பேருவளை நகர சபையை, எதிர்காலத்தில் பேருவளை மா நகர சபையாக மாற்றும் எந்தவிதத் திட்டங்களும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை என, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மையமாக வைத்து ஒரு குழுவினரால், இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இதில் எதுவித உண்மைகளுமில்லை எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தேர்தலை நோக்காகக் கொண்டு அல்லது வேறு காரணங்களுக்காக பொதுமக்களைத் திசை திருப்பும் இவ்வாறான தவறான கருத்துக்களைப் பரப்புவதை இயன்றளவு தவிர்ந்து கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது. இது தொடர்பிலான பிரகடனங்களோ அல்லது வர்த்தமானி அறிவித்தல்களோ இதுவரையில் வெளியிடப்படவில்லை.
பேருவளை நகர சபையை, மா நகர சபையாக மாற்றும் எண்ணமும் அரசாங்கத்திற்கு இல்லை. இது தொடர்பில் இதுவரை, எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மையான நிலைப்பாடாகும் என்றும் அமைச்சு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.
( ஐ. ஏ. காதிர் கான் )