உள்ளூராட்சித் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து விட்டு வாக்களிக்காதவர்களிடம், அதற்கான செலவுத் தொகையை அறவீடு செய்வது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது.
கொழும்பில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய,
“எமது மதிப்பீடுகளின் படி, அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்து அதற்கு தகைமை பெற்ற 4000 வாக்காளர்கள் இன்னமும் வாக்களிக்கவில்லை.
இவர்களில், 1500 தொடக்கம் 2000 பேர் வரையில், நேற்றும் இன்றும் வாக்களிக்க அளிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, வாக்குகளை அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
பெரும்பாலும், ஆயுதப்படைகளைச் சேர்ந்தவர்கள் தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். வாக்களிக்காமல் இருப்பவர்கள், தற்போது வெளிநாட்டில் இருக்கலாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.
ஒவ்வொரு அஞ்சல் வாக்குகளுக்கும், அரசாங்கத்துக்கு 750 ரூபா வரை செலவாகிறது. எனவே அரச பணியாளர்கள் பொறுப்புடனும், முன்னுரிமை கொடுத்தும் வாக்களிக்க வேண்டும்.
அவர்கள் வாக்களிக்காவிட்டால், அதற்கு ஏற்படும் செலவை அறவிடுவதற்கான ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
எனவே, வாக்களிக்காத அரச பணியாளர்களிடம் விளக்கம் கோர தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.
அஞ்சல் வாக்குகள் ஏற்கனவே எண்ணி முடிக்கப்பட்டு விட்டதாக பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை. அஞ்சல் வாக்குகள் எம்மிடம் பத்திரமாக உள்ளன.
பெப்ரவரி 10ஆம் நாள் மாலை 4 மணிக்குப் பின்னர் தான் அவை எண்ணப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.