கொழும்பு - பங்குச் சந்தை ஒழுங்கு செய்யும் “இன்வஸ்ட் லங்கா” மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்புக்காக எதிர்வரும் 2 ஆம் திகதி சிங்கப்பூர் ஃபேசீசன்ஸ் ஹொட்டலில் நடக்கும் இந்த மாநாட்டில், பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்கு முன்னர் இந்த மாநாடு, பிரித்தானியா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், இந்தியா , சுவிட்ஸர்லாந்து, ஹொங்கொங் ஆகிய நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.
இந்த வருடம் இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்பட்டன. உடன்படிக்கை மூலம் இலங்கைக்கு கிடைக்கும் பிரதிபலன்களை அதிகரிக்க இந்த மாநாடு உதவும் எனக் கூறப்படுகிறது.
சிங்கப்பூர், வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பலர் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் ரணிலை பதவி நீக்கம் செய்ய கட்சிக்குள்ளும் கூட்டு எதிரணியும் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு வெளிநாடு செல்வது குறிப்பிடத்தக்கது.