தேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புக்களும், ஆய்வறிக்கைகளும் வெளிவருவது ஒரு சாதாரண நடைமுறையாகும். ஆனால் எந்தவொரு ஆய்வறிக்கையினையும், கருத்துக் கணிப்புக்களையும் அண்ணளவாக ஆய்வு செய்யலாமே தவிர நூறுவீதம் துல்லியமாக கூறமுடியாது.
கடந்தகால வரலாற்றில் வெளியான எந்தவொரு ஆய்வறிக்கைகளும் தேர்தல் பெறுபேறுகளுடன் ஒத்துப்போனதில்லை. அதிகமான ஆய்வறிக்கைகள் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானதாகவே இருப்பது வழமையாகும். ஆனால் மக்களின் தீர்ப்புக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவாகவே இருந்துள்ளது.
தேர்தல் வந்தால் அரசியல்வாதிகளிடம் பணம் அறவிடுவதற்காக சிலர் பலவகையான உபாயங்களை மேற்கொள்வார்கள். அந்தவகையில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சக்திகளிடம் சென்று பணத்தினை பெற்றுக்கொண்டு ஆய்வு செய்கிறோம் என்ற போர்வையில் பணம் வழங்கியவர்களுக்கு சார்பாக ஆய்வறிக்கைகளை வெளியிடுவார்கள்.
இவ்வாறு அறிக்கை வெளியிடுவதன்மூலம் தளம்பல் நிலையில் உள்ள வாக்காளர்களை கவர முடியும் என்பது பணம் வழங்குகின்ற அரசியல் வாதிகளின் கணிப்பாகும்.
அதேநேரம் குறித்த அரசியல் கட்சிக்கு சார்பாக ஆய்வறிக்கைகளை வெளியிடுவதாக கூறி பணம் சம்பாதிக்கமுடியும் என்பது ஆய்வாளர்களின் சிந்தனையாகும்.
இங்கே நடுநிலையாக ஆய்வு செய்கின்றவர்களின் பொதுப்படையான ஆய்வினை நாங்கள் குறை கூற முடியாது. அவ்வாறு பொதுப்படையாக ஆய்வு செய்கின்றவர்களின் அறிக்கையானது செல்வாக்கில்லாத கட்சி ஒன்றுக்கு அதிகம் ஆசனம் கிடைக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் இருக்காது.
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கின்ற நிலையில், மக்கள் மனதில் மாற்றங்கள் ஏற்பட அதிகம் வாய்ப்புக்கள் உள்ளது. மதில் மேல் பூனையாக இருக்கின்ற வாக்காளர்களும், வாழ்வாதார உதவியினை எதிர்பார்த்து வாக்களிக்கின்றவர்களும் இறுதி நேரத்தில்தான் எந்த கட்சிக்கு அல்லது எந்த சின்னத்துக்கு வாக்களிப்பது என்று தீர்மானிப்பார்கள்.
எனவே ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், BBC, CNN என எந்த நிறுவனம் ஆய்வறிக்கையினை துல்லியமாக வெளியிடுகின்றோம் என்று அறிக்கை வெளியிட்டாலும், அதில் எந்தவித உண்மையும் இல்லை. மாறாக தாங்கள் பணம் பெற்றுக்கொண்ட கட்சிக்கு சார்பான நிலைமையை ஏற்படுத்துவதற்காக மக்களை குழப்புகின்ற ஓர் தந்திரோபாயமாகும்.
முகம்மத் இக்பால்