அஹமட், ரி.எம் இம்தியாஸ்
அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு எதிராக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் தமது வீதியினை சேதப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் சூழலை மாசடையச் செய்து, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்தியுள்ளதாகவும், குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.
வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனை பிராந்திய அலுவலகத்தினர், கொங்றீட் வீதியாகவுள்ள அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை காபட் வீதியாக மாற்றப் போவதாகக் கூறி, கடந்த வருடம் செப்டம்பர் மாதம், கொந்தராத்துக்காரர் மூலம் ஆரம்ப வேலைகளை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் குறித்த வீதியின் இரண்டு பகுதிகளையும் தோண்டி, அதனை – புழுதி படிந்த சிறு கற்களைக் கொண்டு நிரப்பியதோடு, அந்த வீதியின் இரண்டு இடங்களில் கொத்தும் குறையுமாக வடிகான்களையும் அமைத்தனர்.
மேற்படி வடிகான்களை நிர்மாணிக்கும் போது, அதனுள் தொலைபேசிக் கம்பமொன்று இருக்கத்தக்கதாகவே, நிர்மாணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில், குறித்த வீதி புனர் நிர்மாண வேலைகள் – பல மாதங்களாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் கல்முனை அலுவலக நிறைவேற்று பொறியியலாளர் மற்றும் மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட பல அதிகாரிகளுடன் – பொதுமக்கள் தொடர்பு கொண்டு, வேலைகளை நிறைவு செய்யுமாறு கோரியபோதும், அது தொடர்பில் அவர்கள் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரைகுறை வேலையுடன் கைவிடப்பட்டுள்ள மேற்படி வீதியில், கடுமையான புழுதி ஏற்படுவதால், அப்பகுதியிலுள்ள குழந்தைகள் உட்பட பொதுமக்கள் சுவாசப் பிரச்சினைக்கும் பல்வேறு நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
மேலும், அங்குள்ள வீடுகளிலும் கடுமையாக புழுதி படிவதாகவும் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட இந்த வீதியில் பாடசாலை, பள்ளிவாசல், மத்தரசாக்கள் மற்றும் வாசிகசாலை ஆகிய முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே, மேற்படி அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய வீதியினை, உடனடியாக வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினர் – காபட் வீதியாக அமைத்துத் தருவதோடு, வீதி வேலை இடைநிறுத்தப்பட்ட காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளுக்கும், அத்திணைக்களத்தினர் நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும், குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, தற்போது மழை பெற்று வருதால், இந்த வீதியின் பல்வேறு இடங்களிலுமுள்ள பள்ளங்களில் நீர் தேங்குவதால், விபத்துக்கள் ஏற்படலாம் எனவும் அஞ்சப்படுகிறது.