Top News

மாலைதீவில் நடைபெறும் குழப்பங்களின் பின்னணியில்! பரபரப்பு தகவல்கள்



மாலைதீவில் நடைபெறும் அரசியல் குழப்பம் இந்தியா-சீனா நடுவேயான பனிப்போராகவே பார்க்கப்படுகிறது.

மாலைதீவில் 12 எம்பிக்களின் தகுதி நீக்கத்தை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததுடன், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதால் பதவி பறிபோகும் பீதிக்கு உள்ளானார் அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன்.
இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த, 15 நாட்களுக்கு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் அப்துல்லா யாமீன். அரசு அலுவலகங்கள் அனைத்தும் இராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்களை கைது செய்யும் பணியில் இராணுவம் இறங்கியுள்ளது. முன்னாள் அதிபர் மவுமூன் அப்துல் கயூம் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

இன்று அதிகாலை மாலைதீவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் மற்றும் நீதிபதி அலி ஹமீது ஆகியோரும் கைது செய்யப்பட்டு அராஜகம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலைதீவின் முதல் அதிபர் முஹம்மது நஷீத், இராணுவ புரட்சியால், தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு 13 ஆண்டு சிறை காவலில் அடைக்கப்பட்டார்.

வெளிநாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து சிகிச்சைக்காக அவரை பிரிட்டன் நாட்டுக்கு அனுப்ப மாலைதீவு அரசு ஒப்புக்கொண்டது. பிரிட்டன் அரசால் அரசியல் தஞ்சம் அளிக்கப்பட்ட முஹம்மது நஷீத் தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்.

மாலைதீவில் நேற்றிரவு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட பிறகு அடுத்தடுத்து நடைபெற்று வரும் கைது நடவடிக்கைகளை கண்டு இலங்கையில் தங்கியுள்ள முதல் அதிபர் முஹம்மது நஷீத் டிவிட்டரில் ஒரு கோரிக்கை வெளியிட்டார்.

மாலைதீவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிபர் உள்ளிட்ட அரசியல் கைதிகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளை விடுவிக்க இராணுவ துணையுடன் ஒரு தூதுவரை இந்தியா அனுப்ப வேண்டும் என்று முஹம்மது நஷீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த அதிபர் தேர்தலில் தானும் போட்டியில் இருப்பேன் என அறிவித்துள்ளவர் இவர். இப்படி முஹம்மது நஷீத் வெளிப்படையாக கேட்டுக் கொண்ட பிறகும், இந்திய அரசு இன்னும் அதுகுறித்த முடிவை அறிவிக்கவில்லை.

சுமார் 4,00000 மக்கள் தொகையே கொண்டுள்ள மாலைதீவு, நூற்றாண்டுகளாக இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாகத்தான் இருந்து வந்தது. ஆனால் இதெல்லாம், 2012ல் முஹம்மது நஷீத் இராணுவ புரட்சியால் அகற்றப்படும் வரை மட்டும்தான்.

அதிபர் அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு சீனாவின் பக்கம் ஒரேயடியாக சரியத் தொடங்கியது. 2011 வரை தனது நாட்டு தூதரகத்தை கூட மாலைதீவில் திறக்காத சீனா இப்போது அந்த நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்துள்ளது.

நிதியை வாரி வழங்கி, இந்தியாவின் அண்டை நாட்டை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது சீனா. மாலைதீவில் மொத்த கடன் தொகையில் 70 சதவீதத்தை சீனா வழங்கியுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.
மாலைதீவில் பல்வேறு அடிப்படை கட்டுமான பணிகளையும் சீனா மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. இந்திய நிறுவனத்தின் வசமிருந்த மாலைதீவு இப்ராஹிம் நசீர் ஏர்போர்ட் பணிகள், அவசர கதியில் முறிக்கப்பட்டு சீன நிறுவனம் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை படித்து பார்க்க கூட எம்.பிக்களுக்கு நேரம் கொடுக்காமல் அவசரமாக நிறைவேற்றியது இதே அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசுதான்.

1000 பக்கங்கள் கொண்ட, அந்த ஒப்பந்தத்தில் என்னதான் உள்ளது என்பது இன்னும் மக்களுக்கோ, ஏன் எதிர்க்கட்சிகளுக்கோ கூட தெரிவிக்கப்படவில்லை.

பொருளாதார நிலை உள்ளிட்ட பல காரணிகள், சீனாவின் பிடியில் மாலைதீவை தள்ளிவிட்டன. மாலைதீவு அரசு ஆதரவு செய்தித்தாள் ஒன்று சமீபத்தில் சீனாவை தங்கள் நண்பன் என்றும் இந்தியாவை எதிரி என்றும் வெளிப்படையாகவே குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. எனவேதான் இது இந்தியா-சீனா மோதலின் ஒரு அங்கம் என வர்ணிக்கப்படுகிறது.
இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசு குத்தகைக்கு விட்டது.

இதேபோல மாலைதீவிலும் கால் தடம் பதிக்கிறது சீனா. எனவே இப்போது இந்தியா 'ரியாக்ட்' செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன்னாள் அதிபர் இந்தியாவின் உதவியை வாய் விட்டு கேட்ட இந்த சந்தர்ப்பத்தை அமெரிக்கா போன்ற ஒரு நாடாக இருந்தால் பயன்படுத்தி மாலைதீவுக்குள் நுழைந்திருக்கும். ஆனால் இந்தியா தங்குகிறது. ஏன்?

பிற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நேரு காலத்து வெளியுறவு கொள்கைதான் இதற்கான காரணம். ஒரு பக்கம் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் கை ஓங்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. ஆனால், மறுபக்கம், வெளியுறவு கொள்கை அதன் கைகளை கட்டிப்போடுகிறது. இது முரண்பட்ட செயலாகும்.

இலங்கையில் தமிழர்கள் மீதான அந்த நாட்டு இராணுவ நடவடிக்கையின்போது அப்போதைய மத்திய அரசும், நேரு காலத்து கொள்கையையே சுட்டிக் காட்டி சும்மா இருந்தது. இப்போது மாலைதீவுக்கும் அதே கொள்கைதான் இந்தியாவுக்கு தடைக்கல்லாக உள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்குவதையும், இந்தியாவுக்கு அது அச்சுறுத்தலாக மாறுவதையும் தடுக்க நமது கொல்லைப்புற தேசத்தின் விவகாரத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு உள்ளது.

அப்படி இந்தியா தலையிட்டால் காஷ்மீர் விவகாரத்தில் நாங்களும் தலையிடுவோம் என பாகிஸ்தானுடன், சீனாவும் முஷ்டியை முறுக்கும் என்பது இந்தியாவின் தயக்கத்திற்கு மற்றொரு காரணம் என்றாலும் கூட, வல்லரசு நாடுகளின் பட்டியலில் இடம் பிடிக்க போராடும் இந்தியாவுக்கு இதை சமாளிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

அதை இந்தியா உடனடியாக செய்து, தனது வல்லாண்மையை நிரூபிக்குமா என்று உலக நாடுகள் உற்று நோக்கியபடி உள்ளன.

Previous Post Next Post