும் அறிவர். எமது அரசியல் அமைப்பின் 154 ஆவது உறுப்புரிமையில் அனைத்து அரச நிறுவனங்கள் , உள்ளுராட்சி மன்றங்கள் , உள்ளுராட்சி மன்றங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் அரசிற்கு 50 வீதத்திற்கு மேல் உரிமையினைக் கொண்ட வியாபார நிறுவனங்கள் அனைத்திற்கும் கணக்காய்வினை மேற்கொள்வதே கணக்காய்வாளர் நாயகத்தின் பணி என குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆகையினால் அரசின் மற்றும் அரச நிறுவனங்களின் கடன் தொகை பற்றி தமக்கு தெரியாது என கணக்காய்வாளர் நாயகம் கூறுவது பொருத்தமற்றது. இலங்கையின் அரச பாதீடானது புதுப்பிக்கப்பட்ட நிதி முறைமை அடிப்படையிலேயே தயாரிக்கப்படுகின்றது. இம்முறை தேசிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இம்முறையின் கீழ் வரவு , செலவு அறிக்கைப்படுத்தப்படுவதோடு நிலுவை , அரச சொத்து பெறுமானம் என்பன கருத்திற்கொள்ளப்படுவதில்லை. 
எமது நாட்டில் பிரதான அரச பதவிகளுக்கு ஜனாதிபதினாலேயே அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். கணக்காய்வாளர் நாயகம் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய கருத்துக்களுக்கு காரணம் இப்போது தெளிவாகின்றது.   கணக்காய்வாளர் நாயகம் தனது பொறுப்பை சரியாக நிறைவேற்றாமல் கடந்த 10 வருட காலத்தில் பதவியில் இருந்த அரச அதிகாரிகள் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையையும் கேள்விக்குறி ஆக்கியுள்ளார்.
நேரடி நிதி நிலுவை முகாமைத்துவம் எனும் போர்வையில் மேலும் கடனைப் பெறுவதற்கு  நல்லாட்சி அரசாங்கம் தந்திரமான வகையில் முயற்சிக்கின்றது. மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் ஏற்பட்ட பாரிய நட்டம் குறித்து அனைவருக்கும் தெரியும். எனவே அது குறித்து தனியாக எதையும் கூறத்தேவையில்லை. எனவே பொதுமக்கள் தெளிவோடு சிந்தித்து நேரடி நிதி நிலுவை முகாமைத்துவம் தொடர்பான சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
Previous Post Next Post