எம் நுஸ்ஸாக்
கடந்த இரவு நடைபெற்ற அம்பாறை சம்பவத்தைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மிகவும் busy யாகி விட்டன. ஒரு புறம் மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் களவிஜயம், அதிகாரிகளுடன் தொடர்பு என்று செய்திகள். மறுபுறம் முகநூல் சொந்தக்காரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்து ஒரு பிரிவு எதைச் செய்தாலும் குற்றம் களவிஜயம் செய்தாலும் விமர்சனம், செய்யாவிட்டாலும் விமர்சனம், என்ற நிலை. மறுபுறம் இன்னொரு கூட்டம் இதைவைத்து ஒரு அரசியல். ஒவ்வொரு கட்சிக்கெதிராகவும் தமக்கிருக்கின்ற வேக்காடுகளை மீண்டுமொருமுறை இறக்கி வைப்பதற்கு இதை ஒரு களமாக பாவிக்கின்றார்கள்.
இவ்வாறு சூடான எழுத்துக்கள் ஒரு மூன்று, நான்கு நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு தொடரும். அதன்பின் மறந்து விடுவார்கள். இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். சுருங்கக்கூறின் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறும்போது அரசியல்வாதிகள் ஒருபுறம் அவர்களது அரசியலைச் செய்கிறார்கள். முகநூல் சொந்தக்காரர்கள் மறுபுறம் அவர்களது அரசியலைச் செய்கிறார்கள். இறுதியில் எது செய்யப்பட வேண்டுமோ அது தவற விடப்படுகின்றது.
இதுதான் மாகாண, உள்ளூராட்சி சட்டங்களுக்கு முஸ்லிம்களுக்கு பாதிப்பானது என்று சொல்லிக்கொண்டே கை உயர்த்தியபோதும் நடந்தது. சுமார் இரண்டு வாரங்கள் முகநூல் கிடுகிடுத்தது. அதன்பின் அனைத்தும் மறந்துபோனது. அதே சட்டத்தின்கீழ் ஒரு தேர்தலுக்கு முகம்கொடுத்து விட்டோம். அடுத்த தேர்தலுக்கு முகம்கொடுக்கப் போகின்றோம்.
இந்த சட்டத்தைத் திருத்தாமல் வாக்குக்கேட்டு வர வேண்டாம். இல்லையெனில் எல்லா ஊர்களும் சேர்ந்து சுயேச்சை போடுவோம் என்றோ அல்லது வேறு வழியிலோ தம் எதிர்ப்பை காட்ட முயலவில்லை. மாறாக, கட்சிகளுக்கு கொடி தூக்கினோம்.
இன்றைய அம்பாறைச் சம்பவத்தில் நாம் செய்யவேண்டியது என்ன?
பள்ளிவாசல், கடைகள், வாகனங்கள் தாக்குதலுக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன, தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. இதில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பது என்பதும் இந்த இடங்களுக்கு தற்காலிக பாதுகாப்பு வழங்குவதென்பதும் ஒரு விடயம். ஆனால் இது தீர்வல்ல. தீர்வு என்பது எதிர்காலத்தில் இவ்வாறான நிகழ்வுகளைத் தவிர்ப்பதை நோக்கியதாகும். இதில் பாதுகாப்புத் தரப்பினரின் பங்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். பாதுகாப்புத் தரப்பினர் திருந்தினால் இனவாதிகள் பாதிக்குமேல் தானாக திருந்தி விடுவார்கள்.
இந்த நாட்டில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்காகத்தான் அந்தளவு மோசமான ஜூலைக் கலவரம் ஏற்பட்டது. அதற்கு முன்பும் ஒவ்வொரு வருடமும் தமிழருக்கெதிரான இனக்கலவரங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருந்தன. ஆனால் ஜூலைக் கலவரத்தைத் தொடர்ந்து அரசு தீர்மானித்தது (சர்வதேச அழுத்தம் காரணமாக) இதற்கு மேலும் தமிழருக்கெதிராக இனக்கலவரத்தை அனுமதிப்பதில்லை என்று.
அதன்பின், தலதாமாளிகை தாக்கப்பட்டபோதும் கலவரம் ஏற்படவில்லை. அறந்தலாவையில் பிக்குகள் கொல்லப்பட்டபோதும் கலவரமேற்படவில்லை. கடற்படைத் தளபதி உட்பட எத்தனையோ குண்டு வெடிப்புக் கொலைகள் நடைபெற்றபோதும் இனக்கலவரம் ஏற்படவில்லை. கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக, ஆட்சிமாறினாலும் காட்சி மாறாததுபோல் முஸ்லிம்களுக்கெதிரான இனவன்செயல்கள் அவ்வப்போது இடம்பெறத்தான் செய்கின்றன.
இறைவன் பாதுகாக்க வேண்டும், முஸ்லிம்களுக்கெதிராகவும் ஒரு பாரிய ஜூலைக் கலவரம் ஏற்பட்டதன் பின்பா இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அளுத்கம கலவரமும் ஒரு பாதி ஜூலைக் கலவரம்தான். ஒரு முழு ஜூலைக் கலவரத்தை எம்மால் தாங்க முடியுமா? முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டம் என்றுகூட பாராது. அம்பாறையில் கை வைக்கின்றார்கள். இந்நிலையில் அரசியல்வாதிகள் செய்ய வேண்டியதென்ன? சமூகவலைத்தளம் பொன்ற இந்த பலமான ஆயுதத்தைப் பயன்படுத்தி அவர்களுக்கு நாம் கொடுக்கப்போகும் அழுத்தம் என்ன?
முதலாவது, இரவு 10.30 மணியவிலே பேரின வாலிபர்கள் பள்ளிவாசலுக்குமுன் கூடியிருந்ததாகவும் பொலிசார் அதனை வேடிக்கை பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இது உண்மையா? பொலிஸ் நிலையம் சம்பவம் நடந்த இடங்களுக்கு மிக அண்மையில் இருந்தும் பொலிசார் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது இதன் உண்மைத்தன்மை என்ன?
28468229_1647207562032236_2171717349063977413_n
எது எவ்வாறு இருந்தபோதிலும் சம்பவ இடங்கள் பிரதான நகரின் மத்தியிலேயே இருக்கின்றன. சாதாரணமாக எப்போதும் பொலிஸ் பிரசன்னம் இருக்கின்ற ஒரு பிரதேசம், அவ்வாறு இருந்தும் இச்சம்பவங்கள் நடக்கும்வரை பொலிசார் ஏன் வாழாவிருந்தார்கள். அவ்வாறாயின் இதற்குப் பின்னால் பொலிசாரின் மறை கரங்கள் இருந்தனவா? போன்ற விடயங்கள் தொடர்பாக அவசரமாக ஓர் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பொலிசாரின் பங்கு அல்லது அசமந்தம் இருக்குமானால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு இடத்தில் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் பாதுகாப்புத்தரப்பினர் கவனமாக இருப்பார்கள்.
இரண்டாவதாக, சிறுபான்மைக்கெதிராக, நாட்டின் எந்தப்பாகத்தில் இனக்கலவரங்கள் இடம்பெற்றாலும் அங்குள்ள உயர் பொலிஸ் அதிகாரிகள் பொறுப்புக்கூறுகின்றவர்களாக செய்யப்பட வேண்டும். (They must be held accountable. If not for their lapses, this kind of ethnic violence may not occur at all). அவர்களின் கடமையில் குறைபாடு இல்லாமல் இவ்வாறான இனவன்செயல்கள் இடம்பெற சாத்தியம் குறைவாகும்.
எனவே, இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முகநூல்களில் நம்மிடமும் முகநூல் இருக்கின்றது என்பதற்காக எதையாவது எழுதுவதும் இன்னும் சிலர் கடைந்தெடுத்த அடிமட்ட அரசியலை வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல் இவ்வாறான வேதனையான சூழ்நிலையிலும் செய்ய முற்படுவதையும் தவிர்த்து இவ்வாறு காத்திரமான நடவடிக்கைகளை இந்த அரசியல்வாதிகள் எடுத்து இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும்வரை உங்கள் முகநூல்கள் அழுத்தங்களைத் தொடரட்டும் அர்த்தமுள்ள காத்திரமான விமர்சனங்களைப் பதியட்டும்.
மரணவீட்டில் துக்கம் விசாரிப்பது மூன்று நாட்களுக்கு என்பதுபோல் ஒவ்வொரு சம்பவம் நடக்கும்போதும் மூன்று நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்திற்கு “பாவக்கா பாவக்கா ஒன்ன போகக்கொள பாப்பங்கா” என்று சில கலாச்சாரங்களில் மரணவீட்டு ஓலம்போல் அமையாமல் நிரந்தரத் தீர்வை அரசியல்வாதிகள் பெற்றுத்தரும்வரை உங்கள் பேனாக்கள் எழுதட்டும். உங்கள் அவதானக்கண்கள் அவர்களைத் தொடரட்டும். இது ஒரு தொடர்கதையாக தொடராமல் சிறுகதையாக முற்றுப்பெறட்டும்.