அரசாங்கம் தேர்தல் தோல்வியை தவிர்த்துக்கொள்ளவே அலோசியஸை கைதுசெய்துள்ளது. அத்துடன் தேர்தலில் அடையும் தோல்வியுடன் அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோஷலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
தபால் மூல வாக்களிப்பில் அரசாங்கத்துக்கு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கிடைக்கப்பெறும் தகவல்களை கருத்திற்கொண்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது. அதன் பிரகாரமே மக்களின் கவனத்தை அரசாங்கத்தின் பக்கம் திசை திருப்பும் நோக்கத்தில் திடீரென மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் இவர்களை 2016ஆம் ஆண்டே கைதுசெய்திருக்கவேண்டும் என அரசாங்கத்தில் இருக்கும் இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவிக்கிறார். அப்படியாயின் இவர்கள் கைதுசெய்யப்படுவதை யார் தடுத்து வந்தார்கள். அத்துடன் பிணைமுறி தொடர்பான கோப்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதன்போது பிரதமரிடம் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இவற்றுக்கு பதிலளிக்காமல் பிரதமர் அறிக்கையை சட்டமா அதிபருக்கு கையளித்திருப்பதாக அன்று தெரிவித்தார். அறிக்கை கையளிக்கப்பட்டு இவ்வளவு காலமும் சட்டமா அதிபர் அதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுப்பதற்கு தவறினார் என்பதை பிரதமர் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.
மேலும் அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்து 3 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மக்களுக்கு எதனையும் செய்யவில்லை. இதனால் மக்கள் அரசாங்கத்தின் மீது விரக்தியடைந்துள்ளனர். மக்கள் தங்களின் வெறுப்பை தேர்தல் ஊடாக வெளிப்படுத்துவார்கள். தேர்தலில் அரசாங்கம் பாரியதொரு தோல்வியை அடைவது உறுதியாகும். தேர்தலில் மக்களின் ஆணையை மதித்து அரசாங்கம் இராஜினாமா செய்யவேண்டும்.
அத்துடன் இந்த தேர்தலில் அரசாங்கம் வீழ்த்தப்படாவிட்டால் மக்களின் வாழ்க்கையும் அரச வளங்களும் அழிந்துவிடும். அரசாங்கத்தின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு மக்கள் அனுமதி அளித்ததுபோன்றாகிவிடும். நாட்டின் ஏனைய அரச வளங்களையும் விற்பனைசெய்ய சந்தர்ப்பமாக இதனை பயன்படுத்துவார்கள். எனவே மக்கள் தங்கள் எதிர்காலத்தையும் நாட்டின் வளங்களையும் பாதுகாத்துக்கொள்ள இந்த தேர்தலுடன் அரசாங்கத்தை வீழ்த்த வேண்டும் என்றார்.