Top News

முசலி பிரதேச சபையையும் தமிழர்களிடம் ஒப்படைப்பதா..?



“ இக் கட்சி, மு.கா முசலி பிரதேச சபையின் ஆட்சியை தனித்து நின்று அமைப்பது என்ற தீர்க்கமான முடிவோடு திறமையான வேட்பாளர்களை களமிறக்கியுள்ள அதே நேரம், எங்களுக்கு ஆசனங்கள் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவோடு, ஆட்சியமைக்கும் போது கிட்டும் என்ற நம்பிக்கை உள்ளது – அமைச்சர் ஹக்கீம்  ”

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம் பிரதேச சபை முசலி பிரதேச சபையாகும். இந்த முசலி பிரதேச சபையை கைப்பற்ற, மு.கா அதீத பிரயத்தனங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில், மு.கா உள்ளூராட்சி மன்ற தேர்தல் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, முசலி பிரதேச சபையை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அது அவர்களுக்கு கை கூடாமல் போயிருந்தமை கடந்த கால விடயங்களாகும். அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தேர்தல் கேட்டிருந்தால், மிக கேவலமான தோல்வியை தழுவி இருப்பார்கள். அங்குள்ள முஸ்லிம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரோடு மிகக் கடுமையான வெறுப்பில் உள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியை நாடிச் சென்றதில் சில விடயங்கள் உள்ளன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில், மு.கா வன்னி மாவட்டத்தில் வெட்டுப்புள்ளியை கூட நெருங்க முடியாதளவு படு தோல்வியை சந்தித்திருந்தது. இது போன்றதொரு தோல்வியை மீண்டும் சந்திக்காமல் தவிர்ப்பது அவர்களது திட்டமாக இருக்கலாம். அது மாத்திரமன்றி, இன்று மு.காவினருக்கு சவாலாக அமைச்சர் றிஷாத் உள்ளார். முசலி பிரதேச சபையானது அமைச்சர் றிஷாதின் கோட்டையாகும். அதனை வீழ்த்தினால், அமைச்சர் றிஷாதை வீழ்த்தியதுக்கு ஈடாகும். அதற்கு எதனையும் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு மு.கா சென்றுவிட்டதை அறிந்துகொள்ளலாம். அமைச்சர் றிஷாதை வீழ்த்துவதற்காக, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு முஸ்லிம்கள் கைப்பற்றக்கூடிய பிரதேச சபையான முசலி பிரதேச சபையை தமிழர்களிடம் ஒப்படைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற முசலி பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில், மு.கா முசலி பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு மேலதிக ஆசனங்கள் தேவைப்பட்டால், தமிழ் தேசிய கூட்டமைப்பு நிச்சயம் உதவும் என அமைச்சர் ஹக்கீம் அடித்து கூறியுள்ளார் . மு.கா தனித்து ஆட்சியமைக்குமாக இருந்தால், அதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களின் கையில் அச் சபை இருக்கப் போகிறது. எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படுமாக இருந்தால், முதலில் முஸ்லிம்களின் கையை விட்டு, குறித்த சபை செல்லாத வகையிலேயே ஆட்சியமைத்தல் சிந்திக்கப்படல் வேண்டும். மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு பிரதேச சபையையும் தமிழர்களிடம் ஒப்படைப்பது எந்தவகையிலும் ஏற்கத்தகுந்ததல்ல.

ஏன் அமைச்சர் ஹக்கீமுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உதவ வேண்டும்? அப்படியான சபை நீடிக்கின்ற காலம் முழுவதும், அச் சபை தமிழர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும். சில வேளை, அரை ஆட்சிக்கால தவிசாளர் அல்லது பிரதி தவிசாளர் பதவிகள் கூட வழங்கப்படலாம். மு.காவினர் அப்படி ஏதேனும் பதவிகள் வழங்கப்படாது என கூறலாம். இந்த பதவிகள் வழங்கப்படுவதை விட, எதுவுமே வழங்கப்படாமல் இருப்பது தான் மிகவும் ஆபத்தானது. அப்படி ஏதும் வழங்கப்படாது போனால், இதற்கு பிரதி உபகாரமாக  மு.கா செய்யப்போவது என்ன? இதற்கு முஸ்லிம்களை அடகு வைத்த வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற மிக முக்கிய விடயங்களில், மு.காவானது த.தே.கூவுக்கு விட்டுக்கொடுப்புச் செய்யலாம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள சபையை கூட முஸ்லிம்களும், தமிழர்களும் இணைந்து ஆட்சி செய்கிறோம் என வடக்கு, கிழக்கு இணைப்புக்கான நியாயமாக தமிழர்கள் சர்வதேசத்திடம் எடுத்துச் செல்வார்கள். இந் நேரத்தில் இவ்வாறான நியாயங்களையே அவர்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர். அழகான நியாயம் தானே! தமிழர்கள் சிறிய மீனை போட்டு, பெரிய மீனை பிடிக்கப் பார்க்கின்றனர். 

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் சில சித்து விளையாட்டுக்களுக்கு, அமைச்சர் றிஷாத் உடன்பட்டுச் செல்பவரல்ல. இதுவே அமைச்சர் றிசாதுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் உள்ள முரண்பாடாகும். அமைச்சர் ஹக்கீமை பொறுத்த வரையில், அவர் மக்களுக்காக பெரிதும் முரண்பட விரும்பாதவர். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் நெருக்கமான தொடர்பை உடையவர். இவர்களின் நெருக்கத்துக்கான காரணம் யாவரும் அறிந்ததே! இதற்கு துணை போகின்ற மு.காவை முஸ்லிம்கள் தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.

இதனை இவ்விடத்தில் கூறுவது, மு.கா முசலி பிரதேச சபையை கைப்பற்றுவார்கள் என்ற நோக்கில் அல்ல. கடந்த பாராளுமன்றத் தேர்தல் போன்று, இம்முறையும் மு.காவின் நோக்கங்களை அறிந்து, முசலி பிரதேச சபையில் மு.காவுக்கு அளிக்கப்படும் வாக்குகள் மூலம், அம் மக்கள் ஒரு பலமான செய்தியை அமைச்சர் ஹக்கீமுக்கு சொல்ல வேண்டும் என்பதற்கேயாகும். முசலி பிரதேச சபையை கைப்பற்றுமளவு மு.காவுக்கு பலமில்லை. அமைச்சர் ஹக்கீம் தேர்தலுக்கு முன்பே, தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உதவியை நாடியிருப்பதானது அவருக்கே, தாங்கள் இத் தேர்தலில் ஆட்சியமைக்குளவு ஆசனங்களை பெறுவோம் என்றார் நம்பிக்கயின்மையை எடுத்துக் காட்டுகிறது. இம்முறை முசலி மக்கள் மு.காவுக்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாக்குகளும், முசலி பிரதேச சபையை தமிழர்களிடம் ஒப்படைப்பதற்கு ஈடாகும். முஸ்லிம் பிரதேச சபையை தமிழர்களிடம் ஒப்பதடைப்பதா, முசலி மக்களின் கையிலேயே உள்ளது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.
Previous Post Next Post