தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நாளை 06 திகதியும், நாளை மறுதினம் 07ஆம் திகதியும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் செயலாளர் வை.முபாறக் தெரிவித்தார்.
மொழித்தேர்ச்சிக் கொடுப்பனவு, காப்புறுதி சேவைகள், சொத்துக்களுக்கான கடன் எல்லையை அகற்றுதல், உரிய ஓய்வூதிய முறையை உருவாக்குதல், பதவி உயர்வுகளுக்கான வரையறைகளை நீக்குதல், சம்பள உயர்வுகளில் காணப்படும் வேறுபாடுகளை நீக்குதல், ஆட்சேர்ப்பு நடைமுறைகள் போன்ற கோரிக்கைகளு க்கு இது வரையில் சரியான தீர்வு வழங்கப்படவில்லை. இக் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரியே இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.
மேற்படி எமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு வழங்காவிடின் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சம்மேளனம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போரா ட்டத்தில் ஈடுபடும்.
அனைத்துப் பல்கலைக்கழகஊழியர் சம்மேளனம் உயர் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோருடன் கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லையெனவும் அவர் கூறினார்.
அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் திகதியும் மற்றும் ஜனவரி மாதம் 25ஆம் திகதியும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாக வும் அவர் மேலும் தெரிவித்தார்.