அம்பாறை மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் இன்று (25) நண்பகல் மின்னல் தாக்குதல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மரணமடைந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 34 வயது எம்.ஐ. தாஹிர் எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டவர், மஜீட்புரத்தை சேர்ந்த எஸ்.எல். இம்ஜாட் (28) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடயந்தலாவ வயல் பிரதேசத்தில், மேய்ச்சலுக்காக சென்ற கால்நடைகளை பார்க்கச் சென்ற குறித்த இருவரில் ஒருவர் வயல்வெளியில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, கையடக்க தொலைபேசியில் பேசியவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். அவருக்கு அருகில் நின்ற 28 வயதான இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட வரட்சிக்கு பின்னர் நேற்று (24) தொடக்கம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் இடி, மின்னல் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.