Top News

சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றக் கோரிக்கை கல்முனையின் முஸ்லிம் அதிகாரத்திற்கு ஆபத்து இல்லை!



கடந்த 02.02.2018இல் கல்முனைக்குடி ஆஸாத் பிளாஸா மண்டபத்தில் சட்டத்தரணி வை.எல்.எஸ்.ஹமீட் ”கல்முனை மாநகர சபைத் தேர்தலும் சூழ்ந்துள்ள ஆபத்துக்களும்” என்ற தலைப்பில் பகிரங்க உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இதற்குச் சில தினங்களுக்கு முன்னர் இந்தக் கருத்துக்களை உள்ளடக்கி அவரது முகநூல் பக்கத்தில் கட்டுரையும் எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி உரையிலும் கட்டுரையிலும் பல்வேறு அரசியல் விடயங்கள் குறித்து அவர் பேசியிருந்தாலும் அவற்றில் பின்வரும் கருத்துக்கள் தொடர்பில் மாற்று வாசிப்பொன்றறைச் செய்ய வேண்டிய கட்டாயத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், ஆசனப் பங்கீடுகள், ஆட்சியமைப்பதற்குரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை, சாய்ந்தமருதுக்கென்று உள்ளூராட்சி மன்றக் கோரிக்கையை மையப்படுத்தி நிறுத்தப்பட்டிருக்கின்ற சுயேற்சைக்குழு தொடர்பிலான விமர்சனம், மற்றும் அக்குழுவினர்கள் மேற்கொண்ட பைஅத் விடயத்தில் பிழையான கருத்துக்களை முன்வைத்தல் என்பன உண்மைக்குப் புறம்பானதாக அமைந்திருப்பதினாலாகும்.

கல்முனை மாநகர சபைக்கு மொத்த ஆசனங்கள் நாற்பதாகும். இதில், இருபத்திரெண்டு தனி அங்கத்துவவ வட்டாரங்களும் ஒரு பல் அங்கத்துவ வட்டாரம் (இரட்டை அங்கத்துவம்) என்ற அடிப்படையில் இருபத்திநான்கு உறுப்பினர்களும், பதினாறு விகிதாசார உறுப்பினர்களும் தெரிவாக வேண்டும்.
எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறப்போகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017ஆம் ஆண்டுக்குரிய வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நிகழவிருக்கின்றது. 

74,944 பேர் கல்முனை மாநகர சபையில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுள் முஸ்லிம் வாக்காளர்கள் 54,078 பேர் ஆகும். இதில் சாய்ந்தமருதில் 19,306 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் நீங்கலான ஏனைய பகுதி முஸ்லிம் வாக்காளர்களின் தொகை 35,046 பேர் ஆகும். தமிழர்களின் வாக்குகள் 20,666 பேர் சுமார் 200 அளவிலான சிங்கள வாக்களர்களும் இங்கு உள்ளனர்.

”நடைபெறப்போகின்ற கல்முனை மாநகர சபை தேர்தலில் சாய்ந்தமருது 11 ஆசனங்களும், தமிழர்கள் 12 ஆசனங்களையும் கைப்பற்றினால் மிகுதியாக இருக்கின்ற 17 ஆசனங்களையே சாய்ந்தமருது நீங்கலான முஸ்லிம்கள் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பு அமையும். அப்படியாயின். 17 ஆசனங்களைக்கொண்ட முஸ்லிம்கள் எவ்வாறு கல்முனை மாநகர சபை ஆட்சியை கைப்பற்ற முடியும். ஏனெனில் 21 ஆசனங்கள் இங்கு ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு தேவையாக இருக்கின்றது.”

இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பதில் இரண்டு மயக்க நிலைகள் காணப்படுகிறது. ஒன்று பொதுவாக 21 ஆசனம் இல்லாமல், ஆட்சி அமைக்க முடியாது என்பதும், மற்றொன்று கூட்டாட்சி முறைமை இன்றைய உள்ளூராட்சி அமைப்பில் இல்லை என்கின்ற கருத்தையுமே தருகின்றது. 

இந்தக் கருத்து என்பது புதிய உள்ளூராட்சி முறைமை தொடர்பிலான போதிய விளக்கமின்மையினால் வெளிப்படுத்தப்படுகின்றதா? அல்லது சந்தேகமான விளக்கங்களைக் கொடுத்து மக்களை தான் விரும்பாத ஒரு கட்சிக்கு எதிராக திருப்புவதற்காக முன்வைக்கின்றாரா? அல்லது சாய்ந்தமருது சுயேட்சைக் குழுவுடைய நோக்கத்தை பிழையாக காண்பிப்பதற்கு அடித்தளம் இடுகின்றாரா? என்கின்ற சந்தேகமும் இதற்குள் வலுவாக இருக்கின்றது.

பொதுவாக இந்த புதிய உள்ளூராட்சி முறைமையில் இரண்டு வகையில் ஆட்சி அதிகாரம் அமைவதை அனுமதிக்கின்றது. ஒன்று ஒரே கட்சியை சார்ந்த அல்லது ஒரு சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் மட்டும் இணைந்து ஆட்சி அமைப்பது. மற்றொன்று பல கட்சி உறுப்பினர்கள், சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் கூட்டிணைந்து ஆட்சி அதிகாரத்தை நடத்திச் செல்வது. இந்த அடிப்படையில் கல்முனை மாநகர சபை தேர்தலில் எந்த கட்சி என்றாலும் சரி அல்லது சுயேட்சை குழு என்றாலும் சரி தனித்து ஆட்சி அமைப்பதாயின் சுமார் 21 ஆசனங்களை பெற வேண்டும். இது இங்கு மட்டுமல்ல, இந்த நாட்டில் அமைந்துள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கும் பொதுவான ஒரு விடயம்தான்.ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த ஆசனங்களில் 50 வீதத்திற்கு குறையாத உறுப்பான்மையைக் கொண்ட கட்சி அல்லது சுயேட்சைக்குழு தனித்து ஆட்சி அமைக்கின்ற தகுதியை பெறுகின்றபோது கையாள வேண்டிய சட்டமாகும்.

கல்முனை மாநகர சபை தேர்தல் களத்தில் இன்று காணப்படுகின்ற தேர்தல் களநிலவரம் என்பது இங்கு வாழ்கின்ற பிரதான சமூகங்களான முஸ்லிம், தமிழர்கள் ஆகியோர்களுக்கிடையே இரண்டு விதமான பாங்குகளை அல்லது போட்டி நிலைகளை வெளிப்படுத்தி நிற்கின்றது. கல்முனை மாநகர சபை எல்லையினுள் வாழ்கின்ற 20,666 தமிழ் மக்களுடைய வாக்குகளை முன்னிறுத்தி இரண்டு சின்னங்கள் முன்னிலைப்போட்டிக்குள் உள்வாங்கிக்காணப்படுகின்றது. அது வீடு, உதயசூரியன் சின்னத்துக்கான போட்டி நிலையாகும். இருந்தாலும், தமிழ் மக்களுடைய பெரும்பாலான வாக்குகள் வீட்டுச்சின்னத்தை நோக்கி அளிக்கப்படும் என்பதில் சிறிய சந்தேகம் கூட கொள்ளத்தேவையில்லை என்கின்ற நிலை காணப்படுவது மிகப்பகிரங்கமானது.

என்றாலும், இங்கு வாழ்கின்ற மொத்த தமிழ் மக்களுடைய வாக்குப் பலத்துக்குரிய உறுப்பினர் தொகை 11 ஆகும். வாக்களிக்கப்படுகின்ற விதத்தைப்பொறுத்தும், வீத அதிகரிப்பை வைத்தும் கலப்புத்தேர்தல் முறைமையின் அடிப்படையிலும் உச்ச பட்சமாக தமிழர் பிரதிநிதித்துவம் 12ஐத் தாண்டி செல்வதற்கு எந்த விதமான ஏதுக்களுக்கும் இல்லை என்பதும் மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்.

கல்முனை மாநகர சபை எல்லையினுள் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுடைய வாக்குகள் 54,078 ஆகும். இந்த வாக்குப்பலத்திற்கு 28 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். இது வாக்களிப்பு வீதத்தையும், விதத்தையும் பொறுத்து 29வரை செல்ல முடியும். அவ்வாறு நிகழ்ந்தால், தமிழர்கள் 11 ஆசனங்களுக்கு மேல் பெறுவதற்கு வாய்ப்பில்லை. என்றாலும் கல்முனை மாநகர சபை தேர்தலில் முஸ்லிம் மக்களுடைய அரசியல் களம் பல்முனைப் போட்டியாக காணப்படுகின்றது.

இதில் சாய்ந்தமருது மக்களுடைய மொத்த வாக்குகள் 19,306 ஆகும். இதன்படி இவர்கள் மொத்தமாக ஒரு கோணத்தை நோக்கி வாக்களித்தாலும், 11 ஆசனங்களைப் பெற முடியும். ஆனால் இங்கு காணப்படுகின்ற அரசியல் களநிலவரமும், இதுகாலவரை அளிக்கப்பட்டு வந்த வாக்கு வீதங்களை வைத்தும் பார்க்கின்றபோது, இவ்வூரிலிருந்து 13,000 – 14,000 வரை வாக்குகளே பதிவாகக்கூடிய நிலை உள்ளது. இத்தொகைக்கு 08 ஆசனங்களை தாண்டுவதற்கு வாய்ப்பில்லை. ஆயினும், இங்கு அளிக்கப்படுகின்ற 14,000 வாக்குகளில் 9,000 தொடக்கம் 10,500 வரை தோடம்பழ சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயேட்சைக்குழு பெறக்கூடிய வாய்ப்பிருப்பதாகத்தான் பெரும்பாலான கருத்துக்கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 08 அல்லது 09 ஆசனங்களை இந்த தேர்தல் முறைமையின் காரணமாக சாய்ந்தமருது பெறலாம்.

கல்முனை மொத்தத் தமிழர்களின் பிரதிநிதித்துவம் 12 ஆகவும் , சாய்ந்தமருது மக்களின் பிரதிநிதித்துவம் 09 ஆகவும் அமைகின்ற போது ஏனைய முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவம் 19 ஆக வரக்கூடும். இங்கு வை.எல்.எஸ்.ஹமீட் குறிப்பிடுவது போல் 17 உறுப்பினர்களாக வந்தாலும், அல்லது 19 ஆசனங்களாக வந்தாலும் தனித்து ஆட்சி அமைக்கின்ற சந்தர்ப்பம் என்பது இழக்கப்படுகின்றதேயன்றி கல்முனை மாநகர சபையின் முஸ்லிம் ஆதிக்கம் குறைவதற்கோ அல்லது முஸ்லிம்களுடைய ஆட்சி அதிகாரம் நிலைநாட்டப்படாமல் போவதற்கோ வாய்ப்பில்லை.

வை.எல்.எஸ்.ஹமீட் அபிப்பிராயப்படுவதுபோல் 17 ஆசனங்கள், அல்லது நான் குறிப்பிடுகின்ற 19 ஆசனங்கள் வருகின்ற போதும் தனித்து ஆட்சி அமைப்பதற்கு தேவையான 21 ஆசனங்கள் இல்லாமல் ஆகின்றது. அப்படியானால், அடுத்த கட்டமாக அங்கு என்ன நடைபெறும் என்பதை அவரது உரையிலோ எழுத்திலோ குறிப்பிடாமல் தவிர்த்திருப்பதானது அவரிடம் வேறு உள்நோக்கங்கள் இருப்பதைக் காட்டுமேயன்றி சட்டத்தை உண்மைக்கு உண்மையாகச் சொன்னவராக ஆகாது.

66ஆ (1) ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேற்சைக்குழு உள்ளுர் அதிகார சபையொன்றின் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையில் ஐம்பது சதவீதத்தை அல்லது அதனிலும் கூடுதலாகப் பெற்றுள்ளவிடத்து ஆணையாளர் உள்ளுர் அதிகார சபையின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அறுபத்திஆறாம் பிரிவின் (2)ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையாளரால் வெளியிடப்பட்தன்மீது விடயத்திற்கேற்ப அத்தகைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை அல்லது சுயேற்சைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களிடையேயிருந்து அத்தகைய உள்ளுர் அதிகார சபையின் மாநகர முதல்வராகவும் பிரதி மாநகர முதல்வராகவும் யார் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளிப்படுத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்குமாறு விடயத்திற்கேற்ப அத்தகைய அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சியின் செயலாளருக்கு அல்லது சுயேற்சைக் குழுத் தலைவருக்கு அழைப்பு விடுத்தல் வேண்டும். (2012ஆம் ஆண்டின் 22ஆம் உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் – 66ஆ (1) ).

இது எந்த உள்ளூராட்சி மன்றமாயினும் அங்கு தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவைப்படுகின்ற ஆசனத்தைப் பற்றி பேசுகின்ற பகுதியாகும். இதனை வைத்து கல்முனை மாநகர சபையின் அரைவாசிக்கு மேற்பட்ட ஆசனம் அல்லது தனித்து ஆட்சியமைப்பதற்கு தேவைப்படுகின்ற மொத்த ஆசனத்தின் குறைந்தபட்ச எல்லையான இருபத்தியொன்று என்பதை மட்டும் விபரித்துவிட்டு, ஏனைய ஏற்பாடு பற்றி விளக்காது விலகிச் சென்றிருப்பதானது வை.எல்.எஸ்.ஹமீட்டிற்கு வேறு உள்நோக்கம் இருந்தது என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டுவதாகவே கொள்ள வேண்டும்.

அவரது அபிப்பிராயத்தின்படியும் அவர் எடுத்துக்கொண்ட உதாரணத் தொகையின் அடிப்படையிலும் கல்முனை மாநகர சபையில் தனித்து ஆட்சியமைக்க முடியாத எண்ணிக்கையான பதினேழை குறிப்பிட்டிருக்கிறார். அப்படியாயின் பதினேழு ஆசனங்களைக் கொண்டு ஆட்சிமைக்க முடியாதென்றால் அதுபற்றியதான சட்டத்தை எடுத்துக்காட்டி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விளக்கியிருக்க வேண்டும்.

 இதனை சொல்லாது தவிர்த்திருப்பது அவரது உள்நோக்கத்தில் அவர் விரும்பாத ஒரு கட்சியின் ஆட்சிநிலை இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் சாய்ந்தமருது மக்கள் ஒரு சுயேற்சைக் குழவில் ஒன்றித்திருப்பது கல்முனை நகரத்தின் உள்ளூராட்சி அதிகாரத்தை தமிழர்களின் கைக்கு கொடுப்பதற்கு வழிசெய்கின்றனர் என்ற எழுந்தமான பழியை சுமத்துவதற்காகத்தான் என்று குறிப்பிடுவது மிகையான அபிப்பிராயம் அல்ல.

66இ (1) உள்ளூர் அதிகார சபையின் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேற்சைக்குழு அத்தகைய உள்ளுர் அதிகார சபையின் ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையின் ஐம்பது சதவீதத்திற்கும் குறைவாகப் பெற்றிருக்குமிடத்து மாநகர முதல்வரும் பிரதி மாநகர முதல்வரும் அத்தகைய உள்ளுர் அதிகார சபையின் முதலாவது கூட்டதில் தெரிவு செய்யப்படுதல் வேண்டும் (2012ஆம் ஆண்டின் 22ஆம் உள்ளுர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் – 66இ (1) ).

ஆகவே கல்முனை மாநர சபை முஸ்லிம் வாக்காளர்களை பிழையாக திசைதிருப்பி அதிலும் குறிப்பாக சாய்ந்தமருது வாக்காளர்களை ஒரு மயக்க நிலைக்கு இட்டுச் செல்வதற்கான முஸ்தீபே அன்றி உள்ளூராட்சி சட்டத்தைச் மக்களுக்கு விழிப்பூட்டுவது, ஆசனப் பங்கீட்டை சரியாக அடையாளம் காட்டுவது என்ற நோக்கங்களுக்கு புறம்பானதென்பதை நாம் புரிந்து கொள்வதற்கு இதுவே போதுமானதாகும்.

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறப்போகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறைமை இந்த நாட்டுக்கு புதிதாக அறிமுகமாகியிருக்கின்ற வட்டாரத்தையும் விகிதசாரத்தையும் உள்ளடக்கிய கலப்புமுறைத் தேர்தலாகும். இதில் வட்டார முறையில் தெரிவாகின்ற உறுப்பினர்கள் திட்டவட்டமாக குறித்த கட்சிக்கு அல்லது சுயேற்சைக் குழுவிற்கு தெரிவாகின்ற உறுப்பினர்களாவார். 

இதில் வட்டாரத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றவர்கள் எளிய வாக்கு வித்தியாசத்தில் தீர்மானிக்கப்படுகின்ற வெற்றியாகும். அந்த வகையில் கல்முனை மாநகர சபையில் வகுக்கப்பட்டிருக்கின்ற வட்டார தொகையில் ஆறு தனி அங்கத்துவ வட்டாரங்களும் ஒரு பல் அங்கத்துவ (இரட்டை அங்கத்துவ) வட்டாரத்திலுமாக எட்டு தமிழ்ப் பிரதிநிதிகள் எளிய முறையில் வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதே போன்று தமிழ் மக்களின் மொத்த வாக்குத் தொகையின் அடிப்படையில் கிடைக்கக்கூடிய விகிதாசார உறுப்புரிமை நான்கைவிட அதிகரிப்பதற்கு அறவே வாய்ப்பில்லை.

சாய்ந்தமருது ஆறு வட்டாரங்கள் நீங்கலான தனி அங்கத்துவ வட்டாரங்கள் பத்திலும் முஸ்லிம் பிரதிநிதிகளே தெரிவாக முடியும். இந்த பத்து வட்டாரங்களிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளிடையேதான் போட்டி நிலை காணப்படும். 

இந்த வட்டாரங்களில் 34,779 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் அளிக்கப்படுகின்ற வாக்குகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு அதிகமாகவும் அதற்கு அடுத்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் வாக்குகளைப் பெறுமென்பது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயமாகும். அவ்வாறெனில் இவ்விரு கட்சிகளும் விகிதாசாரத்தில் ஐந்து ஆசனங்களைப் பெறாதா? அல்லது மூன்றைப் பெற்றாலே போதும் தமிழர்களின் மொத்தப் பிரதிநிதித்துவத்தை விட முஸ்லம்களின் மொத்தப் பிரதிநிதித்துவம் அதிகரித்துக் காணப்படுவதற்கு. அது மாத்திரமன்றி வை.எல்.எஸ்.ஹமீட்டின் அபிப்பிராயப்படி பதினேழு ஆசனங்களை இந்த பத்து வட்டாரங்களிற்குள்ளிருந்தும் முஸ்லிம்கள் பெறுவார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருப்பதை பார்க்கின்றோம்.

ஆகவே கல்முனை மாநகர சபையில் சாய்ந்தமருது மக்களின் தீர்மானத்தின் அடிப்படையிலும் முஸ்லிம்களின் அரசியல் அதிகாரம் பறிபோகும் என்று ஒரு மாயையை கட்டியெழுப்பி பூச்சாண்டி காட்ட வை.எல்.எஸ்.ஹமீட் முனைகின்றார் என்பது வெளிப்படையாகப் புலனாகின்றது.

சாய்ந்தமருதில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழுவினர்கள் செய்துகொண்ட பகிரங்க பைஅத் அடிப்படையில் அணிசேராது என்றிருப்பதினால் தமிழ் தரப்புடன் இணைந்து ஆட்சி அமையுங்கள் என்று பொருள்படாதா என்ற கேள்வி தர்க்கவாதத்திற்கு முரணா என்றும் வை.எல்.எஸ்.ஹமீட் ஒரு வாதத்தை முன்னிறுத்துகின்றார். இந்த தர்க்க வாதம் என்பது ஓர் அடிப்படை இல்லாத வினாவென்றே குறிப்பிட வேண்டும். 

ஏனெனில், 21 ஆசனங்கள் கல்முனை மாநகர சபையை ஆட்சி செய்கின்ற அணியினருக்கு கட்டாயம் இல்லை என்பதையும் அவரது அபிப்பிராயத்தின் பிரகாரமான சாய்ந்தமருது நீங்கலான 17 முஸ்லிம் பிரதிநிதிகளைக்கொண்டே ஆட்சி அமைக்க முடியும் என்பதையும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் தெளிவாக சொல்லியிருப்பதை மேலே பார்த்தோம். ஆக, அவரது தர்க்கவாதம் தகர்த்தெறியப்படுகின்றது.

எது எவ்வாறிருந்தாலும், சாய்ந்தமருது தோடம்பழ சின்ன சுயேட்சைக்குழு எதற்காக இந்த பைஅத் பிரகடனத்தை செய்தார்கள் என்பதையும் அந்த சூழல் எதனால் தோற்றுவிக்கப்பட்ட்து என்பதையும் கருத்தில் எடுத்துத்தான் விளக்கம் பெற முனைய வேண்டும். வெறுமனே ஒரு வாசகத்தில் தங்கி நின்று அர்த்தம் எடுப்பதென்பது அவர்களின் நோக்கத்தை சரிவர விளங்கவில்லை என்பதை அல்லது அவர்களை முழுமையாக பிழையாக காண்பிப்பதற்கு எடுக்கப்படுகின்ற ஒரு சூழ்ச்சி நகர்வாகவே பார்க்க வேண்டி ஏற்படும்.

சாய்ந்தமருதில் தோடம்பழ சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயேட்சைக் குழு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அடிவருடிகள் என்றும், அவர்கள் வென்ற பின்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணைந்து கூட்டாட்சியை ஏற்படுத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு எடுக்கப்பட்ட சதி முயற்சி என்று மு.கா.வின் ஆதரவாளர்கள் விமர்சித்துவந்த நிலையில்தான் இந்த பைஅத் பிரகடனத்தை செய்ய வேண்டிய நிர்பந்தம் இச்சுயேட்சைக்குழுவிற்கு ஏற்படுகின்றது. ஆதலால், “இந்த ஊரின் தேவைக்காகப் புறப்பட்ட நாங்கள் இந்த ஊரை முன்னேற்றுவதற்காகவேயன்றி எந்தக் கட்சிக்கும் ஆதரவு வழங்குவதற்காக முன்வந்தவர்கள் அல்ல” என்பதை சொல்வதாகும். என்றால் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்து எந்தக்கட்சியோடும் நாம் சேரமாட்டோம் என்பதை வலியுறுத்துமேயன்றி நிகழ்தகவாக முஸ்லிம்களுடைய ஆட்சி அதிகாரம் ஏற்படாத ஒரு சூழல் தோன்றுமேயானால் எந்தவிதமான பதவிகளையும் பெறாமல் முஸ்லிம் அரசியல் அதிகாரம் நிலைபெறுவதற்கு ஆதரவு வழங்குவதை இந்த பைஅத்தின் நோக்கம் கட்டுப்படுத்தாது என்பது நாம் விளங்கத்தக்கதே.

அவரது உரையின் இறுதியில் சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளும் நிறைவேற வேண்டும் என்ற ஒரு பதத்தைப் பிரயோகித்து அவர் இம்மக்களின் உள்ளூராட்சி மன்றக் கோரிக்கைக்கு எதிரானவர் அல்ல என்பதை ஒப்புக்குக் காட்டுகின்றார். இதனை அவரது வாதங்களும் உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி நிலையை உருவாக்குவது தொடர்பிலான சட்டங்களும் தெளிவாக இருக்கும் நிலையில் இம்மக்களின் பிரிவு கல்முனையை பறிகொடுத்துவிடும் என்கின்ற ஆபத்தைக் கொண்டிருப்பதாகவும் அவர் பறைசாற்ற முனைவதுகொண்டு சாய்ந்தமருது மக்களின் எண்ணத்தை கொச்சைப்படுத்துவதாகவே அமைகின்றது.

சாய்ந்தமருது சார்ந்த குறிப்பிட்ட சில நபர்களோடு இருந்து பேசி இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதைப் பார்க்கிலும், இவ்வூர் மக்களுடனயே பேசக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக இந்தத் தேர்தலை அம்மக்கள் பாவிப்பதற்கு வை.எல்.எஸ்.ஹமீட் ஊக்குவித்திருக்க வேண்டும். அதுதான் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையினால் கல்முனை பறிபோகின்றதா என்பதை முதலில் ஆதரப்படுத்த முடியும் என்பதையும் தமிழர்களின் ஆட்சி அதிகாரம் ஓங்கும் சூழல் ஏற்படுமாயின் அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கின்ற பார்வையாளர்களாக சாய்ந்தமருது மக்கள் இருக்கின்றனரா என்பதனையும் த்த்ரூபமாக நிரூபிப்பது மட்டுமன்றி இனி எந்த சந்தர்ப்பத்திலும் சாய்ந்தமருதுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றத்தை அவர்கள் கோருவது நியாயமில்லை என்பதை நிரூபித்துக்காட்டும் ஒரு சந்தர்ப்பம் என்று வலியுறுத்தத் தவறியிருப்பதே அவர் ஒரு பக்கம் சார்ந்து நின்று தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றது.

நூறுல் ஹக்
சாய்ந்தமருது
Previous Post Next Post