Top News

முதுகெலும்பு இல்லாதவர்களுக்கு வாக்களித்து முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் அநாதைகளாக்க வேண்டாம்




17 வருட காலமாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாஷைகளையோ உரிமைகள் பற்றியோ எவ்வித அக்கறையும் செலுத்தாமல், காலத்துக்கு காலம் வாக்களித்து வந்த கிழக்கு முஸ்லிம்களை அரசியல் அநாதைகளாக்கியுள்ளார்.

எனவே, முதுகெலும்பில்லாதவர்களுக்கு வாக்களித்து, முஸ்லிம் சமூகத்தை தொடர்ந்தும் அநாதைகளாக்க வேண்டாம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வரிப்பதான்சேனை வேட்பாளர்களான எஸ்.ஏ.அன்வர், எல்.எம்.சமட் ஆகியோரை ஆதரித்து நேற்று மாலை (04) வரிப்பத்தான்சேனை ஹிஜ்ரா சந்திக்கு அருகில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஆதரவாளர்களின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் மேடைக்கு வருகை தந்த  அமைச்சர் கலந்து கொண்ட இந்நிகழ்வு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வரிப்பத்தான்சேனை அமைப்பாளர் எம்.எஸ்.சலீம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அமைச்சர் ரிஷாட்,

மக்களின் வாக்குகள் பெறுமதி வாய்ந்தவை. சக்திமிக்கவை. எமது உரிமைகளையும் அரசியல் அபிலாஷைகளையும் பெற்றுக்கொள்வதற்கு எமக்குரித்தான வாக்குகளை முறையாகப் பயன்படுத்தி, கிராமங்களின் அதிகாரத்தை ஒப்படைப்பதன் மூலமே, நாம் அச்சமின்றி வாழும் சமூகமாக மாற்றமடைவோம்.

கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸிற்கு நாம் அளித்த வாக்குகளால் எம்மைப் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் கூட எவரும் இல்லாத சமூகமாக, நாம் உள்ளமை வேதனைக்குரிய விடயமே. “எமக்கு உரிமைதான் தேவை. அபிவிருத்தி தேவையில்லை” என கூப்பாடுபோட்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீம், நமது சமூகத்தின் உரிமை பறிபோனபோது தட்டிக்கேட்டாரா?

எழுச்சிப் பாடல்களாலும், மேடைக் கூத்துக்களாலும் இளைஞர்களை சூடேற்றி பசப்பு வார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய காலம் இனியும் பலிக்காது. அதனாலேயே, புதிய மாற்றங்களை வேண்டி மக்கள் வெகுண்டெழுந்து அணி திரண்டுள்ளனர். இதனாலேயே மக்கள் இம்முறை தகுந்த பாடம் புகட்டுவதும் உறுதியாகி விட்டது என்று தெரிவித்தார்.

சிலோன் முஸ்லிம் நிருபர்
வாஜித்
Previous Post Next Post