வை எல் எஸ் ஹமீட்
படித்தவர்கள் நிரம்பி வாழும் கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட என் சகோதரர்களின் சிந்தனைகளுடன் இவ்வாக்கத்தின் மூலம் பேசவிரும்புகின்றேன்.
முதலாவதாக, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, மக்களுடன்:
———————————————————-
தென்கிழக்கின் முகவெற்றிலை, இலங்கை முஸ்லிம்களின் மானசீகத் தலைநகரம், நம் கல்முனை மாநகரம் அந்நியவர்களின் ஆதிக்கத்தின்கீழ் முழுமையாகவோ, பகுதியாகவோ சென்றுவிடக்கூடாது; என்பதில் உங்களுக்கு முழுமையான உடன்பாடு உண்டா?
ஆம் எனில் உங்கள் உணர்வுகள், கட்சிகள் மீது உங்கள் பார்வை, விருப்பு வெறுப்பு போன்றவற்றை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு கல்முனைப் பட்டணத்தின் பாதுகாப்புப் பற்றி நீங்கள் சிந்திக்கத் தயாரா?
புள்ளி விபரம்
——————
தமிழ்த்தரப்பு மற்றும் சாய்ந்தமருது தவிர்த்து ஏனைய மேற்கூறப்பட்ட ஊர்களிலிருந்து பெறக்கூடிய அதிகூடிய ஆசனங்கள் 17-19 ஆகும். ( இது இரு வெவ்வேறு புள்ளி விபரத்தகவல்கள் காரணமாக). எனவே ஓட்டுமொத்தமாக அனைவரும் ஒரு கட்சிக்கு வாக்களித்தாலும் பெரும்பான்மை (21) பெற முடியாது. யாருடன் கூட்டுச் சேர்வது. சுயேச்சை ‘ பைஅத் காரணமாக கூட்டுச் சேராது. தமிழ்த்தரப்புடன் ( எந்தக்கட்சியாயினும்) கூட்டுச் சேர்ந்தால் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டும்; என்பதை உணர்கின்றீர்களா?
தமிழ்த்தரப்புடன் கூட்டாட்சி கூடாது; என்பதல்ல. ஆனால் கல்முனையில் அது அதீத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இங்கு மண் போராட்டம், கல்முனைப் பட்டினத்தில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வாதாரத்தின்மீது குறி என்று பலதரப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றன.
தேர்தல் முடிந்த கையோடு கல்முனை (தமிழ்ப்பிரிவு) பிரதேச செயலகத்தை தரமுயர்தித்தருவதாக சம்பந்தன் வாக்குறுதியளித்திருக்கின்றார். எனவே மீண்டும் கடற்கரைப்பள்ளி வீதியால் எல்லைப்
பிரச்சினை ஆரம்பிக்கும். கூட்டுச்சேர்ந்தால் இதில் விட்டுக்கொடுப்பைக் கோருவார்கள். முடியுமா? இப்பொழுது என்ன செய்யப்போகிறீர்கள்?
ஒரு கட்சிக்கு வாக்களித்தாலே இந்த நிலைமை என்றால் பல கட்சிகளுக்கு வாக்களித்தால் நிலமை என்ன ஆகும்? சிந்திப்பீர்களா?
தீர்வு
——-
இன்று பல கட்சிகள் கல்முனை மாநகர சபைக்கு போட்டியிட்டாலும் ஒரேயொரு கட்சிதான் சாய்ந்தமருதில் போட்டியிடுகின்றது, சுயேச்சைக்கு மேலதிகமாக. ( உதிரிகளைக் குறிப்பிடவில்லை).
இந்நிலையில் மொத்தமாக 17 அல்லது 19 ஆசனங்களை ஒரு கட்சி ஏனைய ஊர்களில் பெற்றாலும் சாய்ந்தமருதிலும் ஒரு சில ஆசனங்களையாவது பெறக்கூடிய கட்சியினால்தான் தனித்து ஆட்சியமைக்க முடியும்.
அதாவது, இரண்டு நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்பட்டால் மாத்திரமே கல்முனையை இத்தேர்தலில் அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து பாதுகாக்க முடியும். ஒன்று மேற்கூறிய ஊர்களில் மொத்தமாக 17-19 ஆசனங்களை ஒரு கட்சி பெறல். இரண்டு அக்கட்சி சாய்ந்தமருதிலும் சில ஆசனங்களைப் பெறல். இது இன்று ஒரேயொரு கட்சிக்கு மாத்திரமே சாத்தியம்.
இதனைக் கூறுவதால் யாரும் நிறக்கண்ணாடி போட்டுப் பார்க்காதீர்கள். எல்லாக் கட்சிகளாலும் வஞ்சிக்கப்பட்ட ஒருவன் நான். எந்தக்கட்சிக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய தேவை எனக்கில்லை. நீங்களும் பல கட்சிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம். உங்களுடைய உணர்வுகள் நியாயமானவை. ஆனால் உணர்வுக்கு அடிமையாகும் தருணம் இதுவல்ல.
பலரின் முகநூல் பதிவுகள் உணர்வுகளையே பிரதிபலிக்கின்றன. அவை இயற்கையானதே. ஆனால் இங்கு நமது பொதுச் சொத்தை பாதுகாக்க வேண்டும். இறைவன் பாதுகாக்க வேண்டும். கல்முனை பறிபோவதென்பது மாநகர நிர்வாகத்துடன் மாத்திரம் நின்று விடப்போவதில்லை. எதிர்காலத்தில் அதிகாரம் பொருந்திய மாகாணசபை முறைமை அமுலுக்கு வரும்போது அது இன்னும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது.
கல்முனை மாநகரத்தைப் பாதுகாக்கும் சக்தி இத்தேர்தலில் நம் கைகளில் இருந்தும் அதனை நம் ஒற்றுமையின்மையால் பறிகொடுக்கப் போகின்றோமா? அவ்வாறு பறிகொடுத்துவிட்டு தமிழ்த்தரப்பிடம் கூட்டாட்சிக்கு கையேந்தி அவர்களது நிபந்தனைகளுக்குள் சரணாகதியடையப்போகின்றோமா? எந்தவொரு அறிவுடமைச் சமுதாயமும் இதனைச் செய்யுமா?
நமக்கு கட்சிகள் மீது ஆத்திரம் வெறுப்பு எல்லாம் இருக்கின்றது. ஆனால் கட்சிகளைத் தண்டிக்கப்போவதாய் நினைத்து நாம் பிளவு பட்டு நம்மை நாம் தண்டிக்கப்போகின்றோம்; என்பது புரிகிறதா? இத்தேர்தலில் ஒரு கட்சி வென்றாலும் தோற்றாலும் அவர்களின் பாராளுமன்ற சமன்பாட்டில் மாறுதல் ஏற்படப்போவதில்லை. ஆனால் ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைப்பதை நமது உணர்வுகளுக்கு அடிமையாகி தடுப்போமானால் அதன்பின் தமிழ்த்தரப்பிடம் சிக்கித்தவிக்கப்போவது நாமே தவிர கட்சிகளல்ல.
கல்முனை மார்க்கட்டிற்குள் தமிழ்த்தரப்பு மூக்கை நுழைத்தால் மார்க்கட் வர்த்தகர்கள்தான் தவிக்கப்போகிறார்களே தவிர அரசியல்வாதிகளல்ல.
பசாரில் தொல்லைகள் தந்தால் பசார் வர்த்தகர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். கட்டுக்கட்டாய்ப் பணத்தைக் கொண்டுவந்து இறைத்து உங்களைப்பிரித்தவர்களோ அல்லது அவர்களின் தரகர்களோ அல்ல.
சிலவேளை கடற்கரைப்பள்ளி வீதியால் எல்லை போடுவதில் வெற்றிகண்டுவிட்டால் ( இறைவன் பாதுகாக்க வேண்டும்) கல்முனைக்குடிக்கு தனியான பிரதேச செயலகம் கேட்டும் பிரதேச சபை கேட்டும் போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகப்போவது நாமே தவிர அவர்கள் அல்ல. அப்பொழுதும் ஏதோ ஒரு கதையைத் தூக்கிக்கொண்டு வந்து அவர்கள் அரசியல்தான் செய்வார்கள்.
கட்சிகளுக்காக கல்முனையை இழக்கப்போகின்றோமா?
கல்முனையில் ஒருவன்கூட பிரிந்து வாக்களிப்பானாகில் இந்தக்கல்முனையை காவுகொடுப்பதற்கு அவன் துணைபோனவனாக மாட்டானா? தயவுசெய்து சிந்தியுங்கள். நிறைய கூட்டங்களில் பேசி இவற்றையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும்; என்று நான் விரும்பியபோதும் சூழ்நிலை இடம்தரவில்லை.
கல்முனை மக்களே!
இது உங்கள் மடியில் கைவைக்கின்ற பிரச்சினை. இனியும் தாமதிக்க வேண்டாம். சாய்ந்தமருதிலும் ஏனைய ஊர்களிலும் போட்டியிடுகின்ற ஒரு கட்சியைத் தெரிவுசெய்யுங்கள். ஏனைய கட்சி வேட்பாளர்களிடம் வாபஸ் வாங்குமாறு கோருங்கள். தவறின் மக்கள் சுயமாக குறிச்சி குறிச்சாக, தெருத்தெருவாக, வட்டார வட்டாரமாக ஒன்று கூடி ஒத்த முடிவை எடுங்கள். நமது சொத்து கல்முனையை இத்தேர்தலில் பாதுகாப்போம்.
மருதமுனை மக்களுக்கு
——————————-
கல்முனை மாநகருக்காக ஏனைய ஊர்களை விடவும் அதிகமா அன்று தொடக்கம் இன்றுவரை குரல்கொடுக்கின்றவர்கள் நீங்கள். இப்புதிய தேர்தல்முறை காரணமாகவும் சாய்ந்தமருதில் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் கல்முனை பாரிய ஆபத்தில் மாட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் உங்களின் கட்சிகள் தொடர்பான நியாயமான உணர்வுகளை ஒருபுறம் வைத்துவிட்டு நமது பொதுச்சொத்து கல்முனையைப் பாதுகாக்க கைதாருங்கள். எனது உணர்வுகளையும் ஒருபுறம் வைத்துவிட்டுத்தான் இதனை எழுதுகின்றேன். தயவுசெய்து இச்சந்தர்ப்பத்தில் நம் ‘ கல்முனையைக் கைவிட்டு விடாதீர்கள்’.
நீங்கள் ஓட்டுமொத்தமாக இத்தேர்தலில் ஒரு கட்சிக்கு அளிக்கின்ற வாக்கு என்பது யதார்த்தத்தில் கல்முனையின் எதிர்கால இருப்பிற்க்காக அளிக்கின்ற வாக்குகளாகும். கட்சிகளைத் தண்டிக்க இன்னும் பல சந்தர்ப்பம் வரும். அப்போது அதனைச் செய்வோம்.
நற்பிட்டிமுனை மக்களே
——————————-
நீங்கள் எப்போதும் கல்முனைக்குடியுடன் இசைந்து வாழுகின்ற இளகிய போக்கைக் கொண்ட மக்கள். இன்று நமது கல்முனை ஆபத்தான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள இவ்வேளையில் ‘ கல்முனையைப் பாதுகாக்க ஒன்றிணையுங்கள். தனிப்பட்ட வேட்பாளர்களின் சிறப்புக்களை நான் அறியாமலில்லை. ஆனால் இச்சந்தர்ப்பத்தில் நாம் ஒன்றிணைந்து நம் பொதுச்சொத்தைப் பாதுகாப்போம். ஒன்றுபடுங்கள்.
சந்தர்ப்பவாத அரசியல் தலைமைகளே!!!
உங்கள் ஆதிக்கப் பசிக்கு நாம் தலைமுறை தலைமுறையாயப் பாதுகாத்துவந்த கல்முனையின் இருப்பை இரையாக்கிவிடாதீர்கள்.
( சாய்ந்தமருது மக்களுடன் அடுத்த ஆக்கத்தினூடாக பேசவிளைகிறேன் இன்ஷாஅல்லாஹ்)
குறிப்பு: இவ்வாக்கத்திற்கு எதிர்மறை பின்னூட்டம் இடவிரும்புவோர் முடிந்தால் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளித்துவிட்டு அவ்வாறு செய்யுங்கள்
1) வேறு எந்த வகையில் பெரும்பான்மை பெறமுடியும்?
2) அல்லது தமிழ்த்தரப்புடன் கூட்டுச்சேர்ந்து அதனால் ஏற்படும் விளைவுகளை அனுபவியுங்கள் அதைப்பற்றிக் கவலையில்லை என்கிறீர்களா?
(இதயம் சீல் வைக்கப்பட்டவர்களுக்காக இக்கட்டுரை எழுதப்படவில்லை.)