Top News

நாங்கள் முஸ்லிம் இனவாதிகளையும் எதிர்க்கின்றோம் - அகில விராஜ்




மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சியில் இனங்களுக்கு இடையில் இனவாத தூண்டுதல்களை மேற்கொண்ட போது, ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே சகல இனங்களையும் சமமாக நடத்தியது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

குருணாகல், முகலங்யாய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச கடந்த காலத்தில் இனவாதத்தை பயன்படுத்திய தேர்தல்களில் வென்றார். தற்போதும் அதனையே செய்து வருகின்றனர்.

இனங்களுக்கு இடையில் இனவாதத்தை தூண்டிய கடந்த அரசாங்கத்தில் பல சிறுபான்மையின தலைவர்கள் அங்கம் வகித்தனர்.

முஸ்லிம் மக்கள் எப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியுடனேயே இருந்தனர். நாங்கள் பாகுபாடற்ற இனத்தவர்கள். எல்லோரையும் சமமாக நினைப்பவர்கள்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இனவாதம் தூண்டப்பட்டது. இனவாதம் மூலமே அவர் வென்றார். நாங்கள் இனவாதத்தை தூண்டாத காரணத்தினால் அது எமக்கு நஷ்டமாக இருந்திருக்கலாம்.

நாங்கள் பொதுபல சேனாவையும் எதிர்க்கின்றோம், முஸ்லிம் இனவாதிகளையும் எதிர்க்கின்றோம். மகிந்த ராஜபக்ச முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டும் போதும், முஸ்லிம் தலைவர்கள் அனைவரும் அவருடனேயே இருந்தனர்.

நாங்கள் முஸ்லிம் மக்களுடன் இருந்தோம். வெற்றி பெற்ற பின்னரே அந்த தலைவர்கள் அனைவரும் நல்லாட்சி அரசாங்கம் என்ற எமது பஸ்ஸில் ஏறினர் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post