சிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி. நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
ஐ.நாவின் செயலாளர் நாயகம் ‘சிரியா உலகத்தின் ஒரு நரகம்’ என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு மிக மோசமாக அப்பாவி பொது மக்கள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர். விசேடமாக சிறுவர்களும், பெண்களும் படுகொலை செய்யப்படுகின்றனர்.
இதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களும் உடனடியாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டு மேலும் மனிதப் படுகொலைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஐ.நா. சபை முழுமையாக இதனை ஒரு மிக முக்கிய – அவசர விடயமாக கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.