எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகள் யாவும் நாளை மறுதினம் புதன்கிழமை நள்ளிரவு 12 மணிமுதல் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் இறுதிக் கட்ட பிரசாரப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒருசில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான கட்சிகள் கடும் பிரசார செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைப்படி நாளை மறுதினம் 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்.
இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தலானது கலப்பு முறைமையில் நடைபெறவுள்ளது. அதாவது தொகுதி மூலம் 60 வீதமான உறுப்பினர்களும் விகிதாசாரம் மூலம் 40 வீதமான உறுப்பினர்களும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படுவார்கள். மேலும் விருப்பு வாக்கு முறைமை இந்த தேர்தல் முறையில் இல்லை என்பதுடன் பெண்களுக்கான இடஓதுக்கீடு 25 வீதமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக களமிறங்கியுள்ளனர்.
தற்போதைய நிலைமையில் நாட்டில் 341 உள்ளூராட்சிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் புதிய தேர்தல் முறைப்படி இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பு நடைபெறும். சனிக்கிழமை காலை ஏழு மணிமுதல் மாலை 4 மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும்.
இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது நாட்டில் 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.