Top News

எமது வெற்றியின் ஆழத்தை அறிந்து கொண்டு எம்மை இலக்கு வைத்து தாக்குகின்றனர்.



“எமது தேர்தல் வெற்றி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில்,  எமது வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து குண்டுத் தாக்குதல் ஒன்று நேற்று (06.02.2018) நடாத்தப்பட்டுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்று (06.02.2018) காலை 10.00 மணியளவில் அவசர ஊடகவியலாளர் சந்திப்பொன்றை NFGG நடாத்தியது. இன்று அதிகாலை NFGG யின் பொது வேட்பாளர் ஒருவரை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை அடுத்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

NFGG யின் காத்தான்குடி காரியாலயத்தில் இடம் பெற்ற இச்சந்திப்பில் NFGG யின் தவிசாளர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் ,

“காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் எமது வெற்றிக்கான வாயப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எமக்கெதிராக வன்முறைகளைத் தூண்டும் பிரச்சாரங்களை ஒரு குறிப்பிட்ட கட்சி  செய்து வருகின்றது. அந்த வெறுப்புணர்வு பிரச்சாரத்தின் பிரதிபலிப்பாகவே இன்றைய இந்தத் தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகளை நடாத்தியுள்ளனர் காத்தான்குடியில் தேர்தல் சட்டங்களை மீறும் அப்பட்டமான நடவடிக்கைகளை கைச் சின்னத்தில் போட்டியிடும் SLFPகட்சியினர் செய்து வருகின்றனர். சட்டத்தை மீறும் வகையில் SLFP வேட்பாளர்களினால் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

 இவ்வாறான தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் காத்தான்குடி பொலிஸாரின் நடவடிக்கைகள் திருப்தியாக இல்லை. கொடுக்கும் முறைப்பாடுகளுக்கு உடனடியாக அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியவில்லை. இந்த அசமந்தப் போக்கினை ஏற்றுக் கொள்ள முடியாது.

இது பற்றி நாம் ஏற்கனவே காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கும் உயர் மட்டத்தினருக்கும் எழுத்து மூல முறைப்பாடுகளை செய்திருக்கின்றோம். இருந்தும் நிலைமைகளில் முன்னேற்றங்களைக் காண முடியவில்லை. குற்றச் செயல்கள் நடப்பது பற்றிய தகவல் கிடைக்கும் போது பொலிசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சாவகசமாக நடவடிக்கை எடுக்க முடியாது.

சட்டம் ஒழுங்கு முறையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நிலைநாட்டப்பட வேண்டும். அப்போதுதூன் நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்த முடியும்.

இன்றைய தாக்குதலைப் பொறுத்த வரையில் இது ஒரு பாரதூரமான ஒன்றாகும். எமது வேட்பாளரின் உயிருக்கு நேரடி அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு பாரதூரமான தாக்குதலாகவே இது இருக்கிறது. இதனை நாம் கண்டிக்கின்றோம். உடனடியாக விசாரணைகளை மேற் கொண்டு காத்தான்குடி பொலிஸார் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதே போன்று எமது வேட்பாளர்களின் பாது காப்பையும் பலப்படுத்த வேண்டும்.”

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் NFGG யின் வேட்பாளர் பர்ஸாத் அவர்களும் கலந்து கொண்டு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விபரித்தார்.
இந்த சந்திப்பில் NFGG யின் தேசிய அமைப்பாளர் MBM பிர்தௌஸ் நழீமி சிரேஸ்ட உறுப்பினர் AGM ஹாறூன் காத்தான்குடி பிராந்திய செயலாளர் ACM ஜவாஹிர் மற்றும் வேட்பாளர் இல்மி அஹமட் லெவ்லை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்
Previous Post Next Post