Top News

மு.கா டயஸ்போராவின் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயல்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டும், காழ்ப்புணர்ச்சியும்.



மு.கா டயஸ்போராவின் நிகழ்ச்சி நிரலின்கீழ் செயல்படுவதாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டும், காழ்ப்புணர்ச்சியும்.
ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்களை டயஸ்போராக்கள் என்று அழைக்கின்றோம். இவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப முஸ்லிம் காங்கிரசின் தலைமை செயல்பட்டு வருவதாக சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள். 

டயஸ்போராக்களின் கட்டுப்பாட்டின்கீழ் முஸ்லிம் காங்கிரஸ் செயல்படுவதென்றால் மு.கா மூலமாக அவர்கள் எதனை அடைந்தார்கள் ?

 இவர்களுக்கு நல்லாட்சியில் அப்படி என்னதான் அதிகாரம் உள்ளது ?

அல்லது இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த அரசியல் உரிமைகள் என்ன ?

முஸ்லிம் தலைமை இவர்களுக்காக எதனை விட்டுக்கொடுத்தது ?   

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது த.தே கூட்டமைப்பும், மு.கா வும் மகிந்தவை விட்டு வெளியேறிய பின்பு “சம்பந்தன் தமிழீழத்தையும், ஹக்கீம் கிழக்கிஸ்தானையும் கோருகின்றார்கள். நான் ஜனாதிபதி பதவியை அடையவேண்டும் என்பதற்காக நாட்டை பிரிக்க முடியாது” என்று தெற்கிலே சிங்கள மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ச பிரச்சாரத்தினை மேற்கொண்டிருந்தார்.

ரவுப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்பது மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரம் மூலமாக அறிந்துகொள்ள முடிந்தது.   

அந்த தேர்தலில் ராஜபக்ச தோல்வி அடைந்ததன்பின்பு தமிழர்களுக்கும் சிங்கள அரசாங்கத்துக்கும் இடையில் இருந்துவந்த பகைமை உணர்வுகளில் சிறுது மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.

விடுதலை போராட்டத்தினை அழித்தொழித்து தமிழ் மக்களை கொலைசெய்த மகிந்தவினை வீட்டுக்கு அனுப்பி விட்டோம் என்ற திருப்தி டயஸ்போராக்களுக்கு ஏற்பட்டதுடன் அவர்களுக்கு இங்கிருந்த சில தடைகள் நீக்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்துடன் டயஸ்போராக்கள் எவ்வளவுதான் உறவுகளை கொண்டுள்ளதாக கூறப்பட்டாலும், தமிழர்களின் அடிப்படை பிரச்சினையான வடக்கில் படையினர்களிடமிருந்து அவர்களின் காணிகளை முற்றாக விடுவிக்கவோ, நீண்டகாலமாக விசாரணையின்றி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்யவோ, யுத்த குற்றம் பற்றிய சுதந்திர விசாரணையை ஏற்படுத்தவோ இந்த டயஸ்போராக்களினால் முடியவில்லை.

விடயம் அப்படி இருக்கும்போது டயஸ்போராக்களினால் முஸ்லிம் காங்கிரசையும் அதன் தலைமையும் எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

நாங்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். அதாவது எமது நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தெற்கிலே உள்ள சிங்கள இனவாதிகளையும், பௌத்த பீடங்களையும் மீறி சிறுபான்மையினர்களான தமிழர்களும், முஸ்லிம்களும் எந்தவித நன்மைகளையும் அடைந்திவிட போவதில்லை.

அரசாங்கத்தில் மு.கா பங்காளியாக இருந்தும், முஸ்லிம் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு சிங்கள இனவாதிகளை மீறி இன்னமும் நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்ற நிலையில், டயஸ்போராக்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்க முடியும்? 

எனவே முஸ்லிம் மக்களின் அதிக செல்வாக்கினை கொண்ட மு.கா மீதும் அதன் தலைவர் ரவுப் ஹக்கீம் மீதும் வழமைபோன்று முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டானது அரசியல் நோக்கங்களை கொண்டதாகும். இது தலைவர் மீது கொண்டுள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படுகின்ற பிரச்சாரமே தவிர வேறு ஒன்றுமில்லை. .

முகம்மத் இக்பால் 
சாய்ந்தமருது 

Previous Post Next Post