Top News

சாய்ந்தமருதில் சண்டித்தனம் காட்டிய சாணக்கியன்!



வன்முறைகளின் பக்கம் வழி காட்டுபவன் ஒரு போதும் தலைவனாக இருக்க மாட்டான். தன்னோடு உள்ளவர்களை மிகவும் நிதானமாக வழி காட்டுபவனே உண்மையான தலைவனாவான். சாய்ந்தமருதில் மு.காவுக்கு எதிராக சில வன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றமை மறுக்க முடியாத உண்மை. அந்த வன்முறைகளுக்கான அறைகூவலை சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாகம் முன்னின்று செய்யவில்லை. அவர்களுடைய வழி காட்டல்கள் அனைத்தும், நிதானமான திசையின் பக்கமே அமைந்துள்ளன. சிலர் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் வன்முறைகளின் பக்கம் செல்கின்றனர். சாய்ந்தமருது பள்ளிவாயல் தலைமை முன்னின்று வன்முறைகளை முன்னெடுத்தாலோ அல்லது  வன்முறைக்கு ஒரு சிறிய தூண்டுதலை வழங்கினாலோ, அதனை தாங்கும் வலிமை மு.காவினருக்கு இல்லை என்பது வெளிப்படையான விடயம்.

நேற்று இடம்பெற்ற மு.காவின் எழுச்சி மாநாட்டில் அமைச்சர் ஹக்கீமினுடைய பேச்சுக்கள் அனைத்தும் சண்டித்தனம் நிறைந்ததாகவே அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. ஒரு இடத்தில் தாங்கள் இவர்களை வன்முறைகளிலும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றோம் என கூறியிருந்தார். அவரது கட்சிக் காரர்கள் உயிரை கொடுக்கக் கூட தயாராகவுள்ளதாகவும் கூறியிருந்தார். அவரின் இந்த பேச்சு, அங்கிருந்த அவரது கட்சிக்காரர்களை உசுப்பேத்தி விட்டிருக்கும். அதே நேரம், சாய்ந்தமருது சுயேட்சை குழு மக்களை வெறுப்படையச் செய்து, வன்முறையின் பக்கம் செல்ல தூண்டி இருக்கும். எந்த வகையில் சிந்தித்தாலும் இவரது குறித்த கருத்து பாரிய வன்முறைகளை தோற்றுவிக்கக்கூடியது. இவர் தான், ஒரு தலைமைத்துவ பண்புள்ளவரா? இவரது பேச்சுக்கள் தனது கட்சிக்காரர்களை நிதானமாக செயற்படும் வகையில் அமைந்திருக்க வேண்டும். சுயேட்சை குழு ஆதரவாளர்களை சிந்திக்க வைத்திருக்க வேண்டும். மாறாக, வன்முறைகளை தூண்டும் வகையில் அல்ல.

மு.கா கட்சிக்காரர்கள் நன்கு சிந்திக்க வேண்டும். இந்த உசுப்பேத்தும் பேச்சுக்கள் மூலம் பாதிக்கப்படப் போவது யார்?  அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு படையினர், யாரையும் அமைச்சர் ஹக்கீமின் நிழலை கூட நெருங்க விட்டிருக்கமாட்டார்கள். பிரச்சினை எழுகின்ற சந்தர்ப்பத்தில் கட்சிக்காரர்களை கூட, அமைச்சர் ஹக்கீமின் பாதுகாப்பு படையினர் நெருங்க விடமாட்டார்கள். அன்று அங்கு வருகை தந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் வெளியூர் மக்கள். அந்த மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டாவது, அமைச்சர் ஹக்கீம் தனது பேச்சை நிதானமான வகையில் அமைத்திருக்க வேண்டும். அது மாத்திரமல்ல, அங்கு சில பெண்கள் கூட வருகை தந்திருந்தார்கள். பெண்களையும் வைத்து கொண்டு. இன்னும் வன்முறைகளை தூண்டும் வகையில் பேச்சுக்களை அமைப்பது மிகவும் பாரதூரமானது. குறித்த இடத்தில் அமைச்சர் ஹக்கீமின் மனைவி, பிள்ளைகள் இருந்திருந்தால், இவ்வாறு பேசியிருப்பாரா?

மு.கா எழுச்சி மாநாடென்று பெரிதாக தம்பட்டம் அடித்தாலும், அங்கு மு.காவின் முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தந்திருக்கவில்லை. அதற்கு பாதுகாப்பு காரணங்கள் பிரதான அமைந்திருக்கும். மு.காவின் முக்கியஸ்தர்களே அஞ்சி வர மறுத்த இடத்தில் நின்று வன்முறைகளை தூண்டும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயமாகும். இந்த இடத்துக்கு பெண்களையும் அழைத்து வந்தமை எந்தளவு தவறானது. இதனை நன்கு சிந்திக்கும் ஆதரவாளர்களால் மாத்திரமே அறிந்து கொள்ள முடியும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்

சம்மாந்துறை.
Previous Post Next Post