எம்.வை.அமீர்-
நடந்து முடிந்துள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலினூடாக மக்கள், அரசுக்கும் ஏனைய மக்களுக்கும் சிறந்த செய்தி ஒன்றை கூறியுள்ளதாகவும் அந்த செய்தியை, தங்களது பொன்னான வாக்கினூடாக வெளிப்படுத்திய, மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாட்டை நேசிக்கின்ற அனைவரும், வரலாற்று நாயகன் மகிந்த ராஜபக்ச அவர்களின் தலைமையின் கீழ் ஒன்றுபடுமாறு அழைப்பு விடுப்பதாகவும் மகிந்த ராஜபக்ச அவர்களின் ஆலோசகரும் கிழக்குமாகாண இணைப்பாளரும் இன நல்லுறவுக்கான வேலைத்திட்டத்தின் தலைவரும் சமூக சிந்தனையாளருமான அஷ்செய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் என்ற அடிப்படையில், நாட்டுக்கு கெளரவமளித்தவர்களை மதிக்க வேண்டியது அவசியம் என்றும் அந்த வகையில் அல்லோல கல்லோலப்பட்டிருந்த நாட்டை சுபிட்சப்பாதைக்கு இட்டுச்சென்ற மகிந்த ராஜபக்ச அவர்களின் கரங்களை இன்னும் இன்னும் பலப்படுத்துவதனூடாகவே, நம் தாய்த்திரு நாட்டை இன்னும் இன்னும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச்செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்கள் ஒன்று பட்டுள்ள இன்றைய நிலையில் சிறு பான்மை மக்களும் அதனோடு இணைந்து வருவது மகிழ்ச்சியான விடயம் என்றும் இனவாதம், மதவாதம், மற்றும் பிரதேசவாதம் போன்றவை களையப்பட்டு ஒரே நாட்டுமக்கள் என்ற உணர்வுடன் ஒன்றிணையுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.
கடந்த கால கசப்பான சில அனுபவங்கள் எங்களுக்கு அநேக பாடங்களை கற்றுத்தந்தன என்றும் அவைகளை மறப்போம். வைராக்கியம் எங்களது ஒற்றுமையை குலைத்துவிடும். அது எங்களை தனிமைப்படுத்தியும் விடும். அதேபோன்று கட்சிகள் மதமும் அல்ல. தூரநோக்கே அவசியமான ஒன்று கணிப்பீடுகள்,தப்பான அபிப்பிராயங்கள் அனைத்தும் களைந்து ஒன்றுபடுவோம் என்றும் கேட்டுள்ள மௌலானா, அமோக வெற்றிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிப் பூக்களை காணிக்கையாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.