மு.கா கோட்டையை கைப்பற்ற முயற்சிக்கையில், தனது இதயத்தில் ஏற்பட்ட ஓட்டைகளால் அவதிப்படும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்.
முஸ்லிம் காங்கிரசை அழிப்பதற்கு அதன் கோட்டையான அம்பாறை மாவட்டத்தில் தனது அத்தனை பலத்தினையும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரயோகித்து அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில், அவரது கட்சியின் இதயமாக கருதப்படுகின்ற ஒரே ஒரு சபையான முசலி பிரதேச சபையினை முற்றாக இழந்துகொண்டு வருகின்ற நிலைமையை அங்கு உள்ள களநிலவரம் கூறுகின்றது.
முசலி பிரதேச சபையானது வன்னி மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் சபையாகும். அங்கு சுமார் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளார்கள்.
இப்பிரதேசம் நீண்டகாலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2008 இல் அரசபடைகளினால் மீட்கப்பட்டதன் பின்பு முதல் முறையாக 2௦11 ஆம் ஆண்டிலேயே உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெற்றது.
அந்த தேர்தலில் ரிசாத் பதியுதீனின் ACMC மற்றும் EPDP, SLFP ஆகிய கட்சிகள் கூட்டுச்சேர்ந்து 5௦52 வாக்குகளை பெற்று ஆறு உறுப்பினர்களுடன் முசலி பிரதேச சபையை ஆட்சி செய்தது. அப்போது ஒன்பது உறுப்பினர்களை கொண்டிருந்ததனால் ஏனைய இரண்டு உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கும், ஒரு உறுப்பினர் தமிழரசு கட்சிக்கும் இருந்தது.
புதிய தேர்தல் முறையில் பத்து வட்டாரங்களைக் கொண்ட முசலி பிரதேச சபையில் அரிப்பு மேற்கு, அரிப்பு தெற்கு ஆகிய இரண்டு சபைகளும் தமிழர்களுக்குரியது. ஏனைய எட்டு வட்டாரங்களான வேப்பங்குளம், பொற்கேணி, பண்டாரவெளி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி–கரடிக்குளி, மரிச்சிக்கட்டி–பாலக்குழி ஆகியன முஸ்லிம் வட்டாரங்கலாகும்.
இதில் தற்போதைய களநிலவரப்படி வேப்பங்குளம், பண்டாரவெளி, மரிச்சிக்கட்டி-பாலக்குழி ஆகிய மூன்று வட்டாரங்கள் மாத்திரமே அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாக உள்ளது. அதிலும் மரிச்சிக்கட்டி-பாலக்குழி பிரதேசத்தில் கடந்த காலங்களில் ஒரு கூட்டத்தையேனும் நடாத்த முடியாத நிலைமை முஸ்லிம் காங்கிரசுக்கு இருந்தது. இன்று அங்கு ஓய்வுபெற்ற கிராம் உத்தியோகத்தர் தாஜூதீனின் செயல்பாட்டினால் அதிக வாக்குகளை மு.கா க்கு பெறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பண்டாரவெளி வட்டாரமானது வடமாகானசபை உறுப்பினராக புதிதாக பெயர் பரிந்துரைக்கப்பட்ட நியாஸ் அவர்களின் பிரதேசமாகும். அங்கு தேர்தல் பணிக்காக இன்னும் நியாஸ் அவர்கள் களம் இறங்கவில்லை என்ற காரனத்தினால் அந்த வட்டாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு சாதகமாகவே உள்ளது.
அவைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து வட்டாரங்களான பொற்கேணி, புதுவெளி, அகத்திமுறிப்பு, சிலாவத்துறை, கொண்டச்சி-கரடிக்குளி ஆகிய வட்டாரங்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகம் சாதகமாகவே உள்ளது.
சில நேரங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு சாதகமாக உள்ள வட்டாரங்களில் வாழுகின்ற மக்களின் வறுமை நிலையின் காரணமாக, அவர்களது வாக்குகள் அமைச்சர் ரிசாத்தினால் விலைக்கு வாங்கப்பட்டாலும், ஆட்சி அமைக்கின்ற அளவுக்கு வாக்குகளை பெறமுடியாது.
இறுதி நேரத்தில் இரு கட்சிகளும் சரிசமமான நிலைக்கு வந்தாலும் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே இருக்கும். எது எப்படி இருப்பினும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மக்கள் காங்கிரசினால் முசலி பிரதேச சபையை இந்த தேர்தலில் கைப்பெற்ற முடியாது என்பதுதான் அங்குள்ள களநிலவரமாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது