நடக்கப்போகின்ற மாநகரசபை தேர்தலில் மு.காங்கிரஸ் பாரிய பின்னடைவை சந்தித்துவருகின்றது என்பது நடுநிலையாக சிந்திக்கும் எவருக்கும் தெரிந்த விடயம்தான்.
அஷ்ரப்பின் பிறந்த ஊரான கல்முனை மாநகரத்தில் மு.காங்கிரஸ் தோல்வியடையுமாக இருந்தால் எதிர்காலத்தில் அந்த தோல்வி மு.காங்கிரசை மட்டுமல்ல அதன் தலைமைத்துவத்தையும் பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
இந்த நிலையில்தான் 90% மு.காங்கிரசிக்கு வாக்களித்த மக்கள் இன்று ஏதோவொரு காரணத்தினால் மு.காங்கிரசை எதிர்த்து வாக்களிக்க ஒன்றுபட்டுள்ளார்கள்.இந்த விடயம் மு.காங்கிரசிக்கு பலத்த சோதனையாக அமைந்துள்ளது எனலாம்.
இதன் காரணமாகவே இந்த தேர்தலில் மு.காங்கிரஸ் இயன்றளவு வெற்றியடைய முயற்ச்சிப்பது அது முடியாது விட்டால் தேர்தலை எந்த வகையிலாவது நிறுத்துவது என்ற திட்டத்தை வகுத்து செயல்படுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.
இந்த வகையில்தான் நாளை சாய்ந்தமருதில் பல ஊர்களிலும் இருந்து அவர்களின் ஆதரவாளர்களை கொண்டுவந்து கூட்டம் நடத்தப்போகின்றார்கள்.இந்த கூட்டத்தை ஏதோ ஒருவகையில் குழப்புவதற்கு சாய்ந்தமருது மக்கள் முயற்சித்தால் அது ஏதோ ஒருவகையில் பெரிய குழப்பமாக வந்து முடியலாம்.ஒருவேளை உயிர்ச்சேதங்களும் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் தேர்தல் நிறுத்தப்படுவதோடு, சாய்ந்தமருதின் முக்கியஸ்தர்கள் பலரும் கைதும் செய்யப்படலாம். இந்த நிலை ஏற்பட்டால் மு.காங்கிரஸ் விரும்பிய விடயம் அங்கே நிறைவேறப்போகின்றது.
அதே நேரம் இந்தக் கூட்டம் சாய்ந்தமருது மக்களினால் குழப்பப்படாது விட்டாலும் முகா ஆதரவாளர்களே திட்டமிட்டு கூட்டத்தை குழப்பக்கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு.அதன் மூலம் பாதிக்கப்படும் வேறு ஊரைச்சேர்ந்த மக்கள் சாய்ந்தமருது மக்களின் மேல் பழியைப்போடுவது மட்டுமல்ல,ஒருவகையான துவேசமான வார்த்தைகளை பாவித்து மற்ற ஊர்மக்களையும் தூண்டி, நீங்களும் மு.காங்கிரசின் பக்கம் ஒன்றுபடுங்கள் என்று கூற முற்படலாம்.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள் என்று கூறுவதுபோன்றும், அல்லது ஆக்குவது இல்லையென்றால் அழிப்பது என்ற கோட்பாட்டைப்போன்று இவர்கள் செயல்படப் போகின்றார்கள். இது பல பின் விளைவுகளைக் கொண்டுவரலாம்.
ஆகவே மனதளவில் ஒன்றுபட்டுள்ள சாய்ந்தமருது மக்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக நடந்து கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.
அவர்களுக்கு கூட்டம் நடத்துவதற்கு பூரண உரிமையுண்டு அவர்கள் அவர்களின் கருத்தைக் கூறுவதனால் சாய்ந்தமருது மக்களுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.
அதேநேரம் மு.காங்கிரஸ் அடையப்போகும் லாபம் என்னவென்றால் சாய்ந்தமருதில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளோம் பார்த்தீர்களா? என்று காட்டுவது மட்டுமேயாகும்.
அந்தக்கூட்டத்தில் வேறு ஊர்மக்கள்தான் கலந்து கொண்டார்கள் என்பது வெளியேயிருந்து பார்க்கும் மக்களுக்கு புரியாது. அதனால் மற்ற மக்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பதே அவர்களின் நோக்கமாகும்.
இப்படியான பல திட்டங்களுடன் களமிறங்கும் மு.காங்கிரசின் திட்டத்திற்கு சாய்ந்தமருது மக்கள் பழியாகக்கூடாது. இதனை அந்த ஊரின் முக்கியஸ்தர்கள் கவணத்தில் எடுத்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தவேண்டும்.இல்லாது விட்டால் பாரிய பின்விளைவுகளை சந்திக்கநேரிடும். இது மு.காங்கிரசிக்கு சார்பாகவே அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
ஆகவே நாளை நடக்கும் மு.காங்கிரஸ் கூட்டத்துக்கு சாய்ந்தமருது மக்கள் எந்த இடையூரையும் ஏற்படுத்தக்கூடாது, அதேநேரம் அவர்கள் உணர்ச்சியூட்டும் பேச்சிக்களை பேசினாலும் யாரும் அதனைக்கண்டு கொள்ளவும் கூடாது. உங்களின் நோக்கம் நிறைவேறவேண்டுமாக இருந்தால் நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிப்பதை தவிற வேறொரு வழியும் கிடையாது என்பதே எனது கருத்தாகும்.
சிந்தித்தால் உண்டு வாழ்வு...இல்லையேல் சாவுதான் என்பதுபோல். இந்த விடயத்தில் சாய்ந்தமருது மக்கள் சிந்தித்து செயல்பட்டால்தான் கல்முனை மக்கள் உள்ளூராட்சி தேர்தலை சந்திக்கமுடியும் இல்லாது விட்டால் தேர்தலை சந்திக்கமுடியாது. இதுதான் உண்மையும் சத்தியமும் கூட...!
புரிந்தால் சரிதான்..?
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை.