Top News

காத்தான்குடியில் கொட்டப்பட்டதாக கூறப்படும் வைத்தியசாலை கழிவுகள் அனு ஆயுதங்களை போன்று ஆபத்தானவை



மட்டக்களப்பு பயனியர் வைத்தியசாலையின் மிக ஆபத்தான மருத்துவக் கழிவுகள் காத்தான்குடி நகரசபையின் முன்னால் முதல்வர் அஸ்பர் அவர்களுடைய தலைமையில்  காத்தான்குடியில் கொட்டப்பட்டதாக ஒரு சாரர் குற்றம் சுமத்தும் அதேவேளை இல்லை, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படவில்லை, கடிதம் மட்டுமே கொடுக்கப்பட்டது என்று  இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் அவரது ஆதரவாளர்களும் இக்குற்றச்சாட்டை மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பாக மருத்துவத் துறையில் உள்ள எவரும் வெளிப்படையாக கருத்துத் தெரிவிக்காத நிலையில் மருத்துவக் கழிவுகள் தொடர்பாக மருத்துவத் துறையில் பணியாற்றுபவன் என்ற  ரீதியில் மக்கள் நலன் கருதி தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சில விடயங்களை இக்கட்டுரையினூடு பேச விளைகிறேன்.

மருத்துவக் கழிவுகள் என்றதும் சிரிஞ்கள், ஊசிகள் மற்றும் காயங்களை சுற்றிக் கட்டும் பஞ்சு, துணிகள் என்பவையே எமது நினைவுக்கு வருகிறது,
ஆனால் மருத்துவக் கழிவுகள் என்பது இன்று உலகை அச்சுறுத்தும் பாரிய பிரச்சினையாகும். அனு ஆயுதங்களைப் போன்று மிகப் பயங்கர ஆயுதமாக Biological Weapons உயிரியல் ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை நாம் அறிவோம். அதே போன்றுதான் முறையாக அகற்றப்படாத மருத்துவக் கழிவுகளும் ஒரு சமூகத்தையே முற்றாக அழிக்கக்கூடிய  இலகுவில் கட்டுப்படுத்த முடியாத பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடும்,

மருத்துவக் கழிவுகளில் மிக ஏராளமானவை உள்ளடக்கப்டுகின்ற போதிலும் சுருக்கம் கருதி தற்போது பேசுபொருளாக உள்ள பயனியர் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய கழிவுகளில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன்.

சிரிஞ்சுகள் / ஊசிகள்
பஞ்சுகள் / கோஸ்கள்
தொற்றுள்ள காயங்களை துப்பரவு செய்யும் பொருட்கள்,
பழுத்த காயங்களில் இருந்து அகற்றப்படும் சீழ்- Abscess drainage
பிரசவத்தின்போது வெளியேற்றப்படும் இரத்தம், placenta - மாக்கொடி, தொப்புள் கொடி I மென்சவ்வுகள்,
சீனி நோய் விபத்துகள் போன்றவற்றால் அகற்றப்படும் விரல்/கால் பகுதிகள்,
சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்படும் அழுகிய / தொற்றுள்ள உடல் பாகங்கள் (கர்ப்பப்பை, பித்தப்பை, குடல்வளரி, குடல் பகுதிகள், etc)
Shiglla, Salmonella போன்ற மிக ஆபத்தான வயிற்றுப்போக்கு உள்ள நோயாளியின் மலக்கழிவு -diapers,
அகற்றப்படும் கேன்ஸர் கட்டிகள்,
காலாவதியான மருந்துகள், 
கேன்ஸர் நோயாளிகளு க்கு வழங்கப்படும் Chemotherapy கழிவுகள் ( மிக மிக ஆபத்தானவை)
TB நோயாளிகள் உட்பட நோயாளிகளின் சளி, வாந்தி, என பட்டியல் நீண்டு செல்கிறது.
காத்தான்குடியில் எந்த ஒரு தனியார் வைத்தியசாலையும் இல்லை. சிறிய டிஸ்பென்ஸரிகள், செனலிங் சென்டர்கள் மற்றும் ஆய்வுகூடங்கள் என்பனவே காணப்படுகின்றன. இவற்றில் ஊசிகள் சிரிஞ்சுகள், பஞ்சுகள் போன்ற சிறிய அளவிலான கழிவுகளே வெளியேற்றப்படுகின்றன. இவையும் ஆபத்தானவையே என்பதால் இவையும் பாதுகாப்பாகவே அகற்றப்பட வேண்டும்,
இதனால் தான் கடந்த 2014 -2015 காலப்பகுதியில் MOH ன் உதவியோடு நகரசபை மூலமாக டிஸ்பன்சரி கழிவுகள் காத்தான்குடி வைத்தியசாலையில் உள்ள Incinerator ன் மூலம் பாதுகாப்பாக அழிக்கப்பட்டன, ஆனால் கடந்த இரண்டரை / மூன்று வருடங்களாக இது நிறுத்தப்பட்டிருப்பதனால் தமது கழிவுகளை தாமாகவே எரித்து விடு விடுகின்றனர். (சில வைத்தியர்களிடம் உறுதிப்படுத்திய தகவல்).
இப்போது பயனியர் வைத்தியசாலை கழிவு தொடர்பாக பார்த்தால், அவற்றை அகற்றுவது தொடர்பாக MOH இடம் எந்த ஆலோசனையும் கேட்கப்படவில்லை, அது தொடர்பாக அவர் எதையும் அறிந்திக்கவுமில்லை.

ஒரு தனியார் வைத்தியசாலை லைஸன்ஸ் பெறுவதற்கு அவர்களது கழிவுகள் முறையாக அகற்றப்படுவதை உறுதிப்படுத்தி Central environmental authority மூலம் அனுமதி பெற்று PDHS மூலமாக Private Health Services Regulatory Council அனுப்பப்பட்டு லைஸன்ஸ் பெறப்பட வேண்டும். 

இந்நிலையில் மிக ஏராளமான நோயாளிகளிடம் பணம் செலுத்தியே சிகிச்சை பெறும் பயனியர் வைத்தியசாலையில் முறையான கழிவகற்றல் பொறிமுறை இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். இதற்கு காத்தான்குடி நகரசபை பயனியர் வைத்தியசாலை (NPH) யின் மிக மிக ஆபத்தான கழிவுகளை பொறுப்பேற்பதாக கடிதம் வழங்கியது மிகப் பெரிய தவறாகும். ஏனெனில் முறையான கழிவகற்றல் பொறிமுறை இல்லாத NPHற்கு இப்படி ஒரு அனுமதிக் கடிதம் வழங்கினால் இக் கழிவுகளை காத்தான்குடியிலோ அல்லது வேறு பகுதிகளிலோ கொட்டித்தான் இருப்பார்கள், இது குறிப்பிட்ட பிரதேச மக்களுக்கு செய்கின்ற மாபெரும் அநியாயமாகும். 

ஏற்கனவே NPH கழிவுகள் திருப்பெருந்துறை வாவியோரம் ரகசியமாக கொட்டப்பட்டு மழை காலத்தில் இவை வெளிப்பட மக்கள் போராட்டங்களை நடத்தி இது நிறுத்தப்பட்டதாக (மட்டக்களப்பை சேர்ந்த முஸ்லிமல்லாத) வைத்தியர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.    அப்படியாயின் இக் கழிவுகள் ஒன்று காத்தான்குடியில் கொட்டப்பட்டிருக்க வேண்டும் அல்லது வேறு எங்காவது கொட்டப்பட்டிருக்க வேண்டும்.

 அப்படியாயின் அந்தப் பிரதேசம் எது? அப்பிரதேச மக்களுக்கு இப்படியொரு அநியாயத்தை காத்தான்குடி மக்கள் சார்பாக நமது நகரசபை  செய்தால் எப்படி அது நியாயமாகும் -

பற்றுச்சீட்டு மட்டுமே வழங்கப்படுகிறது, கழிவகற்றப்படுவதில்லை என முன்னால் தவிசாளர் கூறியது உண்மை என்றால் இந்த கழிவுகளை எங்கே கொட்டுவீர்கள் என தவிசாளர் NPH இடம் கேட்டாரா? அப்படியாயின் அது எந்த இடம்? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

அடுத்து Central environmental authority ன் அனுமதி பெறுவதற்காகவே தவிசாளர் பற்றுச்சீட்டை வழங்கினார் என்றால் அதற்காக வழங்கப்பட்ட கடிதம் எங்கே?
இல்லை பற்றுச்சீட்டை மட்டுமே வைத்து அனுமதி வழங்கப்பட்டது என்றால் அப்பற்றுச்சீட்டில் (ஊழல் மாநாட்டில் காண்பிக்கப்பட்டது) கழிவகற்றப்படுவதில்லை என கையினால் எழுதப்பட்டிருந்தால் அகற்றப்படாத கழிவுக்காக எப்படி சுற்றாடல் அதிகார சபை அனுமதி வழங்குமா? (நிச்சயமாக வழங்காது),  அல்லது பற்றுச்சீட்டில் காண்பிக்கப்பட்ட கையெழுத்து அரசியல் இலாபங்களுக்காக பின்னர் எழுதப்பட்டதா? அப்படியானால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஊழல் மாநாட்டில் காண்பித்தவை மக்களை ஏமாற்றி அரசியல் இலாபம் தேடும் பொய்களா? என கேள்விப்பட்டியல் நீண்டு செல்கிறது. 

மேலும் NPH கழிவுகள் முச்சக்கர வண்டி மூலம் அகற்றப்படுகின்றன என முஸ்லிமல்லாத பிரபல வைத்தியர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.  

ஊசிகள், சிரிஞ்சுகளின் தீங்குகளை நான் அறிவேன் எனவும் எய்ட்ஸ் நோய் பற்றியும் கூறிய முன்னால் தவிசாளர் வைத்தியசாலையின் தொற்றுக் கழிவுகளின் பாரதூரத்தை நிச்சயம் அறிந்திருப்பார். அறிந்திருத்தும் தனது ஊரிலேயே இக் கழிவுகளை கொட்டுவதற்கு அவர் அனுமதி அளித்தார் என்றால் இதன் பின்புலம் என்ன? என்பது பற்றி தேர்தலில் யார் வென்றாலும் தோற்றாலும் அரசியல் இலாபங்களுக்கப்பால் மக்களும் சமூக நிறுவனங்களும் சட்ட நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படல் வேண்டும். 

அல்லது இராஜாங்க அமைச்சர், முன்னால் தவிசாளர் போன்றவர்கள் (அல்லாஹ் மீது சத்தியமிட்டு) சொல்வதைப் போல் குப்பை கொட்டப்படவில்லையென்றால் அபாண்டமாக குற்றம் சுமத்தியவர்களுக்கெதிராக யாராக இருந்தாலும் உரிய சட்ட நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும், 

ஆனால் இதுவரை நான் சேகரித்த தகவல்களின் அடிப்படையில் மோசமான மருத்துவக் கழிவுகள் காத்தான்குடியில் கொட்டப்பட்டமைக்கு சார்பாக வே உள்ளன. அகழ்வாய்வு செய்வதன் மூலம் இதனை கண்டறிய முடியும்.

இறுதியாக மக்களாகிய எம் மீது ஒரு பொறுப்பிருக்கிறது -

எமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஓரங்கட்டி விட்டு இரண்டு ரக்அத் தொழுதுவிட்டு இறைவனிடம் கையேந்தி யா அல்லாஹ், அனைத்தையும் அறிந்தவன் நீ , மருத்துவக் கழிவுகளை இவ்வூரில் யாராவது கொட்டி எமக்கும் எமது சந்ததிக்கும் மிகப் பெரும் அநீதி இழைத்தவர்கள் யாராயினும் அவர்களை நீ அழித்து விடுவாயாக, இப்படியானவர்களிடம் எங்களது ஆட்சிப் பொறுப்பை கொடுத்து விடாதே என்று பிரார்த்திந்து விட்டு வாக்களியுங்கள், அநியாயம் இழைக்கப்பட்டவனின் துஆ நிச்சயம் அங்கீகரிக்கப்படும், 
(இந்த துஆ அஸ்பர் அவர்களையோ, இராஜாங்க அமைச்சரை யோ/ அவர்களை சார்ந்தவர்களையோ ஒரு போதும் பாதிக்காது - அவர்கள் சத்தியமிட்டது உண்மையானால் )

Dr. MSM . நுஸைர்
மட்/ போதனா வைத்தியசாலை .
Previous Post Next Post